Wednesday, May 31, 2017

கர்த்தருக்குக் காணிக்கை

கர்த்தருக்குக்  காணிக்கை  


-  எம்.ஜியோ பிரகாஷ் 

கர்த்தருக்குக்  காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம்  ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது.  


சகோதரர் சாம்சன் பால் அவர்களின் அணிந்துரை 



விசுவாச சிந்தை வீழ்ச்சிகண்டு வியாபார சிந்தை மேலோங்கி இருக்கின்ற இன்றய கிறிஸ்தவ ஊழிய வட்டாரங்களில், காணிக்கை  ஆசீர்வாத போதனை என்பது பிழைப்பதற்கான ஒரு எளிய வழியாக மாறிவிட்டது. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் படுவதற்காகவே காணிக்கை குறித்து அதிகமாகப் பேசுகிறோம் என வாயினால் கூறினாலும், ஜனங்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக்கி தங்களின் கஜானாவை நிரப்புவதே அநேகருடைய உண்மையான நோக்கமாக இருக்கிறது.

காணிக்கை பெறுதலை நோக்கமாகக் கொண்டு  இந்நாட்களில் ஊழிய ஸ்தாபனங்கள் கொண்டு வருகின்ற போலி திட்டங்கள் கொஞ்சமல்ல.  காணிக்கை வழங்கல் எனும் தூய்மைக்குரிய ஆவிக்குரிய நற்செயலை வியாபார பொருளாக்கி ஜனங்கள் மிகுதியாக வஞ்சிக்கப் படுகின்ற  இந்த நாட்களில் சகோ. ஜியோ பிரகாஷ் எழுதியுள்ள இந்த அருமையான புத்தகம் அநேகருடைய கண்களை திறக்க பிரயோஜனமான ஒரு நூல். அன்று புனிதமான எருசலேம் தேவாலயத்தை வியாபார ஸ்தலமாக்கியோருக்கு எதிரான தேவ கோபத்தை வெளிப்படுத்த இயேசுவுக்கு ஒரு சவுக்குத் தேவைப்பட்டது. கர்த்தருக்கு கணிக்கை என்ற இந்த சிறு புத்தகமும் சிலருக்குச் சவுக்காகத் தோன்றினாலும் அது அவசியமானதே . சத்தியம் சார்ந்த வைராக்கியத்தோடும், சிறந்த எளிய தமிழ் நடையோடும் தெளிவான  வேத வசன வெளிச்சத்திலும் எழுதப்பட்ட இந்த நூலை கர்த்தர் அநேகருக்கு பிரயோஜனமாக்குவார் என்று நம்புகிறேன்.   

இதுபோன்ற ஆவிக்குரிய விழிப்புணர்வூட்டும் அநேக நூல்களை எழுத கர்த்தர் இந்த நூலாசிரியருக்கு உதவிபுரிவாராக. 

சகோ. சாம்சன் பால்,                                                                                                       பாண்டிச்சேரி  
17.05.2005



ஆசிரியரின் முன்னுரை 

தொழில்மயமாகிவிட்ட உலகில் இன்று கிறிஸ்தவ ஊழியம் என்பது பெரும்பாலும் ஒரு தொழிலாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத நிஜம். கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிஷேசத்தை அறிவிப்பதே ஊழியம் எனும் உண்மை நிலை மாறி ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த உதவும் ஒரு தொழிலாகவே ஊழியம் என்பது மாறி விட்டது. இது கிறிஸ்துவை அறியாத மக்களிடையே கிறிஸ்தவத்தைப் பற்றி ஒரு அவ எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. உண்மையும் உத்தமுமான ஊழியர்களுக்குக்கூட இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது.

ஊழியம் என்பது கிறிஸ்துவின் ஊழியமே  தவிர ஊழியக்காரனின் சொந்த ஊழியமல்ல. எனவே காணிக்கை எனும் பெயரில் விசுவாசிகளிடம் பணம் கேட்கும் இத்தகைய ஊழியர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டியது அவசியமாகிறது.     

வேதத்தைக் கருதாய்ப் படிக்கையில் இன்றய   பெரும்பாலான ஊழியர்களின் பண அடிப்படையிலான சுவிஷேச அறிவிப்பு தவறு என்பது தெளிவாகும். வேத அடிப்படையில் இது பற்றிய தெளிவை மக்களுக்கு உணர்த்துவதே இந்நூலின் நோக்கம். புறாவைப் போல கபடமற்றவர்களாக வாழ நம்மை அறிவுறுத்திய  அதே வேளையில் பாம்பைப் போல புத்தியுள்ளவர்களாகவும் இருக்க நம்மை அறிவுறுத்தினார் இயேசு (மத்தேயு - 10:16)

கருத்தோடு படியுங்கள்,  செயல்படுங்கள் ; தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்  !


எம். ஜியோ பிரகாஷ் 
புன்னை நகர் 
01.04.2005


ஒரு சிறிய முன்னோட்டம் ......

கிறிஸ்தவ சபைகளில்,  குறிப்பாக ஆவிக்குரிய சபைகளில் இன்று தசம பாக காணிக்கை பற்றியும்  காணிக்கை அளிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் பற்றியும் அதிகமாகப் பிரசங்கிக்கப் படுகின்றன. அன்பையே  பிரதானக் கட்டளையாக இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்தார். ஆனால் அதைவிட காணிக்கை பற்றிய போதனைகள், அதுவும் தசம பாக காணிக்கை பற்றிய போதனைகள்   இன்று பிரசித்தமாக உள்ளன.  

இதுபற்றி பிரசங்கிகளிடம் விளக்கம் கேட்டால், "இது முக்கியமான விஷயமல்லவா? இன்று பெரும்பாலான விசுவாசிகள் ஆசீர்வாதம் பெறாமலிருக்கக் காரணம் தசம பாக காணிக்கை அளிக்காமலிருப்பதுதான். எனவே தான் இதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும்   சபைப் போதகர்களிடையே சண்டை ஏற்பட  தசம பாக காணிக்கை காரணமாக இருப்பதையும் காண முடிகிறது.

ஒரு சபை பிரசங்கியாரது சபை ஆராதனைக்கு தொடர்ந்து வந்து அவருக்கு தசம பாக காணிக்கை அளித்து வந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் திடீரென்று அச் சபைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு இன்னொரு சபைக்குச் சென்றுவிட்டார்.  அவர் தொடர்ந்து சில வாரங்கள் தனது சபை ஆராதனைக்கு வராததைக் கண்ட அந்த பிரசங்கியார் கோபமடைந்து அவர் புதிதாகச் செல்லும் சபை போதகரிடம் சென்று, "எனது ஆளை நீ எப்படி இங்கு கூட்டிவரலாம்? என ஏக தகராறு செய்துவிட்டார். 

இத்தகைய சம்பவங்கள் ஏற்படக் காரணம் என்ன? அந்தப் போதகரது ஆத்திரத்துக்கு காரணம்தான் என்ன?

மாத வருவாயாக வந்த   தசம பாக காணிக்கை ரூ.2,000/- நின்றுபோனதா அல்லது அந்தப் பேராசிரியர் மீது இந்தப் போதகர் கொண்ட ஆத்தும பாரமா?

மேலும் கர்த்தருக்கு காணிக்கை அளிப்பதால் இரண்டு மடங்கு, பத்து மடங்கு ஆசீர்வாதம் கிடைக்கும்  எனும் போதனை சபைகளில் பரவியுள்ளது. மக்கள் பணத்துக்காக கிறிஸ்துவைத் தேடும் நிலை வேகமாக பரவி சபைகளில் கூட்டம் சேர்கிறது. கிறிஸ்து இயேசு உலகினில் வந்தது பாவத்திலிருந்து நம்மை மீட்டு நமக்கு நித்திய ஜீவனை அளிக்கத்தான். ஆனால் அதனை மறைக்கும் ஆசீர்வாதப் போதனைகள் தான் எங்கும் பரவியுள்ளன.

உலகினில் அனைத்து உறவுகளும் பொருளாதாரம் எனும் வட்டத்தையே மையமாக கொண்டு இருப்பதுபோல தேவ உறவும் இன்று பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே எடைபோடப்படக் காரணம் என்ன? ஆவிக்குரிய சிந்தையுள்ளோர் சிந்திக்கவேண்டும்.

கர்த்தருக்கு காணிக்கை அளிப்பது அவரை மகிமைப் படுத்தும் ஒரு நல்ல செயல்தான். அதனால் தேவ ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு. ஆனால் அது வெறும் பொருளாதார ஆசீர்வாதங்களோ இதர உலக ஆசீர்வாதங்களோ மட்டுமல்ல. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களான பரிசுத்த ஜீவியம், உண்மை, அன்பு, பொறுமை, தேவ சமாதானம், இன்ன பிற. ஒரு மனிதனை இவை பரிசுத்தத்துக்குமேல் பரிசுத்தமடைய இவை வழி வகுக்கும். இவற்றை பணத்தைக் கொடுத்து எவரும் பெற முடியாது.

கிறிஸ்தவ  ஜீவியம் இன்று தவறுதலாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சபை ஆராதனையில் கலந்து கொள்வது, ஜெபக் கூட்டங்களுக்குச் செல்வது,  தசம பாக காணிக்கை செலுத்துவது, உண்மையான மன மாற்றம் இருக்கிறதோ இல்லையோ முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பது....இவையே கிறிஸ்தவ வாழ்வு என என்னும் நிலை உள்ளது.

ஒரு சகோதரரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தசம பாகம் காணிக்கை பற்றிய பேச்சு எழ அவரிடம் கேட்டேன், " நீங்கள் ஏன் தசம பாகம் காணிக்கை கொடுக்கிறீர்கள்?"

அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறினார், "கர்த்தரது சாபத்தைப் பெற்றுவிடக் கூடாது பாருங்கள், அதனால் தான் காணிக்கைக் கொடுக்கிறேன்."

சபைகள் எத்தகைய போதனைகள் கொடுத்து விசுவாசிகளை வளர்கின்றன பாருங்கள் !

"அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். .. பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல " (1 யோவான் - 4:18) என்று வேதம் கூறுகின்றது. தேவனிடம் பூரண அன்பு இருந்தால் ஏன் பயம் ஏற்படுகின்றது? தசம பாக  காணிக்கை குறித்து ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார், "பிரதர்,  தசம பாக  காணிக்கை நமது மொத்த வருமானத்தில் கணக்கிட வேண்டுமா அல்லது பிடித்தம் போக (பிரா விடண்ட் பண்ட் மற்றும் இதர பிடித்தங்கள்) கையில் கிடைக்கும் தொகையில் கணக்கிடவேண்டுமா?"

எத்தனை வேதப்பூர்வமான கேள்வி பாருங்கள் !

பணம் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான், மறுக்கவில்லை. ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. அது ஆவிக்குரிய ஜீவியமுமல்ல. இன்று தமிழக மக்களிடையே ஒரு எழுப்புதல் ஏற்பட்டுள்ளது என ஊழியக்காரர்கள் பலரும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். காரணம் கன்வென்சன் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகின்றது. "ஆசீர்வாதம்" எனும் மையக்  கருத்தே போதிக்கப்படுவதால் மக்கள் கவரப்  படுகின்றனர். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. ஆவிக்குரிய ஜீவியம் பலரிடமும் இல்லையென்றே கூறவேண்டும். மக்கள் நன்றாக ஜெபிக்கின்றனர், ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.. ஆனால் வாழ்க்கையில் உண்மையில்லை.  நற்சாட்சி இல்லை.

கிறிஸ்துவின் பாதை பஞ்சு மெத்தை பாதையல்ல. அது முட்களும், பாடுகளும் நிறைந்தது. இடுக்கமான வாசல் அது. அதில் நுழைபவர்கள் வெகு சிலரே என்று இயேசு கிறிஸ்துவே கூறிவிட்டார். 

கிறிஸ்து உலகத்தில்  வாழ்ந்த போது அவரது போதனையைக் கேட்டு, "இது கடின உபதேசம்" என அனைவரும் ஒதுங்கிவிட்டனர். இயேசு தனது பன்னிரு சீடர்களையும் பார்த்துக் கேட்டார், "நீங்களும் சென்றுவிட மனதாயிருக்கிறீர்களோ?" அதற்கு பேதுரு கூறுகிறார், "யாரிடம்  போவோம் ஆண்டவரே நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன."

கிறிஸ்துவின் ஜீவ வார்தைகளே கிறிஸ்தவனுக்கு வாழ்வு. அதன்படி வாழ்வதே ஆவிக்குரிய ஜீவியம். உலகத்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, வேதனைகள் உண்டு, துக்கங்கள் உண்டு என்று தான்  வேதம் கூறுகின்றது.   ஆனால் இந்த வேதனைகளுக்கு மத்தியிலும் தேவ சமாதானம் இருதயத்தை நிரப்பும். இதுதான் கிறிஸ்தவனுக்குக் கிடைக்கும் வெகுமதி !

கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர ஆசிக்கின்றவர்கள் இதுபற்றிய தெளிவு பெற வேண்டியது அவசியமாகும்.

தசமபாக காணிக்கை என்பது ஏன்? அது அப்படி கொடுக்கப்பட வேண்டும்; யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும், எந்த மனநிலையில் கொடுக்க வேண்டும் என்பதனை வரும் பக்கங்களில் ஓரளவு தெளிவுபடுத்த  முயன்றுள்ளேன். ஆவிக்குரிய சிந்தனையோடு தொடர்ந்து படியுங்கள்.


----------------------------------------------------


ரிசுத்த வேதாகமத்தில் தசமபாகத்தைப் பற்றிய குறிப்பு முதன் முதலில் ஆதியாகமத்தில் வருகிறது.

முது பெரும் தந்தையாகிய ஆபிரகாம் தசமபாகம் கொடுத்த செய்தி அது.

ஆபிரகாமின் சகோதரனின் குமாரனாகிய லோத்து சிறைபட்டுப்போனான் எனக் கேள்விப்பட்ட ஆபிரகாம் தனது ஆட்களுடன் புறப்பட்டு சென்று எதிரி ராஜாக்களிடமிருந்து லோத்துவை மீட்டு கொண்டு வந்தான். அப்போது உன்னத தேவனுடைய  ஆசாரியனாயிருந்த சலோமின் ராஜாவாகிய மெல்கிசேதேக் அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்து அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.(ஆதி.14) என்று கூறப்பட்டுள்ளது.

இந்த  மெல்கிசேதேக்கு  யார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் புதிய ஏற்பாட்டில் தெளிவுபடுத்துகிறார் :

"இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களில் துவக்கமும் ஜீவனின் முடிவு முடையவனாயிராமல் தேவனுடைய குமரனுக்கு ஒப்பானவனாய்  என்றென்றைக்கும் ஆசிரியனாக நிலைத்திருக்கிறான்."(எபி -7:3).

இந்த வசனம் இயேசு கிறிஸ்துதான் அந்த சலோமின் ராஜா என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆபிரகாம் அவருக்கு தசமபாகம் காணிக்கை அளித்தார்.

ஆனால், ஆபிரகாம் தசமபாக காணிக்கை அளித்ததால் தேவன் அவனை ஆசீர்வதித்தார் என வேதம் கூறவில்லை. மாறாக அவன் விசுவாசத்தால் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டான் என்றே கூறுகிறது!

"நீ என் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால் உன் சந்நிதிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்"(ஆதி 22:18) என்று தேவன் ஆசீர்வதித்தார்.

தசமபாகமும் தேவ ஆசீர்வாதமும் :-

தேவ ஆசீர்வாதம் பெற தசமபாகம் அளிப்பேன்" எனப் பொருத்தனை செய்த முதல் மனிதன் யாக்கோபு.

"அப்போது யாக்கோபு தேவன் என்னோடே இருந்து நான் போகிற இந்த வழியிலே   என்னைக் காப்பாற்றி உண்ண ஆகாரமும் உடுக்க வஸ்திரமும்தந்து என்னை என் தகப்பன் வீட்டுக்கு சமாதானத் தோடே திரும்பி வரப்பண்ணுவாரானால்  கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார், நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவன் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசம பாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைப் பண்ணிக்கொண்டான்" (ஆதி - 28:20-22)

ஆனால் யாக்கோபு செய்த மேற்படி பொருத்தனை வித்தியாசமானது. தேவனுக்குப் பிரியமில்லாத தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு பொய்யும் புரட்டும் செய்து சம்பாதித்தப் பணத்தைப் பெருக்கப் பண்ணும் பண ஆசையால் செய்யப்பட்ட பொருத்தனையல்ல இது.

யாக்கோபு இந்தப் பொருத்தனையைச் செய்யுமுன்பே தேவன் அவனை ஆசீர்வதித்தார். அதனை தேவன் அவனுக்குத் தெரிவித்தபோது அதற்குப் பதிலாகத்தான் யாக்கோபு மேற்கண்டப்  பொருத்தனையைச் செய்தான்.

"உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கும் பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போல இருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னை காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவுக்கு உன்னைக் கைவிடுவதில்லை" என்றார். (ஆதி - 28:13-15)

தேவன் யாக்கோபோடு மேற்படி சொன்னதற்குப் பதிலாகத்தான் யாக்கோபு அப்படி ஒரு பொருத்தனைச் செய்தான். அதாவது இது ஒரு நட்பின் உரையாடல் போல, இரு நண்பர்கள் பேசுவதுபோல உள்ளது. நான் உனக்கு இன்னின்ன செய்வேன் என்று தேவன் சொல்ல அதற்குப் பதிலாக அப்படியானால் நான் உமக்கு இப்படிச் செய்வேன் எனக் கூறுகிறான் யாக்கோபு.

ஆனால் தேவனுக்கு எந்த விதத்திலும் ஏற்பில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு உலகப் பொருள் ஆசீர்வாதம் ஒற்றையே  நோக்கமாகக் கொண்டு தசம பாகம் காணிக்கைக் கொடுப்பதை என்னென்று சொல்வது? உலகப் பொருள் ஆசீர்வாதம்  ஒற்றையே தேவ  ஆசீர்வாதமாகவும் அதனைத் தசம  பாக காணிக்கைக்  கொடுப்பதால் மட்டும் பெற்று விடலாம் என்றும் பிரசிங்கிப்பதும் எந்த விதத்தில் ஏற்புடையது?

உலக ஆசீர்வாதத்தைக் காட்டி தங்களுக்கு அதிக காணிக்கை பிடிக்க ஊழியர்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் வசனம் :- " என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசம  பாகங்களையெல்லாம்  பண்டகசாலையில் கொண்டு வாருங்கள். அப்போது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங் கொள்ளாமல் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை  வருஷிக்கமாட்டேனோ என்று அதனால் என்னை சோதித்துப் பாருங்கள்....(மல்கியா - 3:10)

மேற்படி வசனத்தை மேற்கோள் காட்டுவோர் சாமர்த்தியமாக வசனத்தின் முதல் பகுதியை விட்டுவிடுகின்றனர்.

ஏழைகளும், அனாதைகளும், விதவைகளுக்கு உண்ணுமாறு ஆலயங்களில் உணவு வழங்கப்படும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதைத் தான் முதல் பகுதி, "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி" எனக் கூறுகிறது. இன்று அந்த வழக்கம் இல்லை. மேற்படி வசனத்தை மேற்கோள் காட்டும் ஊழியர்களும் இப்படி இன்று ஆகாரம் வழங்குவதாகத் தெரியவில்லை. மேலும் தசம  பாக காணிக்கை அனைத்தையும் ஊழியர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று வேதம் சொல்லவில்லை. யார் யாருக்கெல்லாம் அதனைக் கொடுக்கவேண்டும் என்று வேதம் இப்படிக் கூறுகிறது:-

" நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து லேவியனும் பரதேசியும், திக்கற்ற  பிள்ளைகளும் விதவைகளுக்கு உன் வாசல்களில் புசித்து திருப்தியாகும்படி அவர்களுக்கு கொடு " (உபா - 26:12)

அதாவது,   பரதேசி, திக்கற்ற  பிள்ளைகள்,  விதவைகள் இவர்களுக்கு கொடுப்பதும் தேவனுக்கு கொடுப்பதுதான். இதனால் ஏழைகளுக்கு கொடுப்பதும் தேவனுக்குப் பிரியமானக் காணிக்கைதான். வேதம் கூறுகின்றது, "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்." (நீதி - 19:17)

மேலும் தேவன் கொடுக்கும் ஆசீர்வாதம் என்பது பண ஆசீர்வாதம் மட்டுமல்ல. தேவ ஆசீர்வாதத்தைப் பணத்தினால் பெற முடியாது, மதிப்பிடவும் முடியாது. உண்மையான மனதுடன் மகிழ்ச்சியுடன் கொடுப்பதே தேவன் ஏற்கும் காணிக்கை. பணத்துக்காக தேவனுக்குக் காணிக்கை அளிப்போர்  தேவனை அறிந்தவர்களல்ல.

"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை"  (1 யோவான் - 2:15). நாம் எந்த மனநிலையோடு கங்கை அளிக்கிறோம் ?

மேலும் தசமபாக காணிக்கை என்பது நியாயப்பிரமாண காலத்தில் வலியுறுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து மகிமையடைந்த பின் நாம் கிருபையின் காலத்தினுள் நுழைத்துள்ளோம். எனவே நியாயப்பிரமாண விதிகள் கிருபையின் காலத்துக்குப் பொருந்தாது. மனிதனது மன நிலையையே தேவன் பார்க்கிறார். "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." (ரோமர் - 3:20)

எனவே தான் புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் தசமபாக காணிக்கை வலியுறுத்தப்படவில்லை.

நியாயப்பிரமாண கட்டளை 

தசமபாக காணிக்கை ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டதை லேவியராகமத்தில் பார்க்கலாம். 

"தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும் தசம பாகமெல்லாம் கர்த்தருக்கு உரியது. அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது" (லேவி  - 27:30)

கர்த்தர் வாக்களித்த கானான் தேசத்தினுள் போய்ச் சேர்த்தபின்பு பன்னிரு கோத்திரங்களுக்கும் அதனைப் பங்கிட்டுக் கொடுக்கும்போது பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றான லேவி கோத்திரத்துக்கு அதில் பங்கு அளிக்கவேண்டாம் எனவும் தானே அக்கோத்திரத்துக்கான பங்கு எனவும் கர்த்தர் கூறினார்.

"கர்த்தர்  ஆரோனை  நோக்கி, அவர்களுடைய  தேசத்திலே  நீ  ஒன்றயும்     சுதந்தரித்துக் கொள்ளவேண்டாம். அவர்களின் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம். இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உனக்குப் பங்கும் சுதந்திரமுமாய் இருக்கிறேன்" என்றார்.   (எண்   - 18:20)

கர்த்தரே அவர்களது பங்கு. " லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையை செய்வதற்கு இஸ்ரவேலருக்குரியவை எல்லாவற்றிலும் தசம பாகத்தை  அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்தேன்"  (எண்   - 18:21) என்று கர்த்தர் கூறினார்.

அதாவது ஆசாரிய ஊழியம் (ஆலய பணிவிடை) செய்யும் லேவியர் குலம் உலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு தங்களது ஊழியத்தைச் சரியாகச் செய்யாமல் இருந்துவிடக் கூடாது, அவர்கள் முற்றிலும் தங்களை தேவனுக்கு அர்ப்பணித்து ஊழியம் செய்ய வேண்டும் என தேவன் விரும்பினார். அப்படி அவர்கள் ஊழியம் செய்யும்போது அவர்களது உயிர் வாழ்க்கைக்கும் பணம், பொருட்கள் தேவை. அதற்காகவே தசம பாகம் நியமிக்கப்பட்டது.   

"அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்"  (எண்   - 18:31) என்று கூறப்பட்டுள்ளது.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி, ".....இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரருடைய கையில் வாங்கும் தசம பாகமாகிய பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கென்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து ... (எண்   - 18:28) என்று கூறுவதால் ஆசாரியர்களும் தங்களுக்கு காணிக் கையாகக் கிடைக்கும் பொருட்களில் தசம பாகத்தைக் கர்த்தருக்கென்று அளிக்கவேண்டும் என்று  வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

தேவன் கொடுத்தத் தசமபாக கட்டளை நாளடைவில் அர்த்தமிழந்த ஒரு சடங்காக மாறிப்போயிற்று. அன்பு, இரக்கம், நீதி நேர்மை எதுவுமற்ற ஒருவனும் தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஆசாரியனுக்குக் கொடுத்து ஆத்தும இளைப்பாற்றி பெற எண்ணினான். துன்மார்க்கமாய் சம்பாதித்த பணத்தையும் ஆடு, மாட்டு மந்தையிலிருந்து கொழுத்தவற்றையும் கர்த்தருக்கு எனப் பலியிட்டு லேவியனுக்கும் கொடுத்தான். காணிக்கை அர்த்தமிழந்ததைப்போல பலிகளும் அர்த்தமிழந்திருந்தன.

ஆசாரியனும் காணிக்கையாகக் கிடைக்கும் பணம், பலியிடப்படும் இறைச்சி இவற்றின் மேல் நாட்டம் கொண்டு கர்த்தரை மறந்தான். இதற்கு ஒரு உதாரணமாக ஏலி எனும் ஆசாரியனது புதல்வர்கள் செய்தது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில்  இறைச்சி வேகும்போது ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைக் கையில் பிடித்து வந்து அதனால் கொப்பரையிலாவது, பானையிலாவது, சருவத்திலாவது, சட்டியிலாவது குத்துவான். அந்த ஆயுதத்தில்  வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்வான்.  கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும் ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி, ஆசாரியனுக்கு பொரிக்கும்படி இறைச்சி கொடு, பச்சை இறைச்சியேயல்லாமல் உன் கையில் வாங்குகிறதில்லை என்பான். அதற்கு அந்த மனுஷன் இன்று செய்ய வேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்  பிற்பாடு உன் மன விருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும் அவன், அப்படியல்ல இப்போதே கொடு இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான் .... ஆதலால், மனுஷர் கர்த்தருடைய காணிக்கையை வெறுப்பை எண்ணினார்கள். " (1. சாமுவேல் - 2: 13-17)

துன்மார்க்க ஊழியர்களின் இந்தச் செயல்களை ஏசாயா, எரேமியா போன்ற இறைவாக்கினர்கள் வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

கர்த்தர் ஏசாயா மூலம் மனம் வெதும்பிச் சொன்னார், "உங்கள் பலிகளின் திரள்  என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆட்டுக் கடாக்களின் தகனப் பலிகளும் , கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு ஆரோசிகமாயிருக்கிறது. காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல்  எனக்குப் பிரியமில்லை. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களைக் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்"   (ஏசாயா  - 1: 11-13) 

ஏலியின் புதல்வர்களைப்போல காணிக்கைகளின்மேல் மட்டும் நாட்டம் கொண்டு அதனைச் சம்பாதிக்க அநேக யுக்திகளைக் கையாளும் ஊழியக்காரர்கள் இன்றும் இல்லாமலில்லை. அவர்கள் கூரான ஆயுதத்தால் குத்தி இறைச்சியை எடுத்தனர். ஆனால் இன்று சில சபை ஊழியர்களோ தங்கள் நாவான ஈட்டியால் விசுவாசிகளின் இருதயத்தைக் குத்தி காணிக்கை வாங்குகின்றனர்.

உதாரணமாக ஒரு சபையில் தசம பாக காணிக்கையை ஒரு விசுவாசி குறைவாகச் செலுத்திவிட்டார் என்பதற்காக அந்தச் சபைப் போதகர் சபிக்கத்துவங்கிவிட்டார். அவர் உரத்த  குரலில் இப்படிக் கத்தினார்:

"இந்தச் சபையில் இருக்கும் நவீன அனானியாவே! கர்த்தருக்காக பங்கை நீ மறைத்து செழிக்கப்பார்கிறாயா? நீ நாசமடைவாய். தேவனை வஞ்சித்த உன் குடும்பத்தில் வறுமை  தீராது. நீ வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று கர்த்தருக்குத் தெரியாது என்று எண்ணுகிறாயா? உனக்கு இந்த வேலையே இல்லாமல் செய்துவிடுவார்... எகிப்தியருக்கு வந்த வாதைகள் எல்லாம் உனக்கும் வரும்..."

ஊழியக்காரரின் சாபத்தைக் கேட்டு ஒருவர் பொறுக்கமுடியாமல் வெளியேறினார். அவர்தான் அந்த ஊழியர் குறிப்பிட்டுக் குத்திய பள்ளி ஆசிரியர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி சபிக்கும் ஊழியர்களை பற்றிய ஆதாரம் பல உண்டு.

இஸ்ரவேலரை சபிக்கும்படி பிலேயாமிடம் பாலாக் கூலிபேசி  அழைத்துச் சென்றான்.  (எண்   - 23,24) ஆனால்,  "இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்" என்பதை பிலேயாம் கண்டபோது சபிப்பதற்குப் பதில் ஆசீர்வதித்தான். இங்கு நவீன பிலேயாம்களோ ஆவிக்குரிய இஸ்ரவேலரை பணத்துக்காகச் சபிக்கிறார்கள்.

"உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்" என்றார் இயேசு கிறிஸ்து. (லூக்   - 6: 28)  அந்த வாக்கின்படியே இவர்களை நாம் ஆசீர்வதிப்போம். கர்த்தர் இவர்களது குருடாகிப்போன கண்களையும் இருதயத்தையும் திறப்பாராக  !


தேவ ஆசீர்வாதத்தைப் பணத்தின் மூலம் பெற முடியுமா?

கிறிஸ்தவ மார்க்கம் தூஷிக்கப்பட பொருளாசை நிறைந்த இந்தப் போதகர்களும் ஊழியர்களும் பல வேளைகளில் காரணமாக இருக்கின்றனர். பிற மத சகோதரர்களும் ஏன் கிறிஸ்தவர்கள் கூட பல சமயங்களில் ஊழியர்களின் விளம்பரங்களையும் பணம் சேர்க்க அவர்கள் கண்டுபிடிக்கும் யுக்திகளையும் கிண்டல் செய்வதைக் காணலாம். இப்படி அவர்கள் கிண்டல் செய்து கூறுவது தவறு என்றோ அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்றோ தள்ளிவிட முடியாது. 

தங்களது ஊழியத்துக்கு கம்பியூட்டரோ, கட்டிடமோ, வாகனமோ தேவையெனில் அதை விளம்பரமாகக் குறிப்பிட்டு அதன் கீழே, "உற்சாகமாகக் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்" என வசனம் போடுவார்கள். அல்லது நாம் முன்பு பார்த்த மல்கியா 3:10 வசனத்தைப் போடுவார்கள். 

தேவ ஆசீர்வாதத்தை ஒருவன் பணத்தின் மூலம் பெற முடியுமா? பணம் கொடுப்பதால் மட்டும் ஒருவனிடம் தேவன் பிரியமாக இருப்பாரா? இதற்கு வேதத்தில்  ஆதாரம் உண்டுமா?

பணத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற முயன்றால் சாபமே கிடைக்கும் என வேதம் கூறுகிறது. தேவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கிறவர் என்றால் இன்று பெரிய அளவில் புகழ் பெற்ற ஊழியக்காரர்களுக்கு அள்ளி வழங்கும்  தொழிலதிபர்கள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

சமாரியா பட்டணத்தில் சீமோன் எனும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரன் ஒருவன் இருந்தான். தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று பலரும் அவனுக்குச் செவி சாய்த்துவந்தனர்.  ஆனால் பிலிப்பு எனும் பக்தன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கம் பண்ணியபோது இந்த மாயவித்தைக்காரன் மனம் மாறினான். ஆனால் பணத்தையே தெய்வமாக கருதி வாழ்ந்தவன் ஆதலால் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணம் மட்டும் அவனை விட்டு மாறவில்லை.

பேதுருவும் யோவானும் அங்கு வந்தபோது அவர்கள் மக்கள்மேல் கைகளை வைத்து வேண்டுதல் செய்தபோது மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அதனைக் கண்ட சீமோன் பேதுருவிடம் பணத்தைக் கொண்டுவந்து தானும் பிறர்மேல் கைகளை வைக்கும்போது பரிசுத்த ஆவி பொழிந்தருளும் வரம் வேண்டும் என்று கேட்டான். அவனைப் பார்த்துப் பேதுரு, "தேவனுடைய வரத்தைப் பணத்தினால் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியினாலே உன் பணம் உன்னோடுகூட நாசமாகப் போகக்கடவது" என்று சபித்தார். மேலும் அவனைப்  பார்த்து, "உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால் இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் உன் துர்குணத்தை விட்டு மனம்திரும்பி தேவனை நோக்கி வேண்டிக்கொள், ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்" என்கிறார்.  (அப்  - 8: 20,22) 

அவனது எண்ணம் பணத்தின்மூலம் ஆசீர்வாதம் பெறலாம் என்று இருந்தது. அதனைத்தான் பேதுரு கண்டித்து, "உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால்" என்று குறிப்பிடுகிறார். மேலும் நீ தேவனை நோக்கி வேண்டுதல் செய்தால் உன் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படும் என்று திட்டமாய்க் கூறாமல், "உன் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்" என்று ஐயப்பாட்டுடன் கூறுகின்றார். காரணம், பணத்தைக் கொடுத்து தேவ ஆசீர்வாதத்தைப் பெற எண்ணுவது அதனைப் பெரிய தவறு  எனப் பேதுரு கருதினார்.

ஆனால் இன்று விசுவாசிகளின் வாழ்க்கை மாற்றம் பற்றியோ அவர்களது பரிசுத்த ஜீவியத்தில் அவசியம் பற்றியோ கவலைப் படாமல், அதனைப் பற்றி எதுவும் பேசாமல், காணிக்கைக் கொடுத்தால் கர்த்தர் ஆசீர்வதிப்பார் எனும் ஒரே போதனை மேலோங்கியுள்ளது.  

"அவர்களில் சிறியோர் முதல் பெரியோர் மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர், இதுவுமல்லாமல் தீர்க்கத்தரசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவொருவரும் பொய்யர்"  (எரேமியா - 6: 13) எனும் வசனம் இங்கு நோக்கத்தக்கது.

எரேமியா மூலம் கர்த்தர் ஒவொருவரும் பொய்யர் எனக் கூறினார். ஆனால் அத்தனையும் மிஞ்சும் ஊழியர்கள் இன்று இல்லாமலில்லை. தமிழகத்தின் பிரபல ஊழியக்காரர் அவரது மாதப் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இப்படிக்  கூறுகின்றார்:-

"நல்ல பொருளாதார  நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு நண்பரைச் சமீபத்தில் சந்தித்தேன். பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தார். அவரிடம், "சகோதரரே, எப்படி இந்த நிலைக்கு ஆளானீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'முன்பு கர்த்தருக்கு தசம பாக காணிக்கையை ஒழுங்காக மாதம்தோறும் கொடுத்து வந்தேன். அதனை நிறுத்தினேன், கர்த்தர் என்னை இப்படி ஆகிவிட்டார்.' என்றார்.

எத்தகைய அறிவீனமான, மக்களை வஞ்சிக்கிற கருத்து பாருங்கள்!

அதே கட்டுரையில் அந்த ஊழியக்காரன் தொடர்ந்து இப்படி எழுதுகிறார்:

" ஒரு சகோதரன் என்னிடம் ரூ.50/-  காணிக்கையாகக் கொடுத்தார். நான் அவரிடம், "சகோதரரே! ஏன் இந்தக் காணிக்கையைக் கொடுக்கிறீர்கள் " என்று கேட்டேன். அவர்,  "கர்த்தருக்கு கொடுக்கவேண்டுமென்று கொடுக்கிறேன்" என்றார். நான் அவரிடம், "அப்படிக் கொடுப்பது ஆசீர்வாதமல்ல, கர்த்தர் இதனை ஆசீர்வதித்துப்  பல மடங்காகத் திருப்பித் தருவார் என்று விசுவாசித்து கொடுங்கள்..நிச்சயம் அப்படி நடக்கும்" என்று கூறினேன். (பண ஆசை இல்லாமல் கர்த்தருக்கு கொடுக்கவேண்டும் எனும் எண்ணத்தில் கொடுப்பவர்களையும் தங்களைப்போல பண ஆசை உள்ளவர்களாக மாற்றும் ஊழியரின் உபதேசத்தைக் கவனிக்கவும்) அவரும் அப்படியே விசுவாசித்துக் கொடுப்பதாகக் கூறினார். மறு  நாளில் அவருக்கு அவருடைய மைத்துனன் மூலம் ரூ. 50,000/- கிடைத்தது.

எவ்வளவு அறிவீனமான சிந்தனை பாருங்கள்! சில பக்தர்கள் பின்வருமா று  துண்டுப்    பிரசுரம் வெளியிடுவார்கள்......" நான் ---------தெய்வத்தை வேண்டியதால் எனக்கு இன்னின்ன நன்மைகள் கிடைத்துள்ளன. அந்த தெய்வமே என் கனவில் வந்து என்னிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டது....இந்த அதிசயத்தை நோட்டீசாக ஆயிரம்  பிரதிகள் அச்சடித்து உடனே ஏழு நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்...இதனை நம்பாத ஒருவர் அலகாபாத்தில் இரத்தம் கக்கிச் செத்தார். இதனை நம்பி ஆயிரம் நோட்டீஸ் அச்சிட்டுக்கொடுத்த மதுரையைச் சேர்ந்த மாயழகு என்பவருக்கு லாட்டரியில் பத்து இலட்சம் பரிசு கிடைத்தது ..." இப்படித் தொடர்ந்து போகும் துண்டுபிரசுரத் செய்தி. 

மேற்படி ஊழியரின் கட்டுரைக்கும் இந்தத் துண்டுப்    பிரசுரத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது? 

"தங்களையே மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ !"  (ஏசாயா  - 34: 2) என வேதம் இவர்களுக்காகப் பரிதபிக்கின்றது!

கொடுங்கள் உங்களுக்குக்  கொடுக்கப்படும் 

ஊழியக்காரர்கள் கணிக்கைப் பெற மக்கள்முன் வைக்கும் இன்னொரு முக்கியமான வசனம், "கொடுங்கள் அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கிக் குழுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய்  அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்"  (லூக்கா   - 6: 38) என்பது.

கிறிஸ்தவத்தின் அடிப்படையே கொடுப்பதுதான். கிறிஸ்து நமக்காகத் தனது ஜீவனையே பலியாகக் கொடுத்தார்.

இந்த இடத்தில ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். கிறிஸ்து போதித்த அணைத்து காரியங்களும் மறுமைக்கான விஷயங்களே. அவர் உலகப் பொருட்களை உவமையாக எடுத்தாண்டார், ஆனால் உலகப் பொருட்களை பெருக்குவதற்கான வழிகளை போதிக்கவில்லை.

"நான் உயர்விலிருந்து உண்டானவன், நீங்கள் உலகத்திலிருந்து குண்டானவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவனல்ல. (யோவான்  - 8: 23) என்றே கூறினார்.

"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்பது ஊழியக்காரர்களுக்கு பணத்தைக் கொடுப்பதையும் அதனால் வரும் ஆசீர்வாதங்களையும் குறிப்பதல்ல.

நீங்கள் பிறருக்கு அன்பைக் கொடுங்கள் , அன்பைப் பெறுவீர்கள், இரகத்தைக் கொடுங்கள் , இரகத்தைப் பெறுவீர்கள். மனுஷன் எதை விதைப்பானோ அதையே அறுப்பான்.

இந்த ஆவிக்குரிய தெய்வீக சத்தியத்தை மறைத்து இழிவான பண ஆதாயத்தை மனதில் வைத்து வைத்த வசனத்தைத் திரித்து போதிப்பதை புரிந்துகொள்ளாமல் விசுவாசிகள் ஏமாந்து விடுவது ஆச்சரியம்.

"விபச்சாரரே, விபச்சாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா? ஆகையால் உலகத்துச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்"  (யாக்கோபு  - 4: 4) என்று வேதம் கூறுவதைக் கவனிக்க.

மேலும் சொந்த சாகோதரனோ சகோதரியோ, ஏன் பெற்ற  தாய் தகப்பனோ வறுமையில் தவிக்க அவர்களுக்கு ஐந்து காசு  கூட உதவாமல்  பிரச்சித்திப் பெற்ற ஊழியர்களுக்கு பல ஆயிரங்களைக் காணிக்கயாக அனுப்பும் உயர் பதவி வகிப்பவர்களும்  வங்கியிலும் கல்லூரிகளிலும் வேலை பார்க்கும் பலரும் உள்ளனர். இது ஏன்? இரட்டிப்பு பண ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளத்தானே ? ஆவியில் நிறைந்து துள்ளிக் குதித்து அந்நிய பாஷை பேசும் இவர்களுக்கு உள்ளத்தில் பரிசுத்த ஆவி இருந்தால் இது தவறு என உணர்த்தமாட்டாரா?

"தேவனிடத்தில் அன்புகூருகிறேன் என்று சொல்லியும் தன்  சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராதவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?" (1 யோவான்   - 4:20) என்றல்லவா வேதம் கூறுகிறது?

பூரண அன்புடன் கொடுத்தல் 

பூரண அன்பு கைமாறு கருதாது. ஒருவருக்கு அவர் பல மடங்காகத் திருப்பித் தருவார் என்று எண்ணிக் கொடுப்பதில் என அன்பு இருக்கிறது? அது வர்த்தகம். வங்கிகளும் பைனான்ஸ் நிறுவனங்களும் அதைத்தானே செய்கின்றன? கிறிஸ்தவனும் கிறிஸ்தவ வாழ்வும் அத்தகையது தானா? இன்று கிறிஸ்தவ சபைகள் பெரும்பாலும் வர்த்தகக்  கூடாரங்களை போல மாறிவிட்டன. அங்கு போதிக்கப்படும் போதனைகளும் பணத்தின் அடிப்படையிலானவைகளே. பண ஆசீர்வாதங்களே.

அன்பு இல்லாமல் எதனைச் செய்தாலும் அதில் பயனில்லை என வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகிறது. "எனக்கு உண்டான  யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை"   (1 கொரி   - 13: 3) என்கிறது வேதம். மேலும், "உலகத்திலும் உலகத்திலுமுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடம் பிதாவின் அன்பில்லை "  (1 யோவான்  - 2: 15) 

பூரண அன்புடன் எதிர்பார்ப்பில்லாமல் கொடுக்கும் காணிக்கையே உண்மையான தேவன் விரும்பும் காணிக்கை.

பலரும் காணிக்கைச் செலுத்தியதை பார்த்துக்கொண்டிருந்த இயேசு இரண்டு காசுகள் காணிக்கைச் செலுத்திய ஏழை விதவையே அதிகம் செலுத்தியதாகக் கூறினார். மற்றவர்கள் தங்களிடம் அதிகமாக இருந்ததில் ஒரு பகுதியைக் காணிக்கையாகச் செலுத்தினர். ஆனால் ஏழை விதவையோ தனது ஜீவனத்துக்கு வேண்டிய அனைத்தையுமே போட்டுவிட்டாள்!.

அவளுக்குத் தேவனிடம் பூரண அன்பு இருந்தது. அந்த அன்பு அவள் இருதயத்தை  நெருக்கி ஏவியது.  தேவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினாள். மறு  நாளைக்கு உணவுக்கு என்ன செய்வது என்று கூட அவள் சிந்திக்கவில்லை. தன்னிடமிருந்த அனைத்தையுமே காணிக்கையாகச் செலுத்திவிட்டாள். 

ஆனால் அவள் இரண்டு மடங்கு ஆசீர்வாதம் பெற்றாள்  என்று வேதம் கூறவில்லை.  அவள் ஏழை என்றாலும் அப்படி ஒரு பண ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து காணிக்கைச் செலுத்தியதாக வேதம் கூறவில்லை.

பிரச்சித்திப் பெற்ற ஊழியர் ஒருவரது டி.வி. நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அதில் ஒரு தொழில் அதிபரது சாட்சியை ஒளிபரப்பினர். அவர் கூறினார்:-

"நான் ஆரம்பத்தில் இந்த ஊழியருக்கு தசம பாக காணிக்கையாக ரூ .100/- கொடுத்து வந்தேன். கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். நான் மாதம்  ரூ .500/-  காணிக்கை கொடுக்குமளவு வளர்த்தேன். மேலும் கொடுத்தேன் ஆயிரம் இரண்டாயிரம் என அது அதிகரித்து இன்று மாதம் ரூ .20,000/-  கொடுக்குமளவுக்கு கர்த்தர் என்னை உயர்த்தியுள்ளார்.

தொழிலதிபரின் சாட்சி முடிவுற்றதும் அந்த பிரசித்திபெற்ற ஊழியர் தொழிலதிபரிடம் கேட்கிறார், "சகோதரரே தாங்கள் இப்படிக் கர்த்தருக்கு கொடுக்கக் காரணம் என்ன?"

அதற்கு தொழிலதிபரின் பதில், " அது வந்து.... நான் கொடுக்கக் கொடுக்கக் கர்த்தர் எனக்கு தந்துகொண்டே இருக்கிறார் ..அதனால்தான் கொடுக்கிறேன்"

தொடர்ந்து தொழிலதிபரின் தோளில் கைபோட்டபடி ஊழியக்காரர் மக்களை பார்த்துக் கூறுகிறார், " பார்த்தீர்களா சகோதரர்களே, கர்த்தரது ஆசீர்வாதத்தை? நீங்களும் ஏன் இந்தச் சகோதரைப் போலச்  செய்து தேவ ஆசீர்வாதத்ததைப் பெற்றுக்கொள்ளக்கூடாது?"

மாதம் ரூ .20,000/-  கொடுக்கும் அந்த நபர், நான் கர்த்தரிடமுள்ள அன்பினால் அப்படிக் கொடுக்கிறேன் என்று கூறினால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் முற்றிலும் பண ஆசை வெறி பிடித்தவராக மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டுமெனும் ஒரே எண்ணத்தோடு கொடுக்கும் அந்தக் காணிக்கையின் அர்த்தமென்ன?  அதனை ஒரு ஊழியக்காரன் புகழ்கிறானென்றால் அந்த ஊழியன் எத்தகைய பண ஆசை உள்ளவனாக இருப்பான்?

மேலும் மாதம் இருபதினாயிரம் காணிக்கை அளிக்கிறானென்றால் அவரது மாத வருமானம் இரண்டு லட்சம் இருக்கும். இந்த இரண்டு லட்சத்தை அவர் எந்த முறையில் சம்பாதிக்கிறார்? நேர்மையான முறையில்தானா? அப்படியானால் அதற்கான கணக்கு வழக்குகளை சரியாக வைத்துள்ளாரா ?   அரசாங்கத்தை ஏமாற்றாமல் ஒழுங்காக வருமான வரி செலுத்துகிறாரா? இவைகளையும் பார்க்கவேண்டுமல்லவா?

உண்மையான தேவ அன்புள்ளவன் உலக பிரதிபலனை எதிர்பார்த்து தேவனை அன்பு செய்பவன் அல்ல. எந்த நிலையிலும் தேவனிடத்தில் அன்புகூர்ந்து மகிழ்ச்சியாய் இருப்பவனே தேவ அன்புள்ளவன்.

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபாத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிறுவனமோ, நாசமோசமோ, பட்டயமோ?....உயர்வானாலும் தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து யேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்க மாட்டாது "   (ரோமர்   - 8: 36-39) என்று கூறுகிறார் பரிசுத்த பவுல். தேவன் எனக்குப் பணம் தந்துகொண்டே இருப்பதால் அவரிடம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது என்ன ஆவிக்குரிய ஜீவியம்?

"அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைச் செடியில் பழம் உண்டாகாமல் போனாலும் , ஒலிவ மரத்தின் பலன் அற்றுப் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்று போனாலும், தொழுவத்தில் மாடு இல்லாமல் போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக்    - 3: 17, 18)  எனும் எண்ணமுள்ளவனே தேவ அன்புள்ள ஆவிக்குரிய மனிதன்!

தசமபாகம் விக்கிரக ஆராதனையாக மாறுதல் 

வேதத்தில் கடுமையாக கண்டனம் செய்யப்படுவது விக்கிரக ஆராதனை. இன்று ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல சபைகளும், இச் சபைகளுக்குச் செல்லும் விசுவாசி என்று கூறிக்கொள்வோரில் பலரும் இந்து சகோதரர்களையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களையும் விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள் என்று கேலி செய்வதும் அற்பமாக எண்ணுவதும் நாம் காணும் உண்மை. விக்கிரக ஆராதனை என்பது கடவுளது உருவத்தை மண்ணினாலோ கற்களாலோ மரத்தினாலோ செய்து அதனை வழிபடுவது மட்டும்தான் என இவர்கள் எண்ணியுள்ளனர். ஆனால் வேதம் பொருளாசை பண ஆசை இவற்றையும் விக்கிரக ஆராதனை என்றே கூறுகிறது.

பண ஆசையுள்ளவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு கிறிஸ்துவே பல முறைக்கு கூறியுள்ளார். அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லையென்று  அறிந்திருக்கிறீர்களே" (எபேசியர் -5:5) என்று கூறுகிறார். 

பண ஆசை விக்கிரக எனும்போது மேலும் மேலும் பணம் சேர்க்கவேண்டுமெனும் ஆவலில் கொடுக்கப்படும் காணிக்கையும்   விக்கிரக ஆராதனைதானே?    அதனையே வலியுறுத்தி தங்களது விசுவாசிகளிடம் பல்வேறு உபாயங்களை பயன்படுத்தி தந்திரமாக காணிக்கை வசூலிப்பதும் விக்கிரக ஆராதனைதானே?

ஆம்! ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்   கூறிக்கொள்ளும் பலரும் பல ஆவிக்குரிய சபைகளும் இன்று விக்கிரக ஆராதனையில் விழுந்து கிடப்பது வேதனையான நிஜம் !

தசமபாகமும் பாகால் வழிபாடும் 

இஸ்ரவேல் மக்களிடம் பாகால் வழிபாடு அக்காலத்தில் பாரவலாகக் காணாப்பட்டது. பாகால் தெய்வம் தன்னை வணங்குபவர்களுக்கு செல்வ ஆசீர்வாதத்தைக் கொடுக்குமென்று  நம்பி பாகாலுக்கு காணிக்கையும்  பலிகளும் செலுத்தப்பட்டன. 

இன்றும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் பரவாயில்லை கர்த்தருக்கு காணிக்கை கொடுத்தால் போதும் அவர் அதனைப் பல மடங்காகத் திருப்பித் தருவார் எனும் நம்பிக்கைப் பலரிடமும் இருக்கிறது. ஊழியர்களும் அப்படிதான் போதிக்கின்றனர். பலர் இப்படிக் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதாகச் சாட்சியும் கூறுகின்றனர் . 

போதகர்களின் தவறான போதக முறை, தேவனைச் சாராத வாழ்க்கை முறை, பணம் விரும்பும் விசுவாசிகளின்  மனநிலை இவையே இதற்குக்  காரணம்.  ஆம்! தெரிந்தோ தெரியாமலோ இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் பல சபைகளும் பாகால் வழிபாட்டுக்குள் மூழ்கிக் கிடப்பது மறுக்க முடியாத உண்மையே !

நியாயப்பிரமாணமான  தசமபாகம் !

மோசே வழியாக தேவன் இஸ்ரவேல் மக்கள் பின்பற்றி நடக்க பல்வேறு நியாயப்பிரமாண கட்டளைகளைக் கொடுத்தார். ஒருவன் அந்தக் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டால் அவன் தேவனுக்கு ஏற்புடையவன் எனும் எண்ணம் வேத அறிஞர்களிடமும் மக்களிடையேயும் இருந்தது. 

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத பலரும், சமுதாயத்துக்குப் பயந்து பலரும் நீதிமங்களாக வாழ்ந்தனர். அவர்களது உள்ளமோ நாற்றமெடுக்கும் பிணக்குழியாக இருந்தது .  எனவேதான் இயேசு கிறிஸ்த்துக்  கூறினார், "ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்  இருதயத்தில்  அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று" (மத்தேயு -5:28). ஆம் , இருதயத்தை ஊடுருவிப் பார்க்கும் தேவனை ஏமாற்ற முடியாது.

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்ப  டுவதில்லை" (கலாத்தியார் -2:16)   என்று கூறுகிறார். 

இன்று பலருக்கும் தசம பாக காணிக்கை கொடுப்பது நியாயப்பிரமாணக் கட்டளைபோல ஆகிவிட்டது. தேவ அன்பினால் காணிக்கை கொடுக்காமல், கட்டளை சொல்லப்பட்டுள்ளதால் காணிக்கை கொடுக்க எண்ணுகிறார்கள். பல சபை ஊழியர்களும் இப்படித்தான் போதிக்கின்றனர். கட்டளைக்குக்  கீழ்ப்படிந்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் கட்டளை இருப்பதால் கொடுக்கிறேன் என்பதைவிட தேவ அன்பினால் கொடுக்கிறேன் என ஒருவர் கொடுப்பதையே தேவன் விரும்புகிறார்.  இதுவே ஏற்புடையது.

விசுவாசிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். காணிக்கையின் அளவை 1/10 என துல்லியமாகக் கணக்கிட்டு கொடுப்பவனை ஆசீர்வதித்து கொடுக்காதவனை  சபித்துத் தள்ளும் ஈட்டிக்காரனல்ல நமது  தேவன் . அவர் காணிக்கை எந்த மனா நிலையோடு கொடுக்கப்படுகிறது என்றும் பார்க்கிறார். அவர் யதார்த்தவாதி! "அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும் தனது காது  கேட்டபடி நியாயத் தீர்ப்புச் செய்யாமலும்   நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து யதார்த்தமாய் பூமியிலுள்ளவர்களுக்கு தீர்ப்பு வழங்குவார் "  (ஏசாயா  -11:3,4)   

காணிக்கை அளிக்கும்போது இதனையும் விசுவாசிகள் கவனத்தில் கொள்வது  நலம். ஏனெனில், "நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை . அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது, அந்த நம்பிக்கையினாலேயே தேவனிடத்தில் சேருகிறோம்"  (எபிரேயர் -7:19)


நவீனயுகத்தில் கூலிக்கு மாரடிப்பு !

அனைத்தும் நவீனமாகிவருவதால் ஊழியமும் நவீனமாகவேண்டுமென ஊழியர்கள் விரும்புகின்றனர். ஊழியத்தின் செயல்பாடுகள் மாறலாமே  தவிர அடிப்படை உபதேசம் மாறக்கூடாது அல்லவா? ஆனால்  இன்று பெரும்பாலான ஊழியர்களின் சிந்தனை இரவும் பகலும் புதிய புதிய உபாயங்களைக் கண்டுபிடித்து காணிக்கையை எப்படி அதிகரிக்கலாம் என்பதே. அதற்காக அவர்கள் அடிப்படை சுவிசேஷத்தையே மாற்றாத துணிந்துவிட்டனர்.    

"கர்த்தரது வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற  மனுஷன் பாக்கியவான் " (சங்கீதம் -1:2) என்கிறது வேதம். ஆனால் இன்றய ஊழியர்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய காணிக்கைத் திட்டங்களை பார்க்கும்போது இரவும் பகலும் புதிய புதிய யுக்திகளைக் கண்டுபிடிப்பதுதான் இவர்களது தியானமோ என எண்ணச்செய்கிறது. 

தங்களது ஊழியத்துக்குக் கட்டிடமோ, வாகனமோ, கம்பியூட்டரோ தேவையெனில் அதனிக் குறிப்பிட்டுத் தங்களது மாத வெளியீடுகளில் செய்தி வெளியிட்டு (பல ஊழியர்களின் மாத வெளியீடுகளும் காணிக்கைப் பெற இன்னொரு யுக்திதான்.) பணம் அனுப்பும் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனி பைல் ( file ) திறப்பதாகவும் அந்த பைல் மேல் ஊழியக்காரர் தினமும் கைகளை வைத்து அவர்களது ஆசீர்வாதத்துக்காக ஜெபிப்பதாகவும் விளம்பரம் செய்கின்றனர். 

இவை தவிர குழந்தைகள் இருந்தால், குழந்தைகளது புகைப் படத்தை ஊழியக்காரருக்கு அனுப்பி அவர் குறிப்பிடும் பணத்தையும்  அனுப்பிவிட்டால் அந்தக் குழந்தைக்காக ஊழியக்காரர் தினமும் ஜெபிப்பதாகவும் விளம்பரம் செய்கின்றனர். இந்தக் குழந்தைகள் திட்டத்தை ஒரு ஊழியர் பின்வருமாறு நியாயப்படுத்துகிறார்:

"கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் குடும்பங்களில் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி ஜெபிக்க முடிவதில்லை, எனவே தான் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில்  சேர்ந்துவிட்டால் குழந்தைகளது ஆசீர்வாதத்துக்காக நாங்கள் தினமும் ஜெபிப்போம்.

அதாவது ஜெபிப்பதற்கான கூலியை ஊழியக்காரனுக்குக் கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக எங்கும் செல்லலாம் எதுவும் செய்யலாம். கூலிக்கு மாரடிக்கும் ஊழியர் உங்களுக்காக ஜெபிப்பார்! வேடிக்கையாக இருந்தாலும் சாத்தானின் இத்தகைய வஞ்சகத்துக்கு பலியாகும் மக்கள் ஆயிரமாயிரம்.!

தேவன் நமது அன்பான தகப்பன் என வேதம் கூறுகிறது. தகப்பனோடுள்ள உறவை வளர்த்துக்கொள்வதைத்தான் தேவன் விருப்புகிறார். தன்னோடு தனது பிள்ளை பேச வேண்டும் , உறவாடவேண்டுமென அவர் எதிர் பார்க்கிறார். 

இப்படிக் கூறுவதால் ஊழியர்களை நமக்காக ஜெபிக்கச் சொல்வது தவறு என்று கருதிவிடக் கூடாது. ஜெபிக்கச் சொல்லலாம், ஆனால் அதைவிட நமக்கு தேவனிடம் தனிப்பட்ட ஒரு உறவை  வளர்த்துக்கொள்வது அதைவிட  முக்கியமாகும். தேவனும் அதனையே விரும்புகிறார்.  

"உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் " ( லூக்கா - 10:20 ) என்றார் இயேசு கிறிஸ்து . ஆனால் நவீன கிறிஸ்தவர்களோ பிரபலமான ஊழியர்களின் பைலில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை எண்ணி சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர். வேதனையான வேடிக்கை!

ஊழியம் செய்ய பணம் வேண்டும்தானே?

ஊழியர்கள் விசுவாசிகளிடம் தங்கள் ஊழியத்தை விரிவுபடுத்த, நற்செய்தி அறிவிக்க, ஊழியத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்க எனப் பல்வேறு காரணங்களைக் கூறி காணிக்கை கேட்கின்றனர். ஊழியர்கள் இப்படிக் கேட்பது  நியாயந்தானே? விசுவாசிகளிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும் ? எனப் பலரும் எண்ணலாம். ஊழியர்களை விசுவாசிகள் தங்கள் பணத்தால் தாங்குவது தவறு அல்ல. இயேசு கிறிஸ்துவையும் பலர் தங்கள் பணத்தால் தாங்கி வந்தனர். 

"ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும்  தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த அநேகம் பெண்களும் அவருடனே இருந்தார்கள்" ( லூக்கா -  8:3 ) என்று வேதம் கூறுகின்றது. ஆனால் இயேசு கிறிஸ்து வாய்திறந்து  ஊழியத்துக்குப் பணம் கேட்டதாக வேதம் கூறவில்லை. 

இதுபோலவே அப்போஸ்தலரான பவுல் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புதிய புதிய சபைகளை நிறுவினார். ஆனால் எந்த இடத்திலும் 'எனக்கு ஊழியத்துக்கு இன்னின்ன  தேவைகள் உள்ளன. சுவிஷேசம் அறிவிக்க எனக்கு காணிக்கை தாருங்கள்...சபை நிறுவ பணம் தாருங்கள்' என்று கேட்கவில்லை. மட்டுமல்ல பேதுரு, யோவான் இன்னும் வேறு எந்த நபர்களும் அப்படிக் கேட்கவில்லை.

இதுகுறித்து விசுவாசிகள் மேலும் தெளிவடையவேண்டுமென எண்ணுகிறேன். ஊழியம் என்பது ஊழியக்காரனின் சொந்த ஊழியமல்ல. அது தேவனது ஊழியம்.  எனவே ஒரு ஊழியனுக்குத் தனது ஊழியம் சிறப்படையவேண்டும் என இருக்கும் எண்ணத்தைவிட தேவனுக்கு அதிக வாஞ்சை இருக்கும். ஆனால் ஊழியர்கள் பண ஆசைகொண்டு தவறுக்குமேல் தவறு செய்யும்போது  தேவன் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார். அவர்களது ஊழியம் உலகத்தின் பார்வைக்கு சிறப்பானதாக, அதிகம் கூட்டம் சேர்வதாக தெரிந்தாலும் தேவனது பார்வையில் அருவருப்பானதாகவே இருக்கும். 

விசுவாசத்தில் வளர்ச்சிபெற்ற எந்த ஊழியனும் தனது எந்தஒரு தேவைக்கும் விசுவாசிகளிடம் யாசிக்கமாட்டான். அவன் தனது ஒவ்வொரு தேவையையும் தேவனிடம் தெரிவித்துவிட்டு அமைதியாயிருப்பான். தேவன் செயல்புரிந்து மனிதர்கள் மூலம் அந்தத் தேவையை சந்திப்பார். இதுதான் அதிசயமான கிறிஸ்தவ வாழ்வு. இதுதான் கர்த்தரை வாழ்வில் ருசிக்கும் அனுபவம். 

'கர்த்தர் உங்கள் இருதயத்தில்  ஏவுவாரானால் காணிக்கை அனுப்புங்கள்' எனப் பல ஊழியர்களும் விளம்பரம் செய்கின்றனர். விசுவாசிகள் பலரும் காணிக்கை அனுப்புகின்றனர். கர்த்தர் உண்மையான விசுவாசிகளிடம் அவரே பேசுவார். ஆனால், வாழ்க்கையில் தேவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத விசுவாசிகள், தேவனது குரலைக் கேட்டுத்  தங்கள் வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளாதவர்கள், பரிசுத்த ஜீவியம் செய்யாதவர்கள், உண்மையில்லாதவர்கள், பொருளாசைக்காரர்கள், எத்தர்கள் பலரும் மேற்படி விளம்பரங்களை பார்த்துவிட்டுத்  தேவன் தங்கள் இருதயத்தில் ஏவியதாக எண்ணிக் காணிக்கை அனுப்புகின்றனர். மேற்படி விளம்பரங்கள் விசுவாசத்தி வளர்ச்சி அடையாத மக்களுக்கு மனோதத்துவ அடிப்படையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அவர்களைக் காணிக்கை அனுப்பத்  தூண்டலாமே தவிர   அது தேவன் பேசுவதோ ஏவுவதோ அல்ல. 

தேவன் காணிக்கை அனுப்பு என்று மட்டும் ஏவ  மாட்டார்.  அவர் "தீமையைப்  பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர்"  ( ஆபகூக் -  1:13 )   பரிசுத்த ஆவியின் ஐக்கியம் இருக்குமேயானால் ஒவ்வொரு விசுவாசியும் வாழ வேண்டிய முறை பற்றியும் பரிசுத்த வாழ்வு வாழவேண்டியதன் அவசியத்தைப்  பற்றியும் ஏவுவார்!

