'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,209 💚 மே 31, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்." ( 1 கொரிந்தியர் 7 : 19 )
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் இரண்டு அன்புக் கட்டளைகளை மட்டுமே கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்பு செய்வதும், தன்னை அன்பு செய்வதுபோல பிறரையும் அன்பு செய்வதுமே அந்தக் கட்டளைகள். இவைகளைக் கைக்கொள்வதே முக்கியம். இவைகளைக் கைவிட்டு மேலோட்டமாக நமது உடல் சம்பந்தமான செயல்களைச் செய்வது அர்த்தமற்றது என்கிறார் அப்போஸ்தலரான பவுல்.
இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும் உடல் சார்ந்த காரியங்களான உணவுக் கட்டுப்பாடு, உடலை வருத்தி சில பக்தி காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கலாம். ஆனால் ஒருவர் கிறிஸ்து கூறிய கட்டளைகளுக்கு முரணாக நடந்துகொண்டு இவைகளை செய்வதில் அர்த்தமில்லை. இதனையே அப்போஸ்தலரான பவுல், "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 ) இங்கு உணவைப்பற்றி பவுல் கூறினாலும், உணவு மட்டுமல்ல, பல உடல் சார்ந்த செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பதும் இப்படியே.
விருத்தசேதனம் ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே ஒரு முக்கிய பிரச்சனையாகக் கருதப்பட்டது. ஏனெனில் யூதர்களது முறைமையான விருத்தசேதனத்தை பிற இனத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் செய்யவேண்டுமா வேண்டாமா என்று பிரச்சனை எழுந்தது. பிற இனத்து மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருந்தது.
அப்போது அப்போஸ்தலர்கள் கூடி எடுத்த முடிவு என்னவென்றால், "விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 15 : 28, 29 )
இன்று நமக்குள் விருத்தசேதனம் என்ற செயல்பாடு இல்லாவிட்டாலும் புதிதாக மனம்திரும்பி கிறிஸ்துவுக்குள் வரும் விசுவாசிகளைச் சிலர் தேவையில்லாத முறைமைகளைப் பின்பற்றச்சொல்லி வலியுறுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது. உதாரணமாக, உபவாசமிருத்தல், காணிக்கை அளித்தல் அந்நியபாஷை பேசுதல் இவைகளில் தவறான வழிகாட்டுதல்களைக் கொடுக்கின்றனர். ஒருவரை கர்த்தர் தனக்கு ஏற்புடையவராக இரட்சிக்கின்றார் என்றால் தேவனுடைய ஆவியானவரே அவரது உள்ளத்தில் உணர்த்தி சத்தியத்தின் பாதையில் நடத்துவார்.
தேவையற்ற கட்டளைகளும் வழிகாட்டுதல்களும் புதிய விசுவாசிகளைக் குழப்பமடையவேச் செய்யும். எனவே, மேலோட்டமாக நமது உடல் சம்பந்தமான செயல்களைச் செய்வது அர்த்தமற்றது என்கிறார் அப்போஸ்தலரான பவுல். தேவையற்ற குழப்ப மனநிலை இல்லாமல் பவுல் கூறுவதுபோல, "தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்." எனவே கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment