சிலுவையைப் பற்றிய உபதேசம் பெலனா பைத்தியமா ?

சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவ பெலனா  அல்லது பைத்தியமா ? 



சகோ. டி . ஜான் ஜெயசீலன் 
இயேசு கிறிஸ்துவின் ரெகோபோத் ஊழியங்கள் 
சாத்தான்குளம் - 628 704



இயேசு கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக ..

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைப் பற்றிய உபதேசம் எப்படி உள்ளது?

"சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப்  பைத்தியமாயிருக்கிறது , இரட்சிக்கப் படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது" (1 கொரி -1:18) என்று வேதம் சொல்கிறது.

தேவனுக்குப் பிரியமானவர்களே, இன்று கிறிஸ்துவின் சிலுவையை - அதாவது அவரது பாடுகளையும், மரணத்தையும், உயிர்தெழுதலையும் குறித்துப் பிரசங்கிக்கையில் அது பலருக்குப் பைத்தியமாகவும் பிதற்றலாகவும் தோன்றுகின்றது. நமது  கர்த்தர் மனிதனாக இருந்து இந்த பூமியில்  தேவனுடைய வார்த்தைகளை பிரசங்கித்தப் பொழுதும் அங்கே ஒரு பெருங் கூட்டம் அவரைப் பைத்தியக்காரன் என்றுதான் சொன்னது. ஒரு சிறுக கூட்டம் கர்த்தரை ஏற்றுக்கொண்டது. "அவர்களில் அனேகர் இவன் பிசாசுப் பிடித்தவன், பைத்தியக்காரன், ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறு  சிலர் இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே, குருடனுடைய கண்களை பிசாசு திறக்கக்கூடுமா/ என்றார்கள்"  (யோவான் -10:20,21) ஆம் .. அங்கே பிரிவினை. அநேகருக்கு கிறிஸ்துவின்  உபதேசம் பைத்தியமாக  இருந்தது. சிலருக்கோ அது தேவ பெலனாக இருந்தது.

அன்பானவர்களே, இன்றும் கிறிஸ்துவின் சிலுவை பற்றிய போதனைகள் பைத்தியமாகவே இருக்கிறது. 1 கொரி 1:23  ன் படி , "நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம் , அவர் யூதருக்கு இடறலாகவும் கிரேக்கருக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்."

இந்த உலகம் இயேசுவையும் அவருடைய பாடுகளையும் பைத்தியமாகவே பார்க்கிறது. அதனால் அந்த மக்கள் இரட்சிக்கப்பட்டு தேவ ராஜ்யத்தின் குடிமக்களாக மாறுவதற்கு மிக தூரத்தில் இருக்கிறார்கள்.  "ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகவேத்   தோன்றும்.  அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப் படுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்"  என்று 2 கொரி 2:14 சொல்கிறது .

சிலுவை பற்றிய உபதேசங்கள் கெட்டுப்போகிறவர்களுக்குப்  பைத்தியம் .. ஆம் , அவர்கள் பரம வாசஸ்தலத்துக்கு அபாத்திரராகப் போய்விட்டார்கள். தகுதியற்றவர்களானார்கள் . அவர்கள் நித்திய அழிவாகியத் தண்டனைக்குச்  சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள் , அந்தோ பரிதாபம். 

கர்த்தருக்குப் பிரியமானவர்களே உலகம்தான் இதற்குச் செவி கொடுக்கவில்லை என்றால், கர்த்தரை அறிந்துள்ளோம்  என்றுக் கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்  கூறிக் கொள்பவர்களும் இதை ஏற்றுக் கொள்வதில் பின்தங்கிதான் உள்ளனர்.  ஏனென்றால் ஆசீர்வாத அருளுரைகளையே கேட்டுக் கேட்டுப் பழகிப்போனதால் சிலுவையின் பாடுகளையும்   தன் சிலுவையை (பாடுகளை) சுமந்து கிறிஸ்துவைப் பின்பற்றி தேவ ராஜ்ஜியம் போக வேண்டும் எனும் இயேசுவின் போதனையும் அவர்களுக்குப் பைத்தியமாகவே தோன்றுகின்றது. கர்த்தர்தான் இப்படி உணர்வில்லாமல் இருக்கும் மக்களை உணர்விக்கவேண்டும்.

மறுபுறம், கிறிஸ்துவைப் பற்றிய உபதேசத்தைச்  சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு அது தேவ பெலனாக இருக்கிறது. அதனால்  மிகத் தைரியமாக, "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்"  என்று பிலிப்பியர் 1:21 ன் படி முழங்க முடிகிறது.  அது பெலத்தின்மேல் பெலனடயச் செய்கிறது.

"கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து  நான் வெட்கப்பட்டேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது" (ரோமர் - 1:16) என்றபடி கிறிஸ்துவின் உபதேசம் பெலப்படுத்துகிறது. அந்த தேவ பெலன்  சிலுவையின் சுவிசேஷத்தைச்  சொல்ல உற்சாகப்படுத்துகிறது. நான் பெற்ற இரட்சிப்பை, அந்த விடுதலையை மற்றவரும் பெற வேண்டும் எனும் ஆர்வத்தை நம்மில் உந்தித் தள்ளுகிறது. நம்மை கிறிஸ்து இயேசுவுக்குரியதையே  ன்னதாகி செய்கிறது. "பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ -3:2) என்று தேவனுக்குரியவைகளையே நாடச் செய்கிறது. கிறிஸ்துவுக்குள் எப்போதும் வெற்றி  பெறவும் அவரை அறியும் அறிவில் வளரவும் செய்கிறது.  தேவனுக்கு  கிறிஸ்துவின்    நற்கந்தமாக ஜீவ வாசனை வீசச் செய்கிறது (2 கொரி 2:14-16)

மற்றும் சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப் படுகிறவர்களுக்கு தேவ பெலன். ஏனென்றால் கர்த்தரே அவர்களின் பெலனாக இருக்கிறார். ஆகவே இரட்சிக்கப்படுகிறவர்களுக்கும் இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் கிறிஸ்துவே எல்லாமாக இருக்கிறார். அவர்கள் எரிந்து பிரகாசிக்கிற விளக்காக இருக்கிறார்கள்  ஆகவே எவ்வளவு பெரிய பாடுகள் துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அந்தப் பாதையில்  கிறிஸ்துவைப் பின்பற்றிச் செல்கிறார்கள்.

இந்தக் கிறிஸ்துவின் உபதேசமாகிய தேவ பெலனைப் பெற்று  நமது பரம வாசஸ்தலத்தை நோக்கி உற்சாகமாகக் கடந்து செல்வோம். ஆமென். தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்          


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்