'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,196 💚 மே 18, 2024 💚 சனிக்கிழமை 💚
"கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )
நமக்குள் கிறிஸ்து வாழ்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம்தான் இன்றைய வசனம்கூறுவது. அதாவது கிறிஸ்து நமக்குள் வாழ்கின்றார் என்றால் நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், நமது ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். செத்தவர்கள் பாவம் செய்வதில்லை. அதுபோல நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது நமதுசாரீரம் செத்ததாகின்றது. நாம் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்படுகின்றோம். எனவே நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாகின்றது; பாவம் செய்யாத ஒன்றாகின்றது.
அதேநேரம் நமது ஆவியானது உயிர்ப்படைகின்றது. கிறிஸ்துவைப்போல ஜீவனுள்ளதாக