Sunday, July 25, 2021

தற்பெருமை


                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"ன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." (  2 கொரிந்தியர் 10 : 18 ) "For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth."

(  2 Corinthians 10 : 18 )

 

தற்புகழ்ச்சி சிலருக்குத் தாராளமாக வரும். வார்த்தைக்கு வார்த்தைத் தங்களது பெருமைகளைக் கூறி மகிழ்வர். ஆனால் ஒன்று... தற்பெருமைக்காரன் பேச்சை வேறு வழியின்றி கேட்பவர்கள் பின்பு அதனை தங்களுக்குள் சொல்லிச் சிரிப்பர் என்பது தற்பெருமை பேசுபவனுக்குத் தெரியாது. அரசியல்வாதிகள் தற்பெருமையில் கைதேர்ந்தவர்கள்.

 

ஆனால் வேதம் கூறுவதுபோல தற்பெருமை பேசும் மனிதன் உத்தமனாய் இருப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் ஆலயங்களுக்கு ஏதாவது சிறிய அன்பளிப்பு அளித்திருந்தாலும் அதில் பெரிய எழுத்துக்களில் தங்களது பெயரை பொறித்திடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஒரு ஆலயத்தில் நான் பார்த்த ஒரு காரியம், ஒருவர் மின் விசிறி ஒன்று காணிக்கை அளித்துள்ளார். அதில் மூன்று இறக்கைகளிலும் ஒன்றில் அவரது பெயர், மற்றொன்றில் மனைவி பெயர், இன்னொன்றில் தனது மகள் பெயர் எனப் பொறித்திருந்தார். இவர்களை புத்தியில்லாதவர்கள் என்று வேதம் கூறுகின்றது

 

"........தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல(  2 கொரிந்தியர் 10 : 12 ) எனக் கூறுகின்றார் பவுல் அடிகள்.

 

கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்பவனுக்குக் கிறிஸ்துவின் தாழ்மை வேண்டாமா? இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் கூட பெருமைக்கு அடிமையாகி தங்களைக் குறித்து, தங்கள் வல்லமைப்பிரதாபத்தைக் குறித்து பெருமை பாராட்டுவதற்கு அளவே இல்லை. தங்களுக்குத் தாங்களே , " தீர்க்கதரிசன வரம் பெற்றவர்" ," குணமாக்கும் வரம் பெற்றவர்",  "அப்போஸ்தலர்" போன்ற பட்டங்களைக் கொடுத்து போஸ்டர் அடித்து விளம்பரம் தேடுகின்றனர். பலருடைய ஆடை அலங்காரம் வேறு சினிமா நடிகர்களை மிஞ்சுகிறது. இவை பிற மத மக்கள் மத்தியில்கூட கேலியாகப் பேசப்படுகிறது.


இப்படித்  தன்னை விளம்பரப்படுத்தும் மனிதன் எப்படிக் கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்க முடியும்? அல்லது இந்தக் கவர்ச்சி போதகனுடைய போதனை யாரை நல்வழிப்படுத்த முடியும்? சாதாரண மனிதர்கள்கூட மிகத் தாழ்மையானவர்களாக வாழ்கின்றார்களே? சினிமா நடிகனுக்கு அவனது தொழிலுக்கு பகட்டு ஆடைகள் கைகொடுக்கும். ஆனால் கிறிஸ்துவைப் போதிப்பவனுக்கு கிறிஸ்துவின் குணங்கள்தான் கைகொடுக்கவேண்டும்.

 

கிறிஸ்துவின் தாழ்மை குறித்து வேதம் இவ்வாறு  கூறுகிறது, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (  பிலிப்பியர் 2 : 6 - 8 )

 

தேவாதி தேவன் தன்னைத் தான் படைத்த மனிதனுக்கு ஒப்பாக மாற்றி அந்த மனிதர்கள் கையால் மரிக்கவும் முன்வந்தார். ஆனால் அற்ப மனிதர்கள் பெருமைபேசி அழிக்கின்றனர். ஆம், 'அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.(நீதிமொழிகள்-16:18) "Pride goeth before destruction, and an haughty spirit before a fall." (  Proverbs 16 : 18 )

 

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார் என வேதம் கூறுகின்றது. அற்பத்தனமாக நம்மை நாமே உயர்வாகப் பேசிப் பேசி தாழ்ந்து போய்விடக் கூடாது . ........"ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர் களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." (  1 பேதுரு 5 : 5 )

 

அன்பானவர்களே, தாழ்மையை அணிந்துகொண்டு தேவ கிருபையைப் பெற்று ஆவிக்குரிய வாழ்வில் வளர்வோம் . அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார், " கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார் " (யாக்கோபு - 4:10)                              



No comments: