ஆதவன் 🖋️ 671 ⛪ நவம்பர் 29, 2022 செவ்வாய்க்கிழமை
"நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 29 )
ரோமாபுரியில் நியாய விசாரணைக்குட்பட்டிருந்த அப்போஸ்தலரான பவுல் தனதுபக்க நியாயத்தை எடுத்துரைக்கும்போதும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார். அவரது பேச்சு அகிரிப்பா ராஜாவையே கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்படி தூண்டக்கூடியதாக இருந்தது. "அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 28 )
அவனுக்குப் பதில் மொழியாகத்தான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது தனது சுவிசேஷத்தைக் கேட்கும் எல்லோரும் தன்னைப்போல கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று பவுல் விரும்பினார்.
இதுவரை உலகினில் பிறந்த எவரும் கூறத்துணியாத; கூறமுடியாத வார்த்தைகளை அபோஸ்தலரான பவுல் கூறினார். ஆம், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 1 ) என்றார்.
அன்பானவர்களே, இன்று நாம் இதுபோலக் கூற முடியாதுதான். ஆனால் அவர் கிறிஸ்துவின்மேல் எவ்வளவு வைராக்கியமாக அன்பு கொண்டிருந்தார் என்பது அவரது வாழ்கையினைப் பார்த்தால் புரியும். அந்த அன்பு, அவரை கிறிஸ்துவுக்காக வாழவும், அவரைப் பிரதிபலிக்கவும் அவருக்காக மரிக்கவும் தூண்டியது.
இன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளின் வாழ்க்கை நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றிக் கூறும்போது சிலர் அவரது மனிதத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், "அவர் தேவ குமாரன், அவரைப்போல நாம் வாழ முடியாது என்று சாக்குப்போக்குக் கூறுவதுண்டு. அவர்களுக்குப் பதில் அப்போஸ்தலரான பவுலடிகளின் வாழ்க்கையும் அவரது பேச்சும்.
கிறிஸ்து தேவ குமாரன் எனவே அவரைப்போல வாழ முடியாது என்பவர்கள், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின்பற்றலாமல்லவா?
பல புனிதர்களும் மனிதர்களாக இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்தான். ஆனால் பரிசுத்த வாழ்க்கை வாழத் தங்களை அர்ப்பணித்தவர்கள். சாதாரண உலக மனிதர்கள்கூட, எப்போதுமே "நமது இலக்கு மேலானதாக இருக்கவேண்டும்" என பிறருக்கு அறிவுரை கூறுவார்கள். அப்படியிருக்க, ஆவிக்குரிய நமக்கோ அந்த இலக்கு எல்லாவற்றையும்விட மேலானதாக இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!!!
நமது பந்தயப் பொருளான கிறிஸ்துவைநோக்கி நாம் ஓடவேண்டியது அவசியம். அப்படி ஓடிட பரிசுத்த ஆவியானவரின் துணையும் வழிகாட்டுதலும் நமக்கு அவசியம். நமது இலக்கு கிறிஸ்துவைப்போலவும் குறைந்தபட்சம் அப்போஸ்தலரான பவுல் அடிகளைப்போலவும் மாறுவதாக இருக்கட்டும். அப்படி நம்மை மாற்றி வாழ்ந்திட முயலுவோம்; ஜெபிப்போம். கர்த்தர்தாமே நமது ஆசை நிறைவேறிட உதவிடுவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment