நம்மை விசாரிக்கிற தேவன் !

நம்மை விசாரிக்கிற தேவன் !

                                                  சகோ. எம். ஜியோ பிரகாஷ் 



மது தேவன் நம்மை விசாரிக்கிறவர் என வேதம் கூறுகிறது. நாம் ஒருவரை விசாரிக்கிறோம் என்றால் அவரைப்பற்றி  நமக்குத் தனிப்பட்ட அக்கறை இருக்கிறது என்று பொருள். அப்படி நாம் அக்கறை செலுத்தும் ஒருவரை ஏதாவது ஒரு முறையில் தொடர்புகொண்டு அவரது நலம் பற்றி நாம் விசாரிக்காமல் இருக்கமாட்டோம்.

" அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)  

மருத்துவ கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட ஒரு மாணவிக்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பணம் இல்லாததால் அவள் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அவளைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் அவளுக்கான படிப்பு செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உதவ முன்வந்தார். இப்போது அந்த மாணவி எந்தக் கவலையுமில்லாமல் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அந்த மாணவியின் பணக்  கவலைகளையெல்லாம்  தொழிலதிபர் எடுத்துக்கொண்டார்.

இதுபோலவே தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நமது கவலைகளையெல்லாம் எடுத்துக்கொள்வார். நமது நம்பிக்கையை விசுவாசத்துடன் அவர்மேல் வைத்துவிடவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரையே பற்றிக்கொண்டால் நிச்சயம் அவர் நம்மைக் கைவிடமாட்டார்.

மேலே குறிப்பிட்டுள்ளது ஒரு உதாரணம் மட்டுமே. ஆனால் தேவன் நாம் மனிதர்கள்மேல் நம்பிக்கை வைப்பதை விரும்புவதில்லை. வேதம் கூறுகிறது, "மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம் " (சங்கீதம் - 118:8) மனிதர்க்கள் மாறக்கூடியவர்கள். அல்லது ஒரு எதிர்பாரா சூழல் எற்பட்டு நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்கள் உதவ முடியாமல் போகலாம்.

தேவ பக்தியுள்ள ஒரு பொறியாளரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நான் படித்திருக்கிறேன். ஒரு முறை நெடுஞ்சாலைத்துறை சாலையை அகலப்படுத்தியபோது சாலையோர மரங்களை வெட்டி அகற்றவேண்டிய பொறுப்பை அவரிடம் விட்டது. அவர் தலைமையில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட மரத்தினருகே வந்தபோது அந்த மரத்தின் கிளைகளில் ஒரு குருவிக் கூடு இருப்பதை அவர் கண்டார். மரத்தில் ஒரு மனிதனை ஏறச் சொல்லி கூட்டினுள் பார்க்கச் சொன்னார். அங்கு சில குருவிக் குஞ்சுகள் இருந்தன.

அவற்றின்மீது பரிவுகொண்ட அந்தப் பொறியாளர் தனது உதவியாளர்களிடம் நாம் இப்போது இந்த மரத்தை வெட்ட வேண்டாம். மற்ற மரங்களை வெட்டிவிட்டு பிற்பாடு இதை வெட்டலாம். இன்னும் பத்து அல்லது   பதினைந்து தினங்களுக்குள் குருவி குஞ்சுகள் பறந்து சென்றுவிடும்  அதன்பின்பு வந்து இதனை வெட்டலாம் என்றார்.  

அப்படியே அந்த மரத்தை விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டினர். பத்து   பதினைந்து தினங்களுக்குப் பிறகு அந்த மரத்தை வெட்ட வந்தனர். அன்று அந்தப் பொறியாளர் மிகுந்த மனச் சோர்வுடன் இருந்தார். ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு பலனும் ஏற்படவில்லையே... பல பிரச்சனைகள் தொடரத்தானே  செய்கின்றன எனும்  சோர்வு அவருள் இருந்தது. மரத்தில் ஏறிப் பார்த்தபோது கூட்டினுள் குருவிக் குஞ்சுகள் இல்லை.  எனவே மரத்தை வெட்டிவிடுமாறு கூறினார். மரம் வெட்டப்பட்டு கீழே விழுந்தபோது அவர் ஏதோ ஆவலில்  சென்று அந்தக்  குருவிக் கூட்டினை எடுத்துப் பார்த்தார்.

அங்கு அவர் முதலில் கண்டது ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வேத வசனம். அது :-  " அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)  ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக் குழந்தைகள் எழுதிய வசனம் அது. கூடு கட்டிய குருவி அந்தத் தாளையும் எடுத்துவந்து கூடு காட்டியுள்ளது. அது அவரது ஆவிக்குரிய வாழ்வில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. எழுதப்பட்ட வேத வசனமோ அதன் அர்த்தமோ தெரியாமல் கூடுகட்டிய குருவியை அந்த வசனத்தின்படி பாதுகாத்த தேவன் நமது துன்பங்களை போக்கி நம்மைப் பாதுகாக்க மாட்டாரா? எனும் எண்ணம்  அவருக்குள் வந்தது . அவரது ஆவிக்குரிய வாழ்வு மேம்பட்டது.

தாவீது ராஜா,  "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் , அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை"  (சங்கீதம் - 16:8) என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். நாமும் கர்த்தரை முன்னிறுத்தி செயல்படுவோமெனில்,  நமது நம்பிக்கையையும்  கவலைகளையும் அவர்மேல் வைத்து நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில், "தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்"   (சங்கீதம் - 18:30)

இன்று நாம் பல காரியங்களை பற்றி கவலை கொண்டவர்களாக இருக்கிறோம். காரணம், நாம் தேவனை நோக்கிப் பார்ப்பதைவிட  சூழ்நிலைகளையே அதிகம் பார்க்கிறோம். தேவன் எந்தச் சூழ்நிலையையும் மாற்ற வல்லவர் என்பதை நாம் சிந்திக்கத்  தவறி விடுகிறோம்.

இயேசு கிறிஸ்துக் கூறினார், "கவலைப்படுகிறதனால் உங்களில் எவன் தன்  சரீர அளவோடு ஒரு முழத்தைக்  கூட்டுவான்? (மத்தேயு - 6:27) ஆம் கவலைப் படுவது என்பது நமது வாழ்க்கையில் எந்த மாறுதலையும் கொண்டுவராது. கவலைத்தீர என்ன வழி என்று சிந்தித்துச் செயல்படுவதே சிறப்பு.

உதிரப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி லூக்கா 8 வது அதிகாரத்தில் படிக்கிறோம். அந்தப் பெண் நோயால் கவலைகொண்டவளாக அதற்கு குணம் தேடி தனது சொத்துக்களையெல்லாம் வைத்திய செலவுக்குச் செலவழித்து கவலை கொண்டவளாக இருந்தாள். ஆனால் என்று அவள் தனது சுய முயற்சியோ அல்லது வைத்தியர்களது முயற்சியோ இனி பலன் தராது என்று முடிவெடுத்து இயேசு கிறிஸ்துவிடம் வந்தாளோ அன்றே அவளுக்கு விடுதலைக் கிடைத்தது.

இதனைப் படித்துவிட்டு நோய்க்கு மருத்துவம் பார்ப்பது தவறு என்று நான் கூறுவதாக எண்ணிவிடக்  கூடாது. நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும். இயேசு கிறிஸ்துவே "நோயுற்றோருக்கு வைத்தியன் வேண்டும் " எனக் கூறியுள்ளார். மேலும், மேற்படி உதிரப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய சம்பவத்தை குறிப்பிட்டு எழுதிய லூக்கா ஒரு மருத்துவரே. இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்வது என்னவென்றால், மருத்துவரிடம் மருத்துவம் பார்த்தாலும் நமது நோய்க்கு சுகம் தருவது தேவனே.

வேதத்தில் ஒரு நல்ல வசனம் உண்டு, " குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும்" (நீதிமொழிகள்-21:31) குதிரையை யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்தவேண்டியது கடமை. ஆனால் வெற்றி என்பது கர்த்தரது கரத்தில்தான் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் மனித முயற்சியும் தேவனது காரமும் இணைந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுபோல நமது உடலை நல்லபடி பேண மருத்துவமும் உடற் பயிற்சியும் தேவை. ஆனால் அது மட்டுமே உடல் சுகத்தை தராது. தேவனது கிருபை நமக்கு அவசியம். அவர் நம்மை விசாரிக்கிறவரான படியால் நமது  கவலைகளை , நம்பிக்கைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடவேண்டும்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் பெலத்துடன் இருக்கும்போது எதனையும் நம்புவதில்லை. அவர்கள் தங்கள் உடல் பெலத்தையும் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். ஆனால் ஒரு நோய் அல்லது தீர்க்க முடியாத பிரச்னை வரும்போது மட்டுமே அதற்கு எப்படியாவது தீர்வு காண தேவனை அணுகுகின்றனர். ஆம் பெலவீனத்தில் தான் தேவனையும் அவரது வல்லமையையும் உணர முடியும். எனவேதான் தேவன் பரிசுத்த பவுலிடம் கூறினார், "என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் -12:9)

நீங்கள் பலவீனமாய் இருக்கிறீர்களா? நோய் , கடன் தொல்லை, பிரச்சனைகள், அல்லது உங்களால் இது முடியாது என எதையாவது எண்ணிக் கலங்குகிறீர்களா? உங்கள் பலவீனத்தை ஒத்துக்கொள்ளுங்கள். தேவனிடம் அறிக்கையிடுங்கள். உங்கள் பலவீனத்தில்  தான் தேவனது பலத்தை நீங்கள் அறிய முடியும்.

அன்பானவர்களே, வேத வசனங்கள் பொய் அல்ல. அவற்றை ஒரு சிறு குழந்தையைப்போல ஏற்றுகொள்வோமெனில் நமது வாழ்வில் அற்புதங்களைக் காணலாம். நாம் செய்யவேண்டியது நமது வழியையும் நமது வாழ்க்கையையும் அவரிடம் ஒப்புவித்து அவர் செயல்பாட காத்திருக்கவேண்டியதுதான்.

வேதம் கூறுகிறது, "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்"   (சங்கீதம் - 37:5)

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்