ஆதவன் 🖋️ 645 ⛪ நவம்பர் 03, 2022 வியாழக்கிழமை
"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( உபாகமம் 20 : 1 )
கிறிஸ்தவர்கள் பலரும் இன்றைய தியானத்துக்குரிய மேற்படி வசனத்தைப் படிக்கும்போது இந்த உலகத்தில் எதிரிகள் என்று இவர்கள் கருத்துபவர்களை நினைத்துக்கொள்வதுண்டு. பக்கத்துவீட்டுக்காரர்கள், அல்லது பணி செய்யும் இடங்களில் எதிராகச் செயல்படுபவர்கள் இவர்களையே எதிரிகள் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால், புதிய ஏற்பாட்டின்படி நமக்கு மாம்சீக எதிரிகள் கிடையாது. அனைவரையும் மன்னித்து மறப்பதே கிறிஸ்தவனின் பண்பாக கூறப்பட்டுள்ளது. பழிவாங்குவதல்ல.
ஒருமுறை அலுவலகத்தில் தனது மேலதிகாரி தனக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறிய ஒரு சகோதரர் என்னிடம், "அவர்களது குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." என்ற வசனம் தனக்கு உணர்த்தப்பட்டதாகக் கூறி கர்த்தர் ஜெயம் தருவார் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், உண்மையில் இந்தச் சகோதரிடம்தான் தவறே இருந்தது. பிற்பாடு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று அறிந்தேன்.
அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் ஆவிக்குரிய வசனமாக புதிய ஏற்பாட்டு மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நமக்கு எதிரிகள் நாம்தான். நம்மை வஞ்சிக்கும் பாவ ஆசைகளும் பாவச் சூழ்நிலைகளும்தான் நமக்கு எதிரிகள். ஆவிக்குரிய வாழ்விலிருந்து நம்மை விழத்தள்ளுவதற்கு சாத்தான் கொண்டுவரும் சவால்களே இந்த எதிரிகள்.
குதிரைகளையும், இரதங்களையும், நம்மிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்கள் போலவும் இருக்கும் மிகப்பெரிய பாவச் சூழ்நிலைகளைக்கண்டு நாம் பயப்படக்கூடாது; அவைகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது. நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடுகூட இருக்கிறார். அவர் நிச்சயமாக நம்மைக் கொடிய பாவங்களிலிருந்தும் பாவப் பழக்கங்களிலிருந்தும் சாத்தானின் தந்திரங்களிலிருந்தும் அந்தகார சக்திகளிடமிருந்தும் விடுவிப்பார்.
அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இதனால்தான், "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்று கூறுகின்றார்.
மேலும் அப்போஸ்தலரான பவுல் கூறும்போது, "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6 : 13-17 ) என்கின்றார்.
அன்பானவர்களே, இன்றைய வசனம் "நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில்" என்று ஆரம்பிக்கின்றது. ஆம், இந்த உலகில் ஆவிக்குரிய யுத்தம் செய்யப் போகும்போது என்பது பொருள். அப்படி நாம் போகும்போது அப்போஸ்தலரான பவுல் கூறியுள்ள மேற்படி ஆயுதங்கள் நம்மிடம் இருப்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். மட்டுமல்ல அவை மழுங்கிப்போகாதவாறும் காத்துக்கொள்ளவேண்டும். அப்போது மட்டுமே நாம் இத்தகைய ஆவிக்குரிய போராட்டங்களில் வெற்றிபெற முடியும்
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment