ஆதவன் 🖋️ 650 ⛪ நவம்பர் 08, 2022 செவ்வாய்க்கிழமை
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." ( யோவான் 6 : 27)
இன்று தங்களது உலகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வெய்யிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் எண்ணற்ற மனிதர்களை நாம் பார்க்கின்றோம். எதற்காக மனிதர்கள் இப்படிக் கடினமாக உழைக்கின்றனர்? தங்களது நல்வாழ்வுக்காகவும், தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காகவும்தான்.
இப்படி உழைப்பதில் தவறில்லை; உழைக்காமல் இருப்பதுதான் தவறு. நாம் நிச்சயமாக உழைக்கவேண்டும், அத்துடன் இயேசு கூறும் அறிவுரையையும் நாம் வாழ்வில் கவனத்தில் கொள்ளவேண்டும். "நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;" என்கின்றார் இயேசு கிறிஸ்து. ஆம், உலக வாழ்க்கைக்காக மட்டுமல்ல, நித்திய ஜீவனுக்காகவும் நாம் உழைக்கவேண்டியிருக்கின்றது. உலக செல்வத்துக்காக உழைப்பதைவிட, ஆத்தும மீட்புக்காக நாம் அதிகம் உழைக்கவேண்டியுள்ளது.
நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே உழைப்பவன் நேர்மையானவனாக, தனது உழைப்புக்குக் குறிக்கப்பட்ட சம்பளத்துடன் நிறைவடைவான். லஞ்சம், ஊழல், சுரண்டல் செய்து சம்பாதிக்க முயலாமாட்டான்.
நேர்மை என்பது அதிக பணம் சம்பளமாகக் கிடைப்பதால் வந்த்துவிடுவதில்லை. அது மனிதன் தானாக உருவாக்கவேண்டிய குணம். மாதம் ஐம்பதினாயிரம் அறுபதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும்போது வெறும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் மனிதன் உண்மையுள்ளவனாக வாழ்கின்றான். எனவே லஞ்சம் என்பது ஒரு வியாதி. அந்த வியாதிமாறவேண்டுமே தவிர அவனுக்கு எவ்வளவு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும் அந்த குணம் மாறாது. இதற்கு காரணம் அவர்கள் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல அழிந்துபோகிற போஜனத்திற்காக (அதாவது உலகத் தேவைகளை மட்டுமே நிறைவேற்ற) உழைக்கின்றனர்.
சகேயு எனும் மனிதனைக் குறித்து லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். இந்த சகேயு மக்களிடம் வரி வசூலிக்கும் மனிதர்களுக்குத் தலைவனாக இருந்தான். அதாவது ஒரு வருவாய் அதிகாரி போல. இவன் முதலில் அழிந்து போகின்ற போஜனத்துக்காக உழைத்தபோது துன்மார்க்கனாக மக்களிடம் அதிக வரி வசூலித்துத் தனது பையை நிரப்புபவனாக இருந்தான். ஆனால் நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனமான இயேசு கிறிஸ்துவை அறிந்தவுடன் அவனது எண்ணமே மாறிவிட்டது. தான் துன்மார்க்கமாக உழைத்து சேர்த்து வைத்துள்ள அழிந்துபோகிற செல்வங்கள் பெரிதல்ல, நித்திய ஜீவனுக்கான வழியை எப்படியாவது தேடிட உழைக்க வேண்டும், அதுவே பெரிது எனும் எண்ணம் அவனுக்குள் வந்தது.
"சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்." ( லுூக்கா 19 : 8 ) நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டான். ஆம், கிறிஸ்து ஒருவனுக்குள் வரும்போது அவன் மாற்றமடைந்து நித்தியஜீவனுக்கு நேரான செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.
இன்று ஆலயங்களுக்குச் சென்று ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்பவர்களும், பெரிய பெரிய ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான காணிக்கைகள் அனுப்பும் பலரும் குறுக்குவழியில் பணம் சேர்ப்பதைக் குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்களது எண்ணம் பணத்தைக் காணிக்கை கொடுத்து தேவ ஆசீர்வாதத்தைப் பெறுவதுதான். ஆனால் பணத்தின்மூலம் ஆசீர்வாதம் பெற எண்ணுவது வாழ்வில் சாபத்தையே கொண்டுவரும்.
மந்திரவாதி சீமோன் இப்படி ஆசீர்வாதம் பெற எண்ணினான். அப்போஸ்தலரான பேதுரு அவனை நோக்கி: "தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 20 ) என்று சபிப்பதைப் பார்க்கின்றோம்.
அன்பானவர்களே, உலகத்தில் வாழ்வதற்கு நேர்மையாக உழைப்போம். அத்துடன் நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக ஏற்ற செயல்களையும் நடப்பிப்போம். கடந்த காலங்களில் தவறாக உழைத்து பணம் சம்பாதித்திருந்தால் கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்போம். தவறைத் திருத்திக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment