Thursday, May 16, 2024

சோர்வை மாற்றும் தேவ கிருபை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,200    💚 மே 22, 2024 💚 புதன்கிழமை 💚


"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40 : 29 )

மனிதர்கள் நாம் இந்த உலகத்தில் வாழ்வதால் பல்வேறு பாடுகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். இதனால் பல்வேறு சமயங்களில் நாம் சோர்வடைந்துவிடுகின்றோம். இந்தச் சோர்வு உடலளவிலும், மனதளவிலும், ஆவிக்குரிய சோர்வாகவும் பலவேளைகளில் இருக்கின்றது. 

மனச் சோர்விலிருந்து விடுபட உலக மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர்.  திரையரங்குகளுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது, மது அருந்துவது, மனத்துக்குப் பிடித்த நண்பர்களை அழைத்துத் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது  எனப்   பல்வேறு முயற்சிகளைச் செய்கின்றனர். மேலும் சிலர் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்கின்றனர். 

அன்பானவர்களே, இன்றைய தியானவசனம் சொல்கின்றது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." அதாவது சோர்ந்திருக்கின்றவனுக்கும் பெலனில்லாமலிருக்கின்றவர்களுக்கும்  பெலன் கொடுப்பவர் தேவன் ஒருவரே.  தேவன் அனைத்துச்   சோர்வையும்  மாற்றுகின்றவர் மட்டுமல்ல அவற்றை மேற்கொள்ளும் பெலத்தை (சத்துவத்தை) நம்மில் பெருகப்பண்ணுகின்றவர். 

அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன என்று கேள்வி எழுகின்றது. உடல் சோர்வோ மனச் சோர்வோ ஆவிக்குரிய சோர்வோ எதுவாக இருந்தாலும் நாம் ஆறுதல் அளிக்கும் மனிதர்களையோ கவலை தீர்க்கும் உலகப் பொருட்களையோ நம்பி ஓடாமல் தேவ கிருபையை இறைஞ்சவேண்டியது அவசியம். காரணம்,  நமது தேவன் நமக்கு வாக்களித்துள்ளா, " என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று.

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பலவீனங்களை மேற்கொள்ள தேவ கிருபை அவசியம். அவரது கிருபை இல்லாமல் சுய முயற்சியால் நாம் சோர்விலிருந்து நிரந்தர விடுதலை அடைய  முடியாது. சில உலக வழிமுறைகள் தற்காலிக விடுதலையைத் தரலாமே தவிர நிரந்தர விடுதலையைத் தேவன் ஒருவரே நமக்குத் தரமுடியும். எனவே, சோர்ந்துபோகிறவனுக்குப்   பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற அவரை நாம் பற்றிக்கொள்ளவேண்டியதும் அவரது கிருபைக்கு இறைஞ்சவேண்டியதும்  அவசியம். 

இன்றைய தியான வசனத்தை எழுதிய ஏசாயா தொடர்ந்து எழுதும்போது இரண்டு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார்,  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) ஆம், கர்த்தரை நாம் பற்றிக்கொள்ளும்போது சோர்வு, இளைப்பு எல்லாமே மறைந்துவிடும். நாம் ஓடினாலும் இளைப்படையமாட்டோம்,  நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: