ஆதவன் 🖋️ 673 ⛪ டிசம்பர் 01, 2022 வியாழக்கிழமை
"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )
ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் மாலை உணவருந்த சென்றிருந்தபோதுஒரு கிறிஸ்தவ ஊழியரும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். "பேமிலி ரூம்" என தனியே குறிக்கப்பட்டிருந்த அந்த அறையினுள் பலர் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தனர். ஊழியர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்ததும் அவர் எல்லோரும் பார்த்திருக்க ஜெபம் செய்யத் துவங்கிவிட்டார். அதனை எல்லோரும் கவனித்தனர். உணவு பரிமாற அங்கு நின்று கொண்டிருந்த ஹோட்டல் பணியாளர்களும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஜெபம் முடிந்தபின் பின் சாப்பிட ஆரம்பித்தனர். நான் அந்த ஊழியரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஊழியர் உணவு பரிமாறக்கூடிய பணியாளர்களிடம் கடுகடுப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். நானும் இந்த ஊழியர் இப்படி சப்தம்போட்டுக் கொண்டிருக்கிறாரே எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஒருகட்டத்தில் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டோம். அந்த ஊழியர் தனது ஜிப்பாவின் கையைச் சுருட்டிவைத்துக்கொண்டு எழுந்துநின்று ஒரு ஹோட்டல் பணியாளரை அடிப்பதற்குப் பாய்வதுபோல நின்றுகொண்டு இருந்தார். பெரிய சத்தத்தில் திட்டிக்கொண்டிருந்தார். காரணம், அந்தப் பணியாளர் சாம்பாரை ஊற்றியபோது கவனக்குறைவாக சிறிது சாம்பார் ஊழியரது ஆடையில் பட்டுவிட்டது. பிறகு அங்கு பணியிலிருந்த மேலாளர் வந்து சமாதானப் படுத்தினார்.
பல மதங்களிலுள்ள மக்களும் அங்கு இருந்தோம். இந்த ஊழியர் முதலில் ஜெபிக்காமல் சாப்பிட்டிருந்தால்கூட யாருக்கும் இவரை யார் என்று தெரிந்திருக்காது. முதலில் ஜெபித்துத் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்றுக் காண்பித்து தனது சாட்சியற்ற செயலால் மற்றவர்கள் முன் கிறிஸ்துவை அவமானப்படுத்திவிட்டார் இவர். !
ஒரு ஆவிக்குரிய மனிதன் என்பது நமது வெள்ளை ஆடையிலோ, ஜிப்பாவிலோ அல்ல, நமது சாட்சியுள்ள செயல்களில் விளங்கவேண்டும். இந்த சாட்சியுள்ள குணங்களையே கனிகள் என்று வேதம் கூறுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்...கனிகளால் மரத்தை அறிவர் என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?.
உள்ளான மனிதனில் மாற்றம் வராமல், வெளி அலங்காரங்களும், ஆவிக்குரிய மனிதன் என நம்மைக் காண்பிக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் தோல்வியாகவே முடியும். நல்ல குணம் என்பது இயற்கையாக வெளிவரும். அதற்கு முயற்சிகள் தேவையில்லை. நான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட அமைதியாக சாந்தமாக செயல்படும் கிறிஸ்துவை அறியாத மக்கள் பலரை நான்பார்த்திருக்கிறேன்.
அன்பானவர்களே ! நமது வாழ்க்கையே சுவிசேஷ அறிவிப்பு. பக்கம் பக்கமாக எழுதுவதாலேயோ, நீண்ட சொற்பொழிவுகளை கவர்ச்சியான முறையில் செய்வதாலேயே கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. இன்று கிறிஸ்தவ ஊழியர்களைவிட மக்களைக் கவரக்கூடிய முறையில் பேசக்கூடிய அரசியல்வாதிகள் பலர் நமது நாட்டில் உள்ளனர்.
ஆவிக்குரிய மனிதன் என்பது நமது செயல்களால் மக்களுக்குத் தெரிய வேண்டும். உதாரணமாக 50 பேர் பணிபுரியும் இடத்தில இருக்கிறீர்களா ? நீங்கள் ஆவிக்குரிய மனிதனானால் உங்கள் குணம் அந்த 50 பேரிலிருந்து வேறுபட்டுத் தெரியவேண்டும். "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ( எபேசியர் 5 : 9 )"
கனி நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ தேவனிடம் நம்மை ஒப்படைத்து ஜெபிப்போம். நமது கனிகளைக் கொண்டு பிறரை ஆதாயமாக்கிக் கொள்வோம் !
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712