இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, May 18, 2024

தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,202       💚 மே 24, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதன் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்." ( ஓசியா 8 : 14 )

இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இஸ்ரவேல், யூதா என்பவை தேவனுடைய மக்களைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களே இஸ்ரவேலரும் யூதரும். ஆம் புதிய ஏற்பாட்டின்படி நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலரும் யூதரும். நாமே ஆபிரகாமின் சந்ததி. "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 7 ) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

சரி, இன்றைய தியான வசனம்  கூறும் கருத்துக்கு வருவோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது மக்களாகிய விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம்  இன்று பலவேளைகளில் கர்த்தரையும் அவரது கற்பனைகளையும் கடைபிடிக்காமல் அவைகளை மறந்து வெறும் ஆலய காரியங்களுக்கும் வழிபாடுகளுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். உலகச் செல்வங்களைச் சேர்ப்பதிலேயே ஆர்வத்தைக் காட்டுகின்றோம். இதனையே, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் ஆலயக்காரியங்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நமது உடலாகிய ஆலயத்தைப் பாவமில்லாமல் பேணக்  கொடுக்கவேண்டும். எனவேதான் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்றும், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்றும் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

நமது வாழ்வில் தேவனை மறந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்துகொண்டு ஆலயங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பது அர்த்தமற்றது. ஆசீர்வாதம் கிடைக்குமென்று கோடிக்கணக்கான பணத்தை காணிக்கைப் பெட்டியில் போடும் பலரைப்பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றதை நாம் வாசித்திருக்கலாம். நாம் இப்படி அறிவிலிகளாக இருக்கலாகாது. தேவனை மறந்து கோவில்களைக் கட்டுவதைவிட்டு தேவனோடு இணைந்து நமது உடலைப் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு ஆவிக்குரிய ஆலயத்தைக் கட்டவேண்டும்.  

கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து ஆலயம் கட்டுவது மனிதர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி ஆலயம் கட்டக்கூடியவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் கட்டும் நோக்கத்தையும் பார்க்கின்றார்.  ஆம், மண்ணினாலும் கல்லினாலும் கட்டப்பட்ட ஆலயங்களிலல்ல; நமது உடலாகிய ஆலயத்தில்தான் தேவன் வாசமாயிருக்கின்றார் எனும் சத்தியத்தைப் புரிந்துகொள்வோம். "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

No comments: