இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, November 22, 2022

H. A. கிருஷ்ணபிள்ளை

                         தொகுப்பு : சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ கம்பர் எனப் பெயர்பெற்ற ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (ஏப்ரல் 231827 - பெப்ரவரி 31900ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தவர், வைணவ சமயத்தவர் ஆவார். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. கிருஷ்ணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி குலவித்தையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகக் கற்று அறிந்தார். 

அக்காலகட்டத்தில் நெல்லையில் பல கிருத்தவ சங்கங்கள் சிறந்தமுறையில் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. அவ்வாறு வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் தொண்டு புரிந்துவந்தார். கிருத்தவ சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரம் என்ற சிற்றூரில் ஜி.யு. போப்  ஒரு கல்லூரி அமைத்து நடத்திவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல்லிடம்  ஒப்படைக்கபட்டது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருஷ்ண பிள்ளையைக் கால்டுவெல் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். 

சாயர்புரத்தில் வேலை யேற்று ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்றது. 

ஏற்கனவே இவரது உறவினர் சிலர், கிருத்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதன் செம்மையை அடிக்கடி இவரிடம் எடுத்துரைத்தனர் அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். இதனால் கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார்.

இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார் பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.

கிருஷ்ண பிள்ளை கிறிஸ்தவ நூல்களை விரும்பிப் படித்த காலத்தில் ஜான் பனியன் (1628-1688) எழுதிய தி பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (The Pilgrim's Progress) என்னும் நூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தன் சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் அந்நூல் சொல்வது போல உணர்ந்தார். இரண்டு பாகங்கள் கொண்ட அந்த நூலை அடிப்படையாக வைத்து இரட்சணிய யாத்திரிகம் என்னும் செய்யுளை இயற்றினார். மூலநூலை அப்படியே மொழியாக்கம் செய்யாமல் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளோடு இணைத்து தமிழ் கிறிஸ்தவ மரபின் முக்கியமான படைப்பாக எழுதினார்.

இரட்சணிய யாத்திரீகம் பாளையங்கோட்டையில் இருந்து வெளியான 'நற்போதகம்’ என்னும் இதழில் பகுதி பகுதியாக வெளியானது. இந்த நூல் 3800 செய்யுள்களைக் கொண்டது. அக்காலத்தில் புலவர்களின் திறமைக்கு சான்றாகக் கருதப்பட்ட  யமகம்,  திரிபு, சிலேடை, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று இதில் உள்ளது. ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலை எழுதிய நோக்கத்தை சொல்லும்போது "மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்" என்கிறார்.

இறைவனைப் புகழும் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திருஅகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், அவர் கிறிஸ்தவரான வரலாறு குறித்த தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் எழுதியுள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார்.

வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:

"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."

கிருத்தவ சமய சார்பான சிறந்த நூல்களை இலக்கியங்களைப் படைத்த இவர் 1900 ஆம் ஆண்டு தம் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார். 

கிருஷ்ணபிள்ளை இயற்றிய நூல்கள்:- 

செய்யுள் நூல்கள்

  • போற்றித் திருஅகவல்
  • இரட்சணிய யாத்திரீகம்
  • இரட்சணிய மனோகரம்
உரைநடை நூல்கள்
  • இலக்கண சூடாமணி
  • நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு
  • இரட்சணிய சமய நிர்ணயம்
தொகுப்பு நூல்கள்
  • காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
  • இரட்சணிய குறள்
  • இரட்சணிய பாலபோதனை

No comments: