Thursday, May 16, 2024

மகிழ்ச்சியோடு கொடுத்தல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,199       💚 மே 21, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்" ( லுூக்கா 21 : 4 )

இன்று பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் ஆலய காரியங்களுக்கு அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு அதிக மதிப்பும் குறைவாகக் கொடுப்பவர்களுக்கு அற்பமான உபசரிப்பும் உள்ளது நாம் கண்கூடாகக் காணக்கூடிய ஒரு விஷயம். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் இந்த வேறுபாடு அதிகமாகக் காணப்பட்டாலும் பாரம்பரிய சபைகளிலும் இந்த பாரபட்சம் உள்ளது. 

ஆலய காரியங்களுக்கு அதிகமாக் கொடுப்பவர்கள் தான் மேலான நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரமுடியும். இதற்கு இன்னொரு காரணம் அதிகமாக ஆலய காரியங்களுக்குக் கொடுக்க இயலாதவர்கள் தாங்களாகவே சற்று ஒதுங்கி நின்றுவிடுகின்றனர். பல்வேறு செலவினங்கள் வரும்போது வசதி குறைந்தவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது எனும் நிலைமையே இன்று இருக்கின்றது. 

ஆனால், ஆவிக்குரிய முறையில் பார்ப்போமானால் இது தேவனுக்கு ஏற்பில்லாத செயலாகும்.  ஏனெனில்,  ஆவிக்குரிய செயல்பாடுகள் பணத்தின் அடிப்படையில் உள்ளவையல்ல. அது தேவன் பார்க்கக்கூடிய உள்ளான மனித நிலைமை, மனித இருதயத்தின் எண்ணங்களின் அடிப்படையிலானவை. காணிக்கை அதிகமாகக் கொடுக்க முடியாதவர்கள் உண்மையில் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கலாம். தேவன் அதனையே முக்கியமாகக் கருதுகின்றார். 

எனவேதான் அதிகமாகக் காணிக்கைகளைப் போட்ட மற்றவர்களைவிட இரண்டு காசு காணிக்கைப் பெட்டியில் போட்ட பெண்ணை இயேசு கிறிஸ்து பாராட்டி நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளும் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தினார்.  மற்றவர்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இந்தப் பெண்ணோ தனது  வறுமை நிலையிலும் தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று பொதுவாக ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் தசமபாக காணிக்கையை அதிகம் வலியுறுத்தி பிரசங்கிக்கப்படுகின்றது. ஆனால், பத்தில் ஒன்று காணிக்கையாகச் செலுத்த புதிய ஏற்பாட்டில் காட்டாயப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.  மாறாக,  நாம் எதனை தேவனுக்கென்று செலுத்தினாலும் மன மகிழ்ச்சியோடு கொடுக்கவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

மக்கெதோனியா சபை மக்களைக் குறித்து கொரிந்திய சபையினருக்கு அப்போஸ்தலரான பவுல்  எழுதும்போது, "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." ( 2 கொரிந்தியர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

ஆம், அவர்கள் தரித்திரர்கள்; அதாவது ஏழைகள். அப்படியிருந்தும் "தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இப்படிச் சந்தோஷமாய்க் கொடுப்பதையே தேவன் விரும்புகின்றார். இயேசு கிறிஸ்து புகழ்ந்து பேசிய இரண்டு காசு காணிக்கைப்பெட்டியில் போட்ட பெண்ணும் இப்படி சந்தோஷத்தோடு கொடுத்தவள்தான். அவளது இருதயத்தை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். 

நாம் அதிகமாக காணிக்கை போடுவதையும் ஆலயங்களுக்கு என அதிகமாகப் பொருளுதவிச் செய்வதையும் மக்கள் வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் தேவன் நாம் என்ன மனநிலையில் அதனைச் செலுத்துகின்றோம் என நமது இருதயத்தையும் (மற்றவர்கள் நம்மைப் பெருமையாகப் பார்க்கவேண்டும் எனும் எண்ணம் இருக்கின்றதா என்பதனையும்) நாம் காணிக்கையாகச் செலுத்தும் பணத்தை எப்படிச் சம்பாதித்தோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். 

எனவே மற்றவர்களைப்போல் ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகளையும் பொருளுதவியையும் நம்மால் செய்யமுடியவில்லையே எனும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியோடு நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். அதுபோல, அதிகமாக ஆலயக் காரியங்களுக்குச் செய்பவர்கள் பெருமை இல்லாமல் உண்மையான தேவ அன்போடு, நேர்மையாக சம்பாதித்தவற்றை ஆலயங்களுக்குச்  செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  
  
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: