Wednesday, May 22, 2024

சகோதர அன்பற்ற கிறிஸ்தவ சபைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,207     💚 மே 29, 2024 💚 புதன்கிழமை 💚


"அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்." ( மாற்கு 9 : 38 )

இன்றைய கிறிஸ்தவ உலகில் நடக்கும் காரியங்களை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துச்சொல்கின்றது. கிறிஸ்தவத்தின் பல்வேறு சபைப் பிரிவினரும் ஒருவரை ஒருவர் குறைகூறித் தாங்கள்தான் கிறிஸ்துவுக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயலுகின்றனர். கத்தோலிக்கர்கள் மற்ற சபைப் பிரிவினரை ஆடுதிருடர்கள் என்றும் அப்படிப் பிற சபைகளுக்குச் செல்பவர்களைக் கொலைபாதகர்கள் போலவும் பார்க்கின்றனர். அவர்களை அவிசுவாசிகள் என்கின்றனர். தங்கள் தலைவர்தான் பேதுருவின் வழித்தோன்றல் என்றும் எனவே தங்களது சபைதான் கிறிஸ்து உருவாக்கிய சபை என்றும் கூறிக்கொள்கின்றனர். 

சி.எஸ்.ஐ  சபையினர், பழைய தப்பறைகளை மார்ட்டின் லூத்தர் திருத்தி சீர்படுத்தி உருவாக்கியதுதான் எங்களது சபை. எனவே நாங்கள்தான் வேதாகமம் கூறும் வழியில் தேவனை ஆராதிக்கின்றோம்; எல்லா தப்பறைகளும் எங்கள் சபையில் மாற்றப்பட்டுவிட்டது என்கின்றனர்.

பெந்தெகொஸ்தே சபையினரோ  ரோமன் கத்தோலிக்கர்களையும் சி.எஸ்.ஐ  சபையினரையும் ஆவியில்லாத செத்த சபைகள் என்கின்றனர். அவர்களை  நரகத்தின் மக்கள் என்றும் தாங்கள் மட்டுமே ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்கள்  என்றும் சொல்லிக்கொள்கின்றனர். தனி ஊழியம் செய்யும் ஊழியர்களோ எவரையும் நம்பவேண்டாம், கிறிஸ்து சபைகளை உருவாக்க வரவில்லை.  எனவே, சபைகள்மேல் நம்பிக்கைக் கொள்ளவேண்டாம் என்கின்றனர். உண்மையான விசுவாசிகள் எது சரி என்று குழம்புகின்றனர்.

கிறிஸ்துவின் சீடர்களும் ஆரம்பத்தில் இப்படியே இருந்தனர். எனவே அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரால் மற்றவர்கள் அற்புதங்கள் செய்வதை விரும்பவில்லை. எனவேதான் யோவான் அவரை நோக்கி: "போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்."

இன்றைய மேற்கூறிய கிறிஸ்தவ சபைகளும் ஊழியர்களும் யோவானைப்போன்ற மனமுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.  யோவானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து, "அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்." ( மாற்கு 9 : 39, 40 ) என்றார். ஆம், கிறிஸ்துவை அறிவிக்கின்ற எல்லோருமே சகோதரர்களே. இந்தப் புரிதல் இல்லாததே இன்றைய சபை வெறுப்புணர்ச்சிகளுக்குக் காரணம். 

சபை ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் பேசும் பல சபைக் குருக்கள் யோவானைப் போலவே இருக்கின்றனர். அவர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கும் தங்களது சபைகளில் பேசுவதற்கும் முரண்பாடாகவே இருக்கின்றது. காரணம் உண்மையான தேவ அன்பு இவர்களுக்கு இல்லை. அன்பு இருக்குமானால் இயேசு கிறிஸ்து கூறியதைப்போல "என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்." என்று மற்றவர்களை சகோதரர்களாக எண்ணுவர். 

இப்படி விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படாதவாறு தடுத்து மத வெறியைத் தூண்டி மற்ற கிறிஸ்தவ சபைகளை விரோதியாக எண்ணுபவர்களும் பேசுபவர்களும் விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குகின்றனர். "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 42 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: