ஆதவன் 🖋️ 656 ⛪ நவம்பர் 14, 2022 திங்கள்கிழமை
"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." ( சங்கீதம் 25 : 13 )
எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்க இருப்பதை அறிந்துகொள்வதில் எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் தேவன் மனிதர்களது எதிர்காலத்தை மறைவாகவே வைத்துள்ளார். ஆனால் அதனை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் பல விதங்களில் முயல்கின்றனர். மரித்த ஆவிகளிடம் குறி கேட்கின்றனர், குறிசொல்பவர்களையும், ஜோசியர்களையும் நாடி ஓடுகின்றனர்.
ஜோசியர்கள் கூறும் காரியங்கள் சில வேளைகளில் உண்மைபோலத் தோன்றும். காரணம் அவர்களில் பலர் நமது கடந்த காலத்தைக்குறித்துச் சரியாகச் சொல்வதுண்டு. அசுத்த ஆவிகளின் வல்லமைகளால் இது சாத்தியமாகின்றது. ஆனால், நமது எதிர்காலம் குறித்து நம்மை உருவாக்கிய கர்த்தர் மட்டுமே அறிவார்.
இன்றைய வசனத்தில் சங்கீத ஆசிரியர், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றார். அதாவது, நாம் கர்த்தருக்குப் பயப்படும் ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அவர் நமக்கு நாம் தெரிந்து நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார். நமக்கு வாழ்க்கையில் அவர் வைத்துள்ள சித்தத்தை வெளிப்படுத்துவார்.
ஜோசியக்காரர்கள் கூறுவதுபோல தேவன் கூறுவதில்லை. மாறாக, நம்மைக்குறித்த அவனது சித்தத்தை மட்டும் வெளிப்படுத்துவார். ஆபிரகாமிடம் இப்படித்தான் கூறினார். "உன் சந்ததியைக் கடற்கரை மணலைப்போலவும் வானத்து விண்மீன்களைப்போலவும் பெருகச் செய்வேன் என்று கூறினார். அதனை விசுவாசித்து ஆபிரகாம் தனது வாழ்க்கையை எதிர்கொண்டார். அதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றது.
அதுமட்டுமல்ல, "அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." என்று இந்த வசனம் கூறுகின்றது. கர்த்தருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழும்போது நமது ஆத்துமா நன்மைகளைக் காணும். மட்டுமல்ல, நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்கூட நல்லதொரு வாழ்க்கை வாழும். அதனையே "அவன் சந்ததி" என்று இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
அன்பானவர்களே, நாம் கர்த்தருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழும்போது மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு. விசுவாசத்தோடு கர்த்தரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்த ஆபிரகாமை நினைத்துக்கொள்வோம். ஒரு தனி மனிதனாக இருந்த அவனை தேவன் ஒரு மிகப்பெரிய வலுவான தேசமாகவே மாற்றினார். இன்றைய வசனம் கூறுவதுபோல அவனது சந்ததி ஆசீர்வாதமான சந்ததியாக விளங்குகின்றது.
கர்த்தருக்குப் பயப்படுத்தல் என்பது ஒருகாவல்துறை அதிகாரியைப்பார்த்தோ அல்லது ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்தோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. மாறாக, தீமைக்கு விலகி வாழ்வதே கர்த்தருக்குப் பயப்படுதல்.
அப்படி நாம் வாழும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல தேவன் நமக்காக ஏற்பாடு செய்துள்ள வழியை அதாவது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்துவார். நமது சந்ததியும் இந்த உலகத்தில் ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை வாழும். இதனைத் தவிர்த்து அநியாய வாழ்க்கை வாழ்ந்து அதிக பொருள் சேர்த்து வைப்பதால் நமது சந்ததி வாழாது. கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம். மெய்யான ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment