Wednesday, May 22, 2024

அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,208       💚 மே 30, 2024 💚 வியாழக்கிழமை 💚

"உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்." ( ஏசாயா 47 : 10 )

அதிக படிப்பு, அறிவு  இவற்றால் அகங்கார எண்ணத்தோடு வாழ்பவர்களை இன்றைய தியான வசனம் கண்டிக்கின்றது. இதனையே, "உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்" என்று கூறப்பட்டுள்ளது. 

"அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்." ( பிரசங்கி 1 : 18 ) என்று பிரசங்கி நூலில் வாசிக்கின்றோம். அதிக அறிவு இருப்பதால் ஒருவர் உலகத்தில் வல்ல செயல்கள் செய்யலாம் ஆனால்,  அவர்கள் தங்கள் அறிவுமூலம் தேவனை அறிய முடியாது. மேலும் அதிக அறிவே தேவனை  அறிந்துகொள்ளத் தடையாக இருக்கின்றது. காரணம், அறிவு பெருத்தவர்கள் எதனையும் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாமல் அறிவோடு ஆராய்ந்து பார்ப்பார்கள். 

சிறு குழந்தைகள் நாம் சொல்லும் எதனையும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மத்தேயு 19 : 14 ) என்று. 

மேலும் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய்". ஆம், அதிக அறிவு இருப்பதால் மனமானது பல்வேறு துன்மார்க்கச் செயல்களைச் செய்யும்படித் தூண்டுகின்றது. இன்றைய உலகில்  பல்வேறு இணையதளக் குற்றங்கைச் செய்பவர்களும், நவீன ஏமாற்றுக்களைச் செய்பவர்களும் அறிவு பெருத்தவர்கள்தான்.  நம்மைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லை என இவர்கள் எண்ணிக்கொள்வதால் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

"நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்." ( ரோமர் 16 : 19 ) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். நமது அறிவும் ஞானமும்  நன்மை செய்வதற்கு மட்டுமே பயன்படவேண்டும். 

ஆம் அன்பானவர்களே, நமக்கு தேவன் அதிக அறிவைத் தந்திருந்தால் அதனைப் பெருமையாக எண்ணி அகம்பாவத்துடன் நடக்காமல் மற்றவர்களை மதிப்போம்.  தீமையான காரியங்களைச் செய்யாமல் நன்மை செய்ய ஞானத்துடன் நடந்துகொள்வோம்.  "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 3 )

இன்றைய தியான வசனம் வேதாகமத்தில் இதற்கு அடுத்த வசனமாகவும் தொடர்கின்றது. அதில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்." ( ஏசாயா 47 : 11 ) எனவே எச்சரிக்கையாக நடந்துகொள்வோம். தவறான செயல்பாடுகள் நம்மில் இருக்குமானால் திருத்திக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: