பெரிய பர்வதமே, நீ சமபூமியாவாய்

 ஆதவன் 🖋️ 653 ⛪ நவம்பர் 11,  2022 வெள்ளிக்கிழமை

"பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்" ( சகரியா 4 : 7 )

பாபிலோனில் அடிமைகளாய் இருந்த இஸ்ரவேலரை கோரேஸ் ராஜா விடுவித்து, நேபுகாத்நேச்சார் தகர்த்துப்போட்ட எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கு அனுமதியளித்து அனுப்பினான்.  அதற்கு இணங்க இஸ்ரவேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிவந்து ஆலயத்தைக் கட்டத்துவங்கினர். ஆனால், யூதர்களின் எதிரிகள் அதற்குத் தடைசெய்தனர். கோரஸ் ராஜாவுக்குப்பின்பு வந்த அர்தசஷ்டா ராஜாவுக்கு பொய் புகார்களை அனுப்பி ஆலயக் கட்டுமானத்தைத் தடைசெய்தனர். 

செருபாபேல் தலைமையில் ஆலயக் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரவேலருக்கு இது மிகப்பெரிய தடையாக இருந்தது. அவர்கள் பரலோகத்தின் தேவனை நோக்கி  முறையிட்டு அழுது ஜெபித்தனர். அவர்களைத் திடப்படுத்த கர்த்தரது வார்த்தைகள் சகரியா தீர்க்கதரிசி மூலம் வந்தது. இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனம் சொல்கின்றது, "செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ). செருபாபேலே பயப்படாதே, எனது ஆவியினால் நான் இதனைச் செய்து முடிப்பேன் என்பதே கர்த்தர் கூறுவதன் பொருள்.  

அன்பானவர்களே, இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் நமக்குப் பல்வேறு தடைகள் ஏற்படலாம். தோல்விகள் நிகழலாம். ஆனால் நாம் செருபாபேலைபோல கர்த்தருக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து, ஏற்புடைய செயல்களைச் செய்வோமானால்  செருபாபேலுக்குச் சொல்லியபடி பெரிய பர்வதமும் நமக்குமுன் சமபூமி ஆகிடும். 

செருபாபேல் எனும் பெயருக்குப்பதிலாக உங்கள் பெயரை அந்த இடத்தில சேர்த்து உச்சரித்து விசுவாசம்கொள்ளுங்கள். உதாரணமாக, நான் இதனை, "பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? ஜியோ பிரகாஷ் முன்பு நீ சமபூமியாவாய்" என்று கூறிக்கொள்வேன். அன்பானவர்களே, இப்படிச் சொல்லும்போது நமக்குள் விசுவாசம் ஏற்படும்.

தரியு எனும் ராஜா பாபிலோனில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது செருபாபேலுக்குக் கூறப்பட்ட கர்த்தரது வார்த்தை நிறைவேறியது. மலை போன்ற தடைநீங்கி  சமபூமியாக மாறியது. எந்தத் தடையும் இல்லாமல் எருசலேம் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. 

இதற்கு முக்கிய காரணம், செருபாபேல் தனது சுய பலத்தை நம்பவில்லை. "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." என்ற வார்த்தைகளின்படி கர்த்தரது ஆவி செயல்பட அவர் பொறுமையோடு காத்திருந்தார். 

நாமும் இதுபோலச்  செயல்படுவோம். பிரச்சனைகள் ஏற்படும்போது நமது சுய பலத்தை நம்பிச் செயல்படாமல் கர்த்தரது பலத்தை நம்பி செயல்படுவோம். அப்படி நாம் செயல்படும்போது ஆரம்பம்முதல் கர்த்தரது கிருபையின் கரம் நம்மோடு இருக்கும்; தடையில்லாத வெற்றி நமக்கு உண்டாகும். இதனையே, "தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்"  என்று கூறப்பட்டுள்ளது. ஆம், கர்த்தரை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் நமது அனைத்து காரியங்களிலும் அவரது கிருபையின் கரம் இருக்கும்; நமக்கு வெற்றி கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்