நூற்றுக்கணக்கான அனாதைக் குழந்தைகளை ஆதரித்து ஊழியம் செய்துவந்த ஜார்ஜ் முல்லர் எனும் பரிசுத்தவானுடைய  வாழ்வு  நமக்கு ஒரு உதாரணமாக உள்ளது. தனது அனாதை  ஆசிரமத்தின் எந்தத் தேவைக்கும் அவர் மனிதர்களிடம் கை நீட்டியது கிடையாது. ஆனால் தேவனே அவரது ஒவ்வொரு தேவையையும் அதிசயமாக சந்தித்து வழி நடத்தினார். இத்தகைய அனுபவம் உள்ள ஊழியர்கள் தற்போதும் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் டி .வி , வானொலி பத்திரிகைகளில் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்டாமல் ஒரு மறைந்த ஜீவியம் செய்கின்றனர் .  மரத்தில் கனி இருக்குமானால் பறவைகள் வந்தடையும். உண்மையும் பரிசுத்த ஜீவியமும் ஊழியக்காரனிடம் இருக்குமானால் மக்கள் அவனைத் தேடி வருவார்கள். எந்த விளம்பர யுக்திகளும் தேவைப்படாது.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள இந்தியன் பெந்தகொஸ்தே சபை பாஸ்டர் ஜாண்சன் டேவிட் என்பவர்.         (இவர் சமீபத்தில் காலமாகிவிட்டார் )   சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றிய அவர் தேவ அழைத்தலுக்குக் கீழ்ப்படிந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். அவர் தனது ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் வறுமையில் வாடியபோது ஒருமுறை தான் உடுத்தியிருந்த வேஷ்டி சட்டைகளைத் துவைப்பதற்கு சோப்பு வாங்கக்  கூடக் கையில் பணமில்லாமல் தவித்தவர். எவரிடமும் தனது தேவையைச் சொல்லாமல், 'என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் , அவருக்குத் தெரியும் எனது தேவை' எனும் விசுவாசத்துடன் ஜெபித்துக்கொண்டிருந்தபோது   தனது வறுமைநிலையை எண்ணி கண்களில் கண்ணீர் வடிந்தது.  அவரால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. தனது தோளில்  கிடந்த டவலால் கண்களைத் துடைத்தார். அப்போது படார் என ஏதோ விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது எலியாவைக் காகம் மூலம் போஷித்ததுபோல தேவன் காகம் மூலம் சோப்பு  துண்டு ஒன்றினை வழங்கி அதிசயிக்கச் செய்தாராம். அது அவரது விசுவாசத்தை வளர்க்க உதவியது என்று குறிப்பிட்டார்.   

அவர் ஆலயத்தைக் கட்டி முடிக்கும்வரை எவரிடமும் பணம் கேட்டது கிடையாது. ஆனால் தேவனே உதவிசெய்யும் ஆத்துமாக்களை எழுப்பி ஆலயம் கட்டிமுடிக்கக் கிருபை செய்தார். இன்றும் இவரது ஆலயத்தில் காணிக்கையை விளக்கும்பிரசங்கமோ ஆராதனையின் இடையில் காணிக்கை வசூலித்தலோ கிடையாது.  ஆலய ஓரத்தில் ஒரு சிறு காணிக்கைப் பெட்டி உள்ளது. காணிக்கைச்  செலுத்த விரும்புவோர் அதில் கணிக்கைப் போடுவர். 

இவர் தனது சபை ஆராதனையில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் அளிக்கிறார். தவிர, பஸ்ஸில் தனது சபை ஆராதனையில் கலந்து கொள்ளவரும்   ஏழைகளுக்கு கையில் பஸ் கட்டணமும் சில வேளைகளில் கொடுப்பதைக் கண்டிருக்கிறேன். விசுவாசிகளிடம் பணம் யாசிக்கும் ஊழியர்கள் மத்தியில் கையில் காசில்லாமல் யாரும் சபை ஆராதனையில் கலந்து கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்க்காக விசுவாசிகளுக்கே காசு கொடுக்கும் வித்தியாசம்மன் போதகர் இவர். இவரால் மட்டும் இது  எப்படி முடிகிறது? இதுதான் தேவ வழி நடத்துதல். இத்தகைய அனுபவங்களுடன் அமைதியாக ஊழியம் புரிவோர் விரல்விட்டு எண்ணுமளவுதான் இன்று உள்ளனர்.

பகட்டும், ஆடம்பரமும், ஆரவாரமும், பரவசமும்தான் இன்றய   பெருவாரியான சபைகளில் உள்ள எதார்த்தம்.  அமைதலும்  உண்மையும் விசுவாசமும் வெகுவாகத்  தொலைந்துபோய்விட்டன. 

விசுவாசம்பற்றி அழகாக வேத ஆதாரத்துடன் பிரசங்கிக்கும் ஊழியர்களும் தங்களது பணத் தேவைகளுக்குத் தேவனைவிட விசுவாசிகளையே அதிகம் நம்புகின்றனர். பத்திரிகை, டி .வி  வழியாக பல்வேறு உபாயங்களை புகுத்தி பணம் சேர்க்க விரும்பும் இவர்கள் பிற மத மக்கள் மத்தியில் சாட்சிக்கேடாகவும்  அவர்கள் கேலி பேசுமளவு  வெட்கக்கேடானச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். 

"ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்"  ( யோவான்  -  12:26 ) எனும் தேவ வசனத்தை இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்ப்பதும் இல்லை விசுவாசிப்பதும் இல்லை. தங்களது சுய யாசிப்பால் விசுவாசிகளிடம் பணம் சேர்த்துவிட்டு மேற்படி தேவ வசனத்தை நினைத்து தங்களைத் தேவன் கனம் பண்ணியுள்ளதாக எண்ணிக்கொள்கின்றனர். பரிதாபம்!

காணிக்கைப் பற்றி இயேசு கிறிஸ்து !

காணிக்கை அளிப்பது பற்றி இயேசு கிறிஸ்து அதிகம் பேசவில்லை எனினும் ஒரு சில இடங்களில் அதுபற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். 

"நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்தவந்து, உன்பேரில் உன் சாகோதரனுக்குக் குறைவுண்டென்று  நினைவுகூருவாயாகில்  அங்கேதானே  பாலி பீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் கணிகையைச் செலுத்து." ( மத்தேயு  -  5:23,24 ) என்று இயேசு கூறுவதால் சகோதர சிநேகம் காணிக்கையை விட உயர்ந்தது என்று வலியுறுத்துகின்றார். 

மேலும் பெற்ற தாய் தகப்பனுக்குக் கூட  ஐந்து காசு ஈயாத பலர் தேவ ஆசீர்வாதம் பெற வேண்டி ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கான பணங்களை வாரி வழங்குவதை பார்க்கலாம். இது இன்று நேற்று நடப்பதல்ல. இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த நாட்களிலும்  மக்கள் இப்படித்தான் இருந்தனர். 

அக்காலத்தில் கொர்பான் எனும் காணிக்கை வழக்கம் இருந்தது. எவனாவது தனது பணத்தில் ஒரு பகுதியை கொர்பான் காணிக்கையாக ஆலயத்துக்குச் செலுத்திவிட்டால் அவன் தனது தாய் தந்தையைப் பராமரிக்காமல் இருந்தாலும் அது குற்றமல்ல எனும் எண்ணம் மக்களிடம் இருந்தது. யூதர்கள் இப்படிக் காணிக்கையை ஆலயத்துக்குச் செலுத்திவிட்டு தாய் தந்தையைப் பராமரிக்கும் சுமையிலிருந்து விடுதலைப் பெற்றனர். இதனை இயேசு கண்டனம் செய்தார்.

"உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்தித்தவன் கொல்லப்படவேண்டும்  என்றும் மோசே சொல்லியிருக்கிறாரே, நீங்களோ ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ அதைக் கொர்பான் எனும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடையக் கடமை தீர்ந்தது என்று சொல்லி அவனை இனி தன் தகப்பனுக்காவது தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல் நீங்கள் போதித்த பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள் ..." ( மத்தேயு  -  15:4-6 & மாற்கு 7:10,13)

மேலும் வாழ்க்கையில் நீதி, நேர்மை, இரக்கம் எதுவும் இல்லாமல் இருந்துகொண்டு நியாயப்பிரமாணத்தில்  கூறப்பட்டுள்ளதால்  தசம பாக காணிக்கை கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெற முயல்வோரையும் இயேசு கண்டித்தார்.

"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ ! நீங்கள் ஒற்றலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும்  தசம பாகம்  செலுத்திவிட்டு  நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள் ! இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்" ( மத்தேயு  -  23:23) 

தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து பூரண அன்புடன் பிரதிபலன் எதிர் பாராமல் அளிக்கும் காணிக்கையே  தேவன் விரும்பும் காணிக்கை. காணிக்கையின் அளவை தேவன் பார்ப்பதில்லை. எனவேதான் இரண்டு காசு காணிக்கைச் செலுத்திய ஏழை விதவை அனைவரையும் விட அதிகம் செலுத்தியதாக இயேசு கூறினார். 

இயேசு கிறிஸ்து அன்பின் கட்டளையைத்தான் நமக்குக்  கொடுத்தார். 

1.    அனைத்துக்கும் மேலாக தேவனை அன்பு செய்வது 
2. தன்னைத்தான் அன்பு செய்வதுபோல பிறரையும் அன்பு செய்வது .

இந்தக் கட்டளைகளின்படியே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் போதனைகளும் இருந்தன. எனவேதான் வறட்டுத்தனமான பல நியாயப்பிரமாண போதனைகள் புதிய ஏற்பாட்டில் இல்லை. காணிக்கை ஆசீர்வாத போதனைகளையோ தசம பாக வலியுறுத்தலையோ புதிய ஏற்பாட்டில் காண முடியாது. ஆனால் பல கிறிஸ்தவ சபைகள் இன்னும் நியாயப்பிரமாண சபைகளாகவே இருப்பதால் இக்காணிக்கையே பிரதான  போதனையாக அச் சபைகளில் உள்ளது. கிறிஸ்துவின் கிருபையின் மேன்மையை இச்சபைகள் அறிந்துகொள்ள ஜெபிப்போம் !

இயேசு கிறிஸ்து உலகில் வந்த நோக்கம் 

இயேசு கிறிஸ்து உலகினில் வந்ததன் நோக்கம் புதுமைகள் செய்யவோ உலக ஆசீர்வாதங்களை அளிக்கவோ அல்ல. உலக ஆசீர்வாதம் அளிக்க அவர் வந்து சிலுவையில் மரிக்க  வேண்டிய அவசியமும் இல்லை. "எனது ராஜ்ஜியம் இவ்வுலகத்தைச் சார்ந்ததல்ல" என்றே அவர் அறிக்கையிட்டார். தான் உலகினில் வாழ்ந்த நாட்களில் அவர் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தாலும் அது மக்கள்மேல் அவர் கொண்ட மன உருக்கத்தாலும் மக்கள் தான் கூறுவதன் மேல் விசுவாசம் கொள்ளவேண்டும் எனும் நோக்கிலேதான்.

"நான் சொல்பவைகளை  நம்பாவிடினும் என் செயல்கள் நிமித்தமாவது அவற்றை நம்புங்கள்" என்றார். 

மனித வாழ்க்கை இத்துடன் முடிவடைவதல்ல. முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.  அந்த முடிவில்லா வாழ்வாகிய நித்திய ஜீவன் அடைவது எப்படி என்பதற்கு வழி காட்டினார். 

"நித்திய ஜீவன் அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்"   ( 1.யோவான்  -  2:25)   

மேற்படி வசனத்தை எழுதிய பரிசுத்த யோவான் இதற்கு அடுத்த வசனமாக இப்படி எழுதுகிறார், " உங்களை வஞ்சிக்கிறவர்களை குறித்தே இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்" ( 1.யோவான்  -  2:26)   

ஆக, உலக ஆசைகளைக் காட்டி மக்களை வஞ்சிக்கிற வேத புரட்டர்கள் அக்காலத்திலும் இருந்துள்ளனர். உலக ஆசீர்வாதங்களல்ல, நித்திய ஜீவனே நமது இலக்கு என்பதை வலியுறுத்தவே யோவான் இதனை வலியுறுத்தி எழுதியுள்ளார்.  

இந்த நித்திய ஜீவன் ஒருவனுக்கு எப்போது கிடைக்கும்? அது இயேசு கிறிஸ்துவையும் பிதாவையும் அறிவதன் மூலம் கிடைக்கும்.

"ஒன்றான மெய்  தேவனாகிய உம்மையும் (பிதா ) நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் " ( யோவான்  -  17:3)   

இயேசு கிறிஸ்துவைப் பற்றியல்ல இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். ஒன்றை அறிவதற்கும் ஒன்றைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு. இதற்கு கண் பார்வை இல்லாதவர்களைக் கொண்டு ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என எண்ணுகிறேன். 

பார்வை இல்லாதவர்கள்  இந்த உலகினில் பல்வேறு நிறங்கள் உண்டு என  அறிந்திருப்பர்.  பச்சை,நீலம், சிகப்பு, மஞ்சள் என அவற்றின் பெயரும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அந்த நிறங்களின் மகிமை - அவற்றின் உண்மையான அழகின் தன்மை அவர்களுக்குத் தெரியாது. அதாவது அவர்கள் நிறங்களை பற்றி அறிந்துள்ளனர் ஆனால் நிறங்களை அறியவில்லை.! இது போலவே தேவனை அறிவதும் தேவனைப் பற்றி அறிவதும்.

ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளுக்குச் செல்வதாலும்  வேதம் வாசிப்பதாலும் பிரசங்கங்கள் கேட்பதாலும் தேவனைப் பற்றி அறியலாம். தேவன் அன்புள்ளவர், இரக்கம் உள்ளவர், நீடிய சாந்தமும் பொறுமையும் உள்ளவர்  என அவரது பல்வேறு குணங்களைப் பற்றி  அறியலாம். ஆனால் இவை தேவனை அறிவதல்ல. இவை குருடர்கள் நிறங்களின் பெயரை மட்டும் அறிந்துள்ளது போலத்தான். 

தேவன் விரும்பும் ஒரு வாழ்க்கை மூலம் மட்டுமே நாம் தேவனை அறிய முடியும்.  அவரது அளப்பரிய அன்பை, இரக்கத்தை நமது வாழ்வில் சுவைப்பதன் மூலமே தேவனை அறிய முடியும்.;அவரோடு உறவாட முடியும். இப்படி தேவனை அறியும் அறிவு இருந்ததால்தான் தாவீது, "கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதைச் சுவைத்துப் பாருங்கள்" எனக் கூறினார். கிறிஸ்துவை இப்படி அறிந்தவன் கிறிஸ்துவையே நாடுவான். உலகப் பொருட்களின் அற்ப ஆதாயத்துக்காக எதனையும் செய்ய மாட்டான். இவ்வுலக ஆதாயத்துக்காக மட்டுமா நாம் தேவனைத் தேடுகிறோம்? 

"இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால்  எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கத்தக்கவர்களாக இருப்போம்"    ( 1.கொரிந்தியர்  - 15:19)  என வேதம் எச்சரிக்கிறது.

இன்றய விசுவாசிகள் 

இன்றய விசுவாசிகள் பலரும் இயேசு கிறிஸ்துவை விட தாங்கள் செல்லும் சபை போதகர்களையும் பிரபல பிரசங்கிகளையும் அதிகம் விசுவாசிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் சுய முகங்களை இழந்தவர்கள்.  ஜெபித்து, வேதம் வாசித்து பரிசுத்த ஜீவியம் செய்வதன் மூலம் தேவனோடு ஐக்கியத்தை வளர்த்துக்கொள்ளாமல் பிரசங்கிகளை நம்பி அதிசயங்களையும் அதிசயங்களையும் காண ஓடுகின்றனர். எந்த ஊழியருக்கு கூட்டம் சேர்கிறதோ அந்த ஊழியக்காரன் இவர்கள் பார்வையில் வல்லமை உள்ளவர்கள்!

விசுவாசிகள் தேவ ஊழியர்களை தேடித் செல்வது தவறல்ல. ஊழியர்களது வழி காட்டுதல் நமக்கு உதவலாம். ஆனால், தகப்பனான தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு தான் முக்கியம்.  அதனை வளர்த்துக்கொள்ள வேண்டுமேயல்லாமல் அற்ப ஆதாயம் பெற ஊழியர்களை நாடுவது சரியான முடிவல்ல. 

பெரும்பாலான விசுவாசிகள் வாழ்க்கை மாற்றத்துக்குத் தயாராக இல்லை. அவர்கள் கிறிஸ்துவைத் தங்கள் குழந்தைகளுக்கு வரன் தேடித் தரும் ஒரு திருமண புரோக்கராக, தங்கள் காணிக்கைகளை இரெட்டிப்பாக்கித்தரும் ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபராக, வித்தைகள் காட்டும் ஒரு மாயாஜாலக் காரனாக  மட்டுமே எண்ணியுள்ளனர். ஆலயங்களிலும், கன்வென்சன் கூட்டங்களிலும் விசுவாசிகள் அளிக்கும் சாட்சிகள்  இப்படித்தான் நம்மை நம்பச்செய்கின்றன. 

இயேசு கிறிஸ்து அளிக்கும் பாவ மன்னிப்பு, ஆத்தும இரட்சிப்பு இவைகளைக் குறித்தோ அவர் வாக்களித்த நித்திய ஜீவனைக் குறித்தோ விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் ஆர்வமில்லை.

"எனக்கு இயேசு போதும்" என்று ஏன் நிறைவடையக்கூடாது?

தங்களுக்கு பொருளாதார ஆதாயத்தை உறுதியளிக்கும் வாக்குறுதிகளை வேதத்திலிருந்து பொறுக்கியெடுத்து அதனையே சொல்லிச் சொல்லி ஜெபிக்கும்  பலரும், "முதன் முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்போது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக்  கொடுக்கப்படும்"  ( மத்தேயு  -  6:33)  எனும் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்பி ஏன் தேவனுடைய ராஜ்யத்தை முதன் முதலாகத் தேடக்கூடாது? 

தேவ சமூகத்தில் விசுவாசிகள் தங்களைத் தாழ்த்தி ஜெபிக்கவேண்டும். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று தேவனோடு ஒரு ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு,  மோசே,  யோசுவா இன்னும் பல பரிசுத்தவான்களோடு பேசிய தேவன் இன்றும் ஜீவனுள்ளவராக இருக்கிறார். அவரே நம்மோடு பேசி நம்மையும்  வழி நடத்துவார். 

தேவனோடு வாஞ்சையுடன் ஜெபித்து உண்மையான ஆத்தும தாகத்தோடு கேட்டால் தேவன் நம் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைத் தருவார். அவர்களே நம்மை சரியான வழியில் நடத்திட முடியும். 

'உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள் " (எரேமியா   - 3:15)  என வாக்களித்துள்ளார் தேவன். நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தும் ஊழியர்களையே நாடுவோமாக!

மெய் ஆசீர்வாதம் - தேவ கிருபையே !

தேவ கிருபை என்பது தகுதியற்ற மக்கள்மீது தேவன் காட்டும் அன்பு என்று கூறலாம். தேவனது பரிசுத்தம், வல்லமை, இவைகளுக்குமுன் நாம் ஒன்றுமில்லாதவர்களே. ஆனாலும் ஒன்றுமில்லாத நம்மையும் ஒரு பொருட்டாகக்  கருதி  நம்மீதும் தேவன் அன்பு பாராட்டுகிறார். அதுதான் தேவ கிருபை!

அனைத்து ஆசீர்வாதங்களும்  - அவை  உலக பொருள் சார்ந்த ஆசீர்வாதங்களோ  ஆவிக்குரிய ஆசீர்வாதங்களோ  - தேவனுடைய சுத்தக்  கிருபையால்தான் நாமக்குக் கிடைக்கின்றன.

"நான் ஜெபித்தேன், வேதம் வாசித்தேன், உபவாசித்தேன், ஜெபக் கூட்டங்களுக்குப் போனேன் அதனால்தான் எனக்கு இது கிடைத்து எனப் பலரும் பல வேளைகளில் கூறுவதுண்டு. ஆனால் அது முற்றிலும்  சரியல்ல. நான் என்று மேன்மை  பாராட்ட இடமே இல்லாதபடி தேவ கிருபையே இவைகளை  எனக்குப் பெற்றுத் தந்தது எனக் கூறுவதே சாலப்  பொருந்தும்.  எனவே தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்" (யோவான் - 3:27). ஆம், தேவ  கிருபைக்கு விலைக் கொடுக்க முடியாது. எந்தக் காணிக்கையும் அதற்கு ஈடாகாது.

தேவ கிருபைக்கு இறைஞ்சுவோம் ! அதுவே மெய்யான ஆசீர்வாதம். அப்போஸ்தலரான பரிசுத்த பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய அறிவுரையுடன் இச் சிறுநூலை முடிப்பது சிறப்பாக இருக்குமென எண்ணுகிறேன்.

"........தேவ பக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிற மனுஷர்களால் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப் பட்டவர்களை விட்டு விலகு. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்.......பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது. சிலர் அதை இச்சித்து விசுவாசத்தை விட்டு விலகி அநேக வேதனைகளாலே தங்களை உருவ குத்திக்கொண்டார்கள்......நீயோ தேவனுடைய மனுஷனே  இவைகளை விட்டோடி தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடைந்திட நாடு.  விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு , நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய் "  (1.தீமோத்தேயு - 6:5-12)  



நிறைவு பெற்றது 

No comments: