Saturday, May 11, 2024

வேறே ஆவியைப் பெற்ற காலேப்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,192      💚 மே 14, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." ( எண்ணாகமம் 14 : 24 )

எகிப்திலிருந்து மோசே அழைத்துக்கொண்டு வந்த மக்கள் பாரான் வனாந்தரத்தில் வந்தபோது மோசே இஸ்ரவேல் மக்களினங்களின் 12 கோத்திரத்திலிருந்தும் கோத்திரத்துக்கு ஒருவராகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துத் தாங்கள்  செல்லவிருந்த கானான் தேசத்தைச் சுற்றிப்பார்த்து அந்தத் தேசம் எப்படிப்பட்டது என்று தகவல் கொண்டுவர அனுப்பினார். அப்படிச் சென்று வந்த மக்கள் தலைவர்கள் மக்கள் மத்தியில் துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் காலேபும் யோசுவாவும் மட்டும் விசுவாச வார்த்தைகளைக் கூறினார்கள். "அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 ) ஆனால் இஸ்ரவேல் மக்கள் அவர்கள்மேல் கல்லெறிய முயன்றார்கள். 

இப்படி காலேப் கூறக்காரணம் அவரிடமிருந்த "வேறே ஆவி" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களிடமிருந்து ஆவியைவிட வேறான ஒரு ஆவி இருந்ததால் காலேப் விசுவாச வார்த்தைகளைக் கூறினார். 

ஹீலியம் வாயு அடைத்த பலூன்களை நாம் திருவிழா கடைகளில் பார்க்கலாம். வெளியில் பார்ப்பதற்கு அவை மற்ற பலூன்களைப்போலவே இருந்தாலும் அவைகளின் உள்ளே இருப்பது வேறு வாயு.  ஆதலால் அவைகளைக் கட்டியுள்ள நூலை நாம் அறுத்துவிட்டால் மேலே எழும்பிச் சென்றுவிடும். மற்ற பலூன்கள் தரையிலேயே கிடக்கும். இதுபோலவே காலேப்பினுள் பரிசுத்தஆவியானவர் இருந்ததால் அவர் மேலான எண்ணமுடையவராக இருந்தார். 

ஆம் அன்பானவர்களே, காலேப் தேவனால் அருளப்பட்டவைகளை அறியும் கிருபை பெற்றிருந்தார். நாமும் உலகத்தின்  ஆவியைப் பெறாமல் வேறே ஆவியைப் பெறவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலரும் இதனால்தான் "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

வேறே ஆவியைப் பெற்ற காலேப் தேவனை உத்தமமாய்ப் பின்பற்றினார். நாமும் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறும்போது வித்தியாசமானவர்களாக மாறுவோம்.   "அவன் உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." என்று கர்த்தர் கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும். இந்த ஆவியானவரை இதுவரைப் பெறாமல் வாழ்ந்திருந்தால் நமது ஜெபங்களில் வேண்டுவோம்.  கர்த்தர்தாமே தூய்மையின் ஆவியானவரை நமக்குத் தந்து தூய வழியில் நம்மை நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: