'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,211 💚 ஜூன் 02, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்." ( 1 சாமுவேல் 12 : 20 )
நமது தேவனது மன்னிக்கும் மனப்பான்மையையும், அவரது அளவில்லாக் கிருபையையும் சாமுவேல் உணர்ந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். நீங்கள் தேவனுக்கு எதிராக பல பொல்லாங்கான செயல்களைச் செய்துளீர்கள். பரவாயில்லை, ஆனால், கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் மட்டும் இருந்து கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள் என்கின்றார்.
நாம் தேவனுக்கு எதிராகப் பலப் பாவங்களைச் செய்திருந்தாலும் ஒருபோதும் அவரை மறுதலித்துப் பின்வாங்கிப் போய்விடக்கூடாது எனும் உண்மையினை அவர் இங்கு விளக்குகின்றார். "நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்" என்பது நமக்கும் பொருந்தும். பல பாவங்களை நாம் செய்திருந்தாலும் அவரை நாம் மறுதலியாமல் இருப்போமானால் அவரது கிருபையினால் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெறுவோம்.
இதற்கான காரணத்தையும் சாமுவேல் அடுத்த இரு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார். அதாவது, "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்." ( 1 சாமுவேல் 12 : 22 ) கர்த்தர் நம்மை அவருக்கு உகந்த மக்களாக விருப்பப்பட்டுள்ளார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், ஜீவனுள்ள தேவனாகிய அவர் நம்மைத் தனது மக்களாகத் தெரிந்துகொண்டுள்ளார்.
நல்ல ஆயனாகிய இயேசு கிறிஸ்துவும் இதனையே கூறினார். எந்த ஆடும் வழிதப்பித் போவது அவருக்குப் பிரியமில்லை. அவர் நாம் ஒவ்வொருவரது மனநிலையினையும் அறிந்துள்ளார். இதனையே அவர், "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்று கூறினார்.
"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்"என்று இயேசு கிறிஸ்து கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது அவர் அவருடைய மக்களாகிய நம்மை அறிந்துள்ளார், நாம் அவரை மறுதலியாமல் இருக்கின்றோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். சில வேளைகளில் துன்பங்கள் நெருக்கும்போது சிலர் மனதுக்குள் சோர்வடைந்து, "என்ன ஜெபம் செய்தும் தேவன் என்னையும் எனது ஜெபத்தையும் கேட்கவில்லை....நான் இனி அவரிடம் எதனையும் கேட்கமாட்டேன்" என விரக்தியில் கூறுவதுண்டு.
அன்பானவர்களே இத்தகைய மனித மன நிலையையும் அவர் அறிவார். நமது பலவீனம் இது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் நாம் இத்தகையைச் சூழ்நிலையிலும் அவரை மறுதலியாமல் பிற தெய்வங்களை நாடாமல் இருப்போமானால் அவர் நம்மைச் சேர்த்துக்கொள்வார்.
இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற தெய்வங்களை நாடிச் செல்வார்கள் என்பது சாமுவேலுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவர் மக்களிடம் "விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே." ( 1 சாமுவேல் 12 : 21 ) என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இதனைக் கூறுகின்றார்.
எனவே அன்பானவர்களே, எந்த நெருக்கடிச் சூழ்நிலை வந்தாலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை நமது முழு இருதயத்தோடும் சேவிப்போம். கர்த்தர் நமைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனமாகிய நம்மைக் கைவிடமாட்டார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment