Friday, November 18, 2022

கதவைத் தட்டும் இயேசு

 ஆதவன் 🖋️ 661 ⛪ நவம்பர் 19,  2022 சனிக்கிழமை

"நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 5 : 2 )

தேவன் மனிதர்களது தனி சுதந்திரத்தை மதிக்கின்றார். எனவே அவர் வலுக்கட்டாயமாக யாரையும் தன்னிடம் வரவேண்டுமென்று வற்புறுத்துவதில்லை. ஆனால், எல்லோரும் மனம்திரும்பி தன்னிடம் வரவேண்டுமென்று விரும்புகின்றார். அதற்காக மனிதர்கள் தன்னை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றார். அவரை ஏற்றுக்கொள்வதும் மறுதலிப்பதும் மனிதர்களது தனிப்பட்ட விருப்பதைப்  பொறுத்தது.   

இன்றைய வசனத்தில் சாலமோன் தனது அனுபவத்தைக் கூறுகின்றார். அவர் உறங்கினாலும், அவரது இருதயம் விழித்திருந்து என்கின்றார்.  "உறக்கத்திலும் கதவைத் தட்டும் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்" என்பது  நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம். நாம் இன்று இதுபோல தேவனை அறியாமல் ஆவிக்குரிய தூக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். அனால், தேவன் கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்கத்தக்கவர்களாக நம் இருதயம் விழிப்பாய் நாம் இருக்கவேண்டியது அவசியம். 

"என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது." எனும் வார்த்தைகள்  நமக்காக இயேசு கிறிஸ்துப்  பட்டப் பாடுகளை நினைவுறுத்துகின்றன.  இரவின் தூறலினாலும், பனியின் குளிரினாலும் கஷ்டத்தை அனுபவித்து அவர் நமக்காக வந்துநின்று கதவைத் தட்டுகின்றார். சிலுவையில் அவர் பட்டப் பாடுகளும், கசையடிகளும் இதனைப் படிக்கும்போது நமக்கு நினைவு வருகின்றன. அந்த வேதனையோடு வந்து நின்று நம் கதவைத் தட்டுகின்றார். 

வெளிப்படுத்தின விசேஷத்திலும் தேவன் இதேபோல நமது இதயக் கதவைத் தட்டுவதைக் குறித்துக் கூறுகின்றார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

அன்பானவர்களே, இற்றைய வசனம் நமக்கு வற்புறுத்துவது விழிப்புள்ள ஒரு இருதயத்தோடு வாழவேண்டும் என்பதையே.  நாம் வெறும் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் அவரது குரலை நாம் கேட்கமுடியாது. தேவனை அறியவேண்டும் எனும் ஆவல் இருக்குமானால் நிச்சயமாக அவர்  கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கலாம்.  

"ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்."  என்பது ஆழமான இறை அனுபவத்தைக் குறிக்கின்றது. நாம் ஒருவரது வீட்டிற்குச் சென்று உணவருந்தவேண்டுமானால் அவரோடு நமக்கு நெருங்கிய உறவு இருக்கவேண்டும்.  எல்லோரது வீட்டிலும் நாம் சென்று உணவருத்தமாட்டோம். மேலும் உணவருந்தும்போதுதான் பல விஷயங்களை நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வோம். அத்தகைய உறவோடு தேவன் நம்மோடு வாழ ஆசைப்படுகின்றார். 

நித்திரை செய்தாலும் தேவனது குரலைக் கேட்கும் பக்குவம் நமக்கு வரும்படி ஆசைப்படுவோம். தேவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கிப் பல அடிகள் நெருங்கி வருவார். "ஆண்டவரே, நான் உம்மை அறியவேண்டும்" என்று உண்மையான உள்ளதோடு வேண்டும்போது  கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கமுடியும்; நாம் கதவைத் திறக்க முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: