ஆதவன் 🖋️ 654 ⛪ நவம்பர் 12, 2022 சனிக்கிழமை
"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 )
கர்த்தருடைய வார்த்தையின் வல்லமைக்குக் காரணம் என்ன என்பதை இன்றைய வசனம் விளக்குகின்றது. அதாவது, மனிதர்களது வாயிலிருந்த்து வருவனபோன்ற வார்த்தைகளல்ல கர்த்தரிடம் வருவது. அவை சுத்தமான வார்த்தைகள். ஏழுமுறை உலையிலிட்டு உருக்கிய வெள்ளியைப்போன்றவை அவை. அதாவது, கர்த்தரது வார்த்தையில் என்தப்பழுதும் இருபத்தில்லை. கவர்ச்சியோ ஏமாற்றோ இருப்பதில்லை.
மனிதர்கள் நாம் பல்வேறு வார்த்தைகளைப் பேசுகின்றோம். ஆனால் நமது இதயத்து எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளைப் பலவேளைகளில் வெளியில் பேச முடிவதில்லை. ஆனால் கர்த்தரது வார்த்தைகள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கின்றன.
மட்டுமல்ல, அவர் என்ன பேசுகின்றாரோ அல்லது நினைக்கின்றாரோ அது அப்படியே எந்த மறைவுமின்றி வெளிவரும். காரணம் அவர் யாருக்கும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஆம், எனவே, "கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 33 : 4 )
கர்த்தரது வார்த்தைகள் இப்படி உண்மையும் உத்தமுமானவையாக இருப்பதால் அந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிவரும்போது அவர் என்ன நினைத்துச் சொல்கின்றாரோ அதுவாகவே வெளிவருகின்றது. உதாரணமாக நாம் கல்லைப் பார்த்துக் கல் என்று சொல்கின்றோம். ஆனால் அவர் கல் என்று சொன்னால், அது கல்லாகவே வெளிவருகின்றது. இப்படித்தான் அவர் உலகினைப் படைத்தார். அவர் தனது வார்த்தையால் உலகினைப் படைத்தார் என்று வாசிக்கின்றோம். அவர் "உண்டாகட்டும்" என்று சொல்ல அனைத்தும் உண்டாயின.
"கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது." ( சங்கீதம் 33 : 6 )
அந்த தேவனுடைய வார்த்தைதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வேதம் கூறுகின்றது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என்று வாசிக்கின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையில் வல்லமை இருந்தது. அவர் சொல்ல அனைத்தும் நடந்தன. அவர் பிதாவாகிய தேவனுக்கு ஒப்பானவராகவே இருந்தார்.
"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 )
அன்பானவர்களே, நாம் அவரைப்போல நூறு சதவிகிதம் சுத்தச் சொற்களை பேசாவிட்டாலும் அப்படிப் பேச நாம் முயன்றால் நமக்கு அவர் உதவுவார். சுத்தமான சொற்களைப் பேசும்போதுதான் நமது வார்த்தையில் வல்லமை வெளிப்படும்.
ஆண்டவரே வல்லமை தாரும் என்று ஜெபிக்கும் பலரும் இதனை எண்ணுவதில்லை. ஜெபித்துவிட்டு நமது வார்த்தையில் எந்த மாற்றமுமின்றி வாழ்வோமானால் நமது வார்த்தைகள் வெற்று வார்தைகளாகத்தான் இருக்கும். நமது வார்த்தையில் வல்லமை இருந்தால்தான் மற்றவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது அது அவர்களது இருதயத்தில் மாற்றத்தை உண்டாக்கும்.
நமது நாவினை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே, உம்மைப் போல சுத்த வார்த்தைகளைப் பேசுவதற்கு கிருபையினைத்தாரும் என்று வேண்டுவோம். அப்போது நமது வார்த்தைகளைத் தேவன் கனம்பண்ணுவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment