Saturday, June 17, 2017

ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு?

ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு?

- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  
தேவன் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் எனும் மூன்று கூறுள்ளவனாகவே படைத்தார். இவற்றில் சரீரம் மட்டுமே நாம் கண்களால் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சரீரம் தேவனது சித்தத்தை நாம் உலகினில் செயல்படுத்த உதவும் கருவியாகவும் உள்ளது. இந்த உலகினில் தேவன் ஒரு மனிதனுக்குள் இருந்து செயல்படுவது  மனிதர்களது சரீரத்தின் வழியாகத்தான். 

எனவேதான் வேதம், "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது என்றும் நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் - 6;19) என்று கூறுகிறது.

ஆவி என்பது உயிர்.  ஆத்துமா என்பது   மனிதனது உள்ளான மனத்துடன்  சம்பந்தப்பட்டது . மனிதனது சிந்தனை, அறிவு, ஆசை, மகிழ்ச்சி, கவலை, என்பதுபோன்றவைகள் ஆத்துமா சம்பந்தமானவை. இன்று கிறிஸ்துவை கடவுளாக, இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் பலரும் பெரும்பாலும் ஆத்தும அளவில் அதாவது மன அளவில்  அவரை ஏற்றுக்கொண்டவர்களே.

இப்படி மன அளவில் கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆராதனையிலும்  வழிபாடுகளிலும் கடவுளுக்கு என்று செய்யும் பல செயல்கள் மூலமும் தங்களைக் கிறிஸ்தவர்கள் எனக் காட்டிக்கொள்வதுடன் தங்களை ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.  

இத்தகைய ஆத்தும கிறிஸ்தவர்கள் தேவனை அறியும் நோக்கில் வேதம் வாசிக்கலாம், ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம், ஆலயத்துக்காக, சுவிசேஷ ஊழியத்துக்காக என்று பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கலாம் ஏன் பிரபல ஊழியக்கரராகக் கூட மாறலாம்.

ஆத்தும கிறிஸ்தவ ஊழியர்களும் இதுபோல பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். தங்களது மன எண்ணத்தின்படியே இவர்களது செயல்பாடுகள் இருக்கும். 'தங்கச் சாவி திட்டம்', குழந்தைகளுக்காக ஜெபிக்க என தனித் திட்டங்கள், பல்வேறு காணிக்கை யுக்திகள், ஜெப மலைகள், ஜெப கோபுரங்கள் இன்ன பிற  திட்டங்கள் போன்றவை இப்படி ஆத்தும அல்லது தங்களது மன அடிப்படையில் ஊழியம் செய்யும் ஊழியர்களால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். இவைகள் அந்த ஊழியர்களின் மனதின் வெளிப்பாடு. ஒரு மனிதனுடைய செயல்பாடுகள் அவன் ஆவிக்குரியவனா இல்லையா என்பதை வெளிக்காட்டிவிடும். ஒரு ஊழியர் அறிவிக்கும் திட்டம் வேதத்துக்கு முரணாக இருந்தால் அந்த ஊழியன் அறிவிக்கும் திட்டம் மன அளவில் அவன் சிந்தித்து அறிமுகப்படுத்திய திட்டம் என்பதை வெளிப்படுத்திவிடும்.     

ஆனால் இத்தகைய ஆத்தும கிறிஸ்தவ வாழ்வு தேவன் விரும்பும் வாழ்க்கையல்ல. இது உலகினில் உள்ள வெவ்வேறு மத பிரிவினர் தங்கள் கடவுளை நம்புவதும் வழிபடுவதும் போலத்தான். அவர்கள் தங்கள் மத நூலைப் படிப்பதுபோல ஒரு ஆத்தும கிறிஸ்தவன் வேதாகமத்தைப் படிக்கின்றான்,  அவர்கள் தங்கள் ஆலயத்துக்கு பணிவிடைச் செய்வதுபோல ஒரு ஆத்தும கிறிஸ்தவனும் செய்கிறான். அவ்வளவே. இன்று ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல சபைகளும் சபைப் போதகர்களும் உண்மையில் ஆத்தும கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால் தேவன் நாம் இப்படி ஒரு மனம் சார்ந்த கிறிஸ்தவனாக இருப்பதை விரும்பவில்லை. வெறும் ஆராதனைக் கிறிஸ்தவனாக இருப்பதை  விரும்பவில்லை. தேவன் நாம் அவரது ஆவியில் நடத்தப்படும் வாழ்க்கையையே விரும்புகின்றார். இப்படி ஆவியால் நடத்தப்படுபவர்களே தேவனது புதல்வர்கள். வேதம் கூறுகிறது, "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." (ரோமர் - 8:14)

ஆவியால் நடத்தப்படுகின்ற வாழ்வு வித்தியாசமானது. அது முற்றிலும் தேவனால் நடத்தப்படுவது. தங்களது ஊழியத்தின் எதிர்காலத்தை கணக்கிட்டு சொத்துச் சேர்ப்பதோ, காணிக்கை யுக்திகளைக் கையாள்வதோ  ஆவியினால் நடத்தப்படு பவர்களிடம் இருக்காது. தேவன் சொல்வதை மட்டும் அவர்கள் செய்வார்கள். வேதத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்கள் இப்படி ஆவியினால் நடத்தப்பட்டுதான் ஊழியம் செய்தனர். நாளை எங்கு செல்வது? என்ன செய்வது? என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. தேவனது பரிசுத்த ஆவி நடத்தும் விதமாக அவர்கள் நடப்பார்கள்.

அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகம் முழுவதும் இந்த அனுபவத்தைக் காணலாம். பேதுருவுக்கு எனத் தனி திட்டம் எதுவும் இருந்ததில்லை, பவுலுக்கும் அப்படியே. அவர்கள் தேவனுடைய ஆவி கூறியபடியே செயல்பட்டனர்.

ஆவியால் நடத்தப்படும் அனுபவம் ஆவியால் பிறந்த ஒரு மனிதனிடம் மட்டுமே இருக்கும். ஆவியால் பிறந்த மனிதன் எப்படி இருப்பான் என்பது குறித்து  இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார், " காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனால் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும் இன்ன இடத்துக்குப் போகிறதென்றும்  உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்"  (யோவான் - 3:8)

ஆவிக்குரிய வாழ்வும் ஆசரிப்புக் கூடாரமும் 

ஆதி காலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்ய ஆசாரியர்கள் இருந்தனர். ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆசாரியரே. நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய புண்ணியங்களை அறிவிக்கத் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்கள் என்கிறது.

"நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாகவும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு - 2;9)

பழைய ஏற்பாட்டுக் கால ஆசரிப்புக் கூடாரம் பற்றி நாம் பார்ப்போமானால், "ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது. அதன் முந்தின பாகத்தில் குத்து விளக்கும் மேஜையும் தேவ சமூகத்தப்பங்களும் இருந்தன. அது பரிசுத்த ஸ்தலம் எனப்படும். இரண்டாம் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலம் எனப்பட்டக் கூடாரம் இருந்தது. அதிலே பொன்னால் செய்த தூப கலசமும், முழுவதும் பொற்தகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன. " (எபிரேயர் - 9:2-4)

முதலாம் கூடாரத்தினுள் ஆசாரியர்கள் தினமும் பிரவேசிப்பார்கள். ஆனால் இரண்டாம் கூடாரத்தினுள் வருடத்திற்கொருமுறை  மட்டும் பிரதான ஆசாரியன் இரத்தத்தோடு பிரவேசிப்பான்.

இன்று மன அளவில் ஊழியம் செய்யும் ஊழியர்களும் விசுவாசிகளும் ஆவிக்குரிய வாழ்வு எனும் கூடாரத்தின் முதலாம் பாகம் வரை வருகின்றனர். அங்கு  தூப கலசமும், (துதியாகிய தூபம்) குத்து விளக்கும் (ஒளியின் சில செயல்பாடுகளும்)  தேவ சமூகத்தப்பங்களும் (தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பது கேட்பது போன்ற செயல்கள்) இருக்கின்றன. இன்று பெரும்பாலும் ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இந்த இடம் வரை வருகின்றனர்.

இவர்களிடம் (அதாவது இந்த மன அளவில் நிற்பவர்களிடம்) பொதுவாக தேவனை துதிக்கும் செயல் இருக்கும், வேதாகமத்தை ப் படிக்கும் செயல் இருக்கும்,    கிறிஸ்துவைப் பற்றிய மூல உபதேசங்கள், மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு  பற்றிய போதனைகள் இவை இருக்கும். இவை தவிர ஆலயத்துக்கென்றும் ஆவிக்குரிய காரியங்கள் என்றும் செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகள் இருக்கும். இவை  அஸ்திபாரம் தான், ஆனால் இவை மட்டும்  போதாது. பூராணம்  ஆக வேண்டுமென்றால்  இதனைக் கடந்து செல்லும் அனுபவம் வேண்டும்.

பிற மத மக்களிடம்கூட இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மக்கள் செய்வது போன்ற இதுபோன்ற செயல்பாடுகளை நாம் காணலாம். அவர்களும் தங்களது தேவனை துதித்து ஆராதிக்கிறார்கள், தங்களது மத புனித நூல்களை படிக்கிறார்கள், தங்களது ஆலயங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச்  செய்ய ஆர்வமுடன் ஓடியாடுகின்றனர். அப்படியானால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்தான் என்ன? மேற்படி செயல்பாடுகளை மட்டும் செய்து கொண்டிருப்போமானால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அது கூடாரத்தின் முதலாம் பகுதியில் நிற்பதேயாகும்.

நாம் முதலாம் கூடாரத்தினிலேயே நின்றுகொண்டிருந்தால் போதாது. அதாவது, வெறும் துதியும் வேத வாசிப்பும் ஒருசில கிறிஸ்தவச் செயல்பாடுகளும், காணிக்கைகளும், பலிகளும் போதாது. ஏனெனில் அவை மனச் சாட்சியை பூரணப்படுத்தக் கூடாதவைகள். "அதனாலே முதலாம் கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்துக்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கூடாரம் இந்தக்காலத்துக்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டு வருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச் சாட்சியைப் பூரணப்படுத்தக்   கூடாதவைகளாம்"  (எபிரேயர் - 9:8,9)  

எனவேதான் எபிரேயர் நிருபம் கூறுகிறது மேற்படி அஸ்திபாரத்தை மறுபடி மறுபடி போடாமல் பூரணர் ஆகும்படி கடந்து போவோமாக  (எபிரேயர் - 6:1-2) இப்படிக் கடந்து செல்வதுதான் ஆவிக்குரிய வாழ்வு. அதுதான் ஆவியால் நடத்தப்படும் அனுபவம். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைய இயேசு கிறிஸ்து இன்று வழியினை உண்டாக்கியுள்ளார். பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்ததோடு நுழைந்ததுபோல அல்ல இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அதனுள் நுழையும் வாய்ப்பு நமக்கு அருளப்பட்டுள்ளது.

'வெள்ளாட்டுக் கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தால் அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தால் ஒரேதரம்  மகா பரிசுத்த ஸ்தலத்தினுள்  பிரவேசித்து நித்திய மீட்பை உண்டுபண்ணினார்" (எபிரேயர் - 9:12) இந்த இரண்டாம் கூடாரத்தினுள் வரும்போது மட்டுமே தேவனுடைய வழி நடத்துதல் இருக்கும். பழைய ஏற்பாட்டு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் தான் உடன்படிக்கை பெட்டி இருந்தது. அதன் மேலிருந்த கிருபாசனத்திலிருந்துதான் தேவன் பேசினார். "மோசே தேவனோடு பேசும்படி ஆசாரிப்புக் கூடாரத்தினுள் பிரவேசிக்கும்போது தன்னோடு பேசுகிறவரின் சத்தம் சாட்சிப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரெண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து  உண்டாகக் கேட்பான். அங்கே இருந்து அவனோடே பேசுவார்." (எண்ணாகமம் - 7;89)


ஆவிக்குரிய மனிதனிடம் ஆவிக்குரிய பல்வேறு செயல்பாடுகள் இருக்கும். அவை பூரண தேவ அன்பினால் உண்டானவைகளாக இருக்கும். ஆவியினால் நடத்தப்படுபவர்களிடம் காணப்படும் குணங்களில் சில :-

*ஆவிக்குரிய மனிதன் கடமைக்காக வேதம் வாசிக்காமல் ஆவிக்குரிய அன்போடு வாசிப்பான். கால அட்டவணைகள் போட்டு வேதம் வாசிக்க மாட்டான்.

* வேதம் வாசிக்கும் போது தேவ குரலைக் கேட்பவனாக இருப்பான் 

* தவறுகள் செய்யும்போது வேதம் வாசிக்க நான் தகுதி உள்ளவன் தானா? என மனச்சாட்சி உறுத்தும் (தேவனோடு மீண்டும் ஒப்புரவு ஆகும் வரை)   

* இயேசு கிறிஸ்து கூறியதுபோல எப்போதும் ஜெபிப்பவனாக இருப்பான். அதாவது அவன் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அவனது இருதயம் ஜெப சிந்தனையோடு இருக்கும் 

* பாவம் செய்யும்போது மீண்டும் ஒப்புரவாகும் வரை ஜெபிக்க முடியாமலிருக்கும் 

* ஜெபத்தில் தனது உலக தேவைகளை மட்டுமே பட்டியலிட்டு கேட்டுக்கொண்டிருக்க மாட்டான் 

* தேவனது குரலைக் கேட்டு தனது வாழ்வை நடத்துபவனாக இருப்பான் 

* கிறிஸ்து கூறியதுபோல எல்லோரையும் அன்பு செய்வான் 

* கிறிஸ்துவைப் போல பரிசுத்தம் ஆகவேண்டும் எனும் தாகம் அவனுள் இருந்துகொண்டே இருக்கும் 

* குறுகிய மதவெறி ஜாதி வெறி அவனிடம் இருக்காது

* நான் ரோமன் கத்தோலிக்கன் இயேசு கிறிஸ்து உருவாக்கிய சபை எங்களது சபைதான். மற்றவர்கள் எங்களிடமிருந்து பிரிந்து சென்ற பிரிவினை சபைகள்தான் என்று கூறிக்கொண்டிருக்க மாட்டான். (கிறிஸ்து மதத்தை உருவாக்க வரவில்லை, நித்திய ஜீவனுக்கான வழியைத்தான் காண்பிக்க வந்தார்)

* எங்களது பெந்தேகோஸ்தே சபைதான் ஆவிக்குரிய சபை மற்றவை ஆவி இல்லாத செத்த சபைகள்   என்று கூறிக்கொண்டிருக்க மாட்டான் (அதாவது பிறரை நியாயம் தீர்க்க மாட்டான்)


அன்பானவர்களே, மேற்கூறியவை ஆவியினால் வழிநடத்தப்படும் மனிதனின் சில குணங்கள்தான். நாம் வெறும் ஆராதனை, பலிகள், காணிக்கைகள் செலுத்தி இன்னும்  மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு  பற்றிய போதனைகள் இவைகளுடன் நில்லாமல் இவைகளைத் தாண்டி தேவன் நம்மை வழி நடத்த நம்மை ஒப்புக் கொடுப்போம். தேவன் நடத்தும் வாழ்க்கையில்தான் மேலான ஆவிக்குரிய செயல்பாடுகள்   நம்மிடம் வெளிப்படும். இன்று அந்த அனுபவம் இல்லாததால்தான் கிறிஸ்தவம் மற்ற மதங்களோடு பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்படுகின்றது. ஆம் , நாம் வெறும் ஆத்தும கிறிஸ்தவர்களாக அல்ல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக மாற வேண்டியதே இன்றய தேவை. 

No comments: