INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Thursday, October 12, 2017

"என்னை நோக்கிப் பாருங்கள்"

"என்னை நோக்கிப் பாருங்கள்" 

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் , அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை." (ஏசாயா - 45:22)   

என்னை நோக்கிப் பாருங்கள் என்று பரிசுத்தர் சொல்கிறார். 

நோக்கிப் பார்த்தல் என்பது உறவை வளர்க்கும். ஒருவரை முகத்துக்கு முகம் பார்க்கும்போது உறவு வலுப்பெறுகிறது. முகத்துக்கு முகம் பார்க்கும்போதுஒருவர் செய்த தவறு  அவரை குற்றப்படுத்துகிறது. திருந்துவதற்கு தூண்டுகிறது.

உதாரணமாக, ஒரு ஆசிரியர் மாணவனை நோக்கிப் பார்க்கும்போது மாணவன் அந்தப் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்துகொள்கிறான்.  மனைவியிடம் பொய் சொல்லும் கணவன் அவளது முறைத்தல் பார்வை பட்டவுடன் தனது பொய்யை ஒத்துக்கொள்கிறான். நவீன யுகத்தில் செல் போன் , பேஸ் புக் , வாட்ஸ் அப் , டுவிட்டர் என எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துவிட்டபோதும் இவை அனைத்தையும் விட அதிக அர்த்தத்தை காதலர்களது கண்களின் கணைகள் மற்றவர்களுக்குத் தெரியாமலே பரிமாறிக்கொள்கின்றன.  ஆம் நோக்கிப் பார்த்தல் என்பது அர்த்தமுள்ளது.

திருடர்கள் முகம் பார்த்துப் பேசுவதில்லை. அவர்கள் செய்த தவறு அவர்களை நிமிர்ந்து பார்த்து பேசுவதை தடைசெய்கின்றது.  என்னை நோக்கிப் பாருங்கள் என்று பரிசுத்தர் சொல்கிறார். அப்படிப் பார்க்கவேண்டுமென்றால் எனவே நமக்கு குற்றமற்ற மனச்சாட்சி வேண்டியதாயிருக்கிறது. 

தேவன் மனிதரிடம் உறவு கொள்ள விரும்புவதால் அவரும் மனிதர்களை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை பல்வேறு வசனங்கள்  உறுதிப்படுத்துகின்றன. "தேவனைத் தேடும் உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரை கண்ணோக்கினார்" (சங்கீதம் - 53:2)

"கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்தும் நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது" (நீதிமொழிகள் - 15:3)

"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கின்றன" (சங்கீதம் - 34:15)

"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன; அவருடைய செவிகள் அவர்கள்  வேண்டுதலுக்குக்  காவனமாயிருக்கின்றன , தீமை செய்பவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது " (1 பேதுரு - 3:12)

எனவே நமது பக்கம் குறை இல்லாதிருக்குமானால், தேவனது கண்களும் நமது கண்களும் நோக்கிப் பார்க்கும்போது சந்தித்து நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல் ஏற்படும்.  

ஒரு உதாரணமாக நாம் தாவீது ராஜாவைப் பார்க்கலாம். தாவீது தேவனை தனக்கு உதவும் மலையாக அவரை நோக்கிப் பார்த்தார்.  "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங்கீதம் - 121:1) என்றார் அவர்.

இன்று உலகில் நாம் பலரும் கூட  பல வேளைகளில் சிலரை மலையாக நம்பியிருப்போம். " சார் உங்களைத் தான்  நான் மலையாக நம்பியிருக்கிறேன் ... என நாம் அவர்களை பார்த்துக் கூறுவோம். ஆனால் அப்படி மலையாக நம்பியிருக்கும் பலர்  சில வேளைகளில் தங்களது வாக்குறுதியை தவறவிட்டு நம்மை தவிக்கவிடுவதுண்டு. ஆனால் தேவன் அப்படிக் கை  விடுபவரல்ல.

எனவே தான் தாவீது, " கர்த்தரை எப்போதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை(சங்கீதம் - 16:18) என்று கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் அனைவருமே இப்படிக்கர்த்தரை நேருக்கு நேராக நோக்கிப் பார்த்தவர்கள்தான். ஆபிரகாம், மோசே, யோசேப்பு, தானியேல்..  என ஒவ்வொருவராக எண்ணிப்பாருங்கள். எல்லோருமே கர்த்தரை நோக்கிப் பார்த்துத் திடனடைந்து சாதித்தவர்கள்தான்.

"என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன்  கர்த்தாவே....." (சங்கீதம் -  27:8) என்று தாவீது கூறுவதைப்போல அவர்கள் தேவனது முகத்தையே நோக்கிப்பார்த்தவர்கள்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கூறினார், " நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லோரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்" (யோவான் - 12:32)

மேலும் தன்னை மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல பாம்புக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து இப்படிக் கூறினார்:- " சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தி உயர்த்தப்பட்டதுபோல மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்"  (யோவான் - 3:14,15)

கொள்ளிவாய் சர்ப்பதால் கடி பட்டவர்கள் எப்படி மோசேயால் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பதை நோக்கிப்பார்த்து இரட்சிக்கப்பட்டார்களோ அப்படியே பாவத்தால் பிடிபட்டவர்கள்  சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து மீட்படைவார்கள். அவர் எவரையுமே புறம்பே தள்ளுவதில்லை. " என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை."  (யோவான் - 6:37) என அவர் வாக்களித்துள்ளனர்.

நோக்கிப் பார்த்தல் என்ன நடக்கும் என பார்ப்போம் :-

எம். ஜி . ஆர். அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் படித்திருக்கிறேன். எம். ஜி . ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அலுவலகத்துக்குப் போகும்போது தினசரி ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி அவரையே நோக்கிப் பார்த்து கொண்டு நிற்பானாம். அவன் யார் என்றோ எதற்க்காக அப்படி நிற்கிறான் என்றோ  தெரியாது. பல நாட்கள் இப்படிக் கடந்தது. ஒருநாள் எம். ஜி . ஆர். அவர்கள் தனது காரை நிறுத்தி அந்த மனிதனிடம் , "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை மனிதன், "ஐயா உங்களை தினசரி பார்ப்பதால் எனக்கு ஒரு மகிழ்ச்சி .... வேறொன்றுமில்லை " என்றானாம். அவனது குடும்ப நிலைமையை அறிந்த எம். ஜி . ஆர். தனது அதிகாரிகளிடம் அவனுக்கு வேண்டிய உதவியைச் செய்யும்படி கூறினாராம்.

ஒரு மாநிலத்தின் முதல்வரை நோக்கிப் பார்த்ததால் ஒரு மனிதன் இப்படி உதவி பெற்றானென்றால் தேவாதி தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு எவ்வளவு பெரிய உதவி கிடைக்கும் !

தேவனை நோக்கிப் பார்ப்பதால் என்னைக் கிடைக்கும் என வேதத்திலிருந்து மூன்று சம்பவங்கள் மூலம்  பார்ப்போம்:

பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம்

இயேசுவை நோக்கிப்பார்த்த சகேயு எனும் மனிதனைப் பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் வரி வசூலிப்பவர்களது தலைவனாக  இருந்தான். அநியாயமாக வரி வசூலித்து பொருள் சேர்த்தான். ஆனால் அவனுக்கு இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டுமெனும் ஆவல் வந்தபோது அவன் குள்ளனாக இருந்தபடியால் மக்கள் கூட்டத்தில் இயேசுவை பார்க்க முடியாது என எண்ணி ஓடி முன்னிருந்த காட்டு அத்தி மரத்தின்மேல் ஏறி அவரை நோக்கிப் பார்த்தான். இயேசு கிறிஸ்து அவனது ஏக்கத்தைப் புரிந்துகொண்டு, "சகேயுவே இறங்கிவா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார்" 

அவர் அவனோடு செல்லும்போதே அவன் அவரிடம், " ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன், நான் எவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கியதுண்டானால்  நாலத்தனையாய்  திரும்பச் செலுத்துகிறேன் " என்றான் (லூக்கா - 19:8)

ஆம், தேவனை நோக்கிப் பார்க்கும்போது நமது பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறோம். பரிசுத்தமான வாழ்க்கை வாழ வழி காண்கிறோம்.

தடுமாற்றமில்லாத வாழ்க்கை 

ஒருமுறை இயேசு கிறிஸ்து கடல் மீது  நடந்து சீடர்கள் இருந்த படகின் அருகே வந்தார். அப்போது சீடர்கள் ஒரு ஆவியைக் காண்பதாக எண்ணி அலறினார்கள். இயேசு கிறிஸ்து பயப்படாதீர்கள் நான்தான் என்றார். அப்போது பேதுரு ஆண்டவரே நீர்தான் என்றால் நானும் நீரின்மேல் நடந்து உம்மிடம் வரக்  கட்டளை இடும் என்று கூறினார். இயேசு வா என்றார்.

பேதுரு இயேசுவையே நோக்கியபடி நீரின்மேல் நடந்து அவரிடம் சென்றார். "காற்று பலமாய் இருந்தபடியால் பயந்து அமிழ்ந்துபோகையில் ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டார். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்?  என்றார் (மத்தேயு - 14:30,31)

ஆம், இயேசுவை நோக்கிப் பார்த்து நடக்கும்போது தடுமாற்றமில்லாமல் நடக்க முடியும். சூழ் நிலைகள் நம்மை மேற்கொள்ளாது.

தேவனது அதிசயமான வழிநடத்தல்கள் கிடைக்கும்  

இயேசு கிறிஸ்து செய்த முதலாவது அற்புதத்தை பாருங்கள். அந்தத் திருமண வீட்டார் ரசம் குறைவு பட்டபோது முதல் முதலாக இயேசு கிறிஸ்துவைதான் நோக்கிப் பார்த்தார்கள்.  அங்கு இயேசு தனது முதலாவது அற்புதத்தைச் செய்தார். ஆம், நமது வாழ்க்கையிலும் எல்லா சமயங்களிலும் இயேசுவை நோக்கிப் பார்த்தோமானால் தேவனது அற்புதத்தை ருசிக்கலாம்.

"அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை" (சங்கீதம் - 34:5)

நோக்கிப் பார்க்காவிட்டால் என்ன நடக்கும்?

தேவனை நோக்கிப் பார்க்காமல் இருப்போமானால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டு வேத சம்பவங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்

தாவீது தேவனை எப்போதும் தனக்கு முன்பாக வைத்திருந்தாலும் ஒரு நிமிட தவறுதல் மிகப் பெரிய வீழ்ச்சியில் கொண்டு போனதை நாம் வேதத்தின் மூலம் அறியலாம்.

தேவனை நோக்கிய அவனது கண்கள் மாடியிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தன. அங்கு குளித்துக் கொண்டிருந்த உரியாவின் மனைவி பத்சேபாளின்  அழகு அவனைத் தடுமாறச் செய்தது. அவளோடு விபச்சாரம் செய்தான். மட்டுமல்ல அவளை அடைய வேண்டும் எனும் ஆவலில் அவளது கணவன் உரியாவைக் கொலை செய்தான். இப்படி தேவனை விட்டு விலகிய அவனது பார்வையால் மிகப் பெரிய பாவங்களில் வீழ்ந்தான்.

ஆனால் இதே போன்ற நிலை யோசேப்புக்கும்  வந்தது. போத்திபாரின் மனைவி அவனது அழகில் மயங்கி அவனை தன்னோடு பாவம் செய்ய அழைத்தாள். ஆனால் அவன் தேவனை விட்டுத் தனது பார்வையை மாற்ற வில்லை. " நான் இவ்வளவு பெரிய பொல்லாங்குக்கு உட்பட்டு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?" (ஆதியாகமம் - 39:9) எனக் கூறி தன்னைக் காத்துக் கொண்டான்.

ஆம் அன்பானவர்களே, நாம் நோக்கிப் பார்க்க வேண்டியது சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இயேசுவை மட்டுமே. அப்படி நோக்கிப் பார்க்கும்போது, "பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் , அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை." (ஏசாயா - 45:22)   எனும் ஏசாயா தீர்க்க தரிசியின் வசனத்தின்படி நாமும் இரட்சிப்பின் சந்தோஷத்தை நமது வாழ்க்கையில்  அனுபவிக்கமுடியும். கிறிஸ்து இயேசுவையே நோக்கிப் பாருங்கள் ! 

No comments: