ஆதவன் 🖋️ 669 ⛪ நவம்பர் 27, 2022 ஞாயிற்றுக்கிழமை
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 )
பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்கு அருளுவதற்குக் காரணம் அலறி கூச்சலிடுவதற்கோ, "லாப லாபா" என்று உளறுவதற்கோ அல்ல. நாம் பெலனடைந்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழவே பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழங்கப்பட்டுள்ளார்.
இன்றைய வசனத்தில் எருசலேம் என்பது நாம் இருக்குமிடத்தை அதாவது நமது ஊர் அல்லது வீட்டைக் குறிக்கின்றது, யூதேயா என்பது நாம்மைச் சுற்றியுள்ள பகுதிகள், சமாரியா என்பது பிற இன மக்களைக்குறிக்கின்றது. அதாவது நமது சாட்சியுள்ள வாழ்க்கை நமது வீட்டிலும், ஊரிலும், பக்கத்து ஊர்களிலும், பிறஇன மக்களிடமும் விளங்கி இந்த உலகம் முழுவதிலும் பிரதிபலிக்கவேண்டும். இதற்காகவே பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகின்றார்.
சரி, எப்படி பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தகுதிப்படுத்துகின்றார்? "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து. அதாவது ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருப்பது பாவமற்ற அவரது வாழ்க்கை, அவரது நீதிச் செயல்கள் மூலம் தெரியவரும். நித்திய நியாயத் தீர்பைக் குறித்து அவர் கண்டித்து உணர்த்துவதால் நீதியாக வாழ ஒருவரைத் தகுதிப்படுத்தும்.
மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்."( யோவான் 16 : 13 )
அன்பானவர்களே, பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெற்றுளேன் என்று கூறிக்கொள்ளும் பல ஊழியர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் வேதத்துக்கு ஏற்புடையதையல்ல. தங்களை வல்லமையுள்ளவர்கள் என்று மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவும், அதிக காணிக்கைகள் வசூலிக்கவும் அவர்கள் செய்யும் தந்திரங்களே இவை.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவன் தாழ்ச்சியுள்ளவனாக இருப்பான். ஆவியின் கனிகள் நிறைந்தவனாக இருப்பான். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23 )
அன்பானவர்களே, உண்மையான ஆர்வத்துடன், தேவனுக்குச் சாட்சியான வாழ்க்கை வாழவேண்டும் எனும் ஆசையுடன் ஜெபிக்கும்போது நமக்கு வல்லமையின் ஆவியானவரின் துணை கிடைக்கும். அப்படியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் பிரபல ஊழியர்களைப் பார்த்து அவர்களைப்போல வரவேண்டுமென்று நாம் பரிசுத்த ஆவியானவரை வாஞ்த்தோமானால் கிறிஸ்துவைவிட்டு அந்நியப்பட்டுப் போய்விடுவோம்.
ஆண்டவரே நான் ஆவிக்குரிய வாழ்வில் பெலனடையவும் உமக்குச் சாட்சியான வாழ்க்கை வாழவும் எனக்கு உதவிட உமது பரிசுத்த ஆவியானவரைத் தந்து என்னை வழிநடத்தும் என்று வேண்டுதல் செய்யும்போது நமது வேண்டுதலின்மேல் தேவன் பிரியுமுள்ளவராக இருப்பார்.
மெய்யான அபிஷேகம், நம்மைக் கிறிஸ்துவுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ உதவிடும்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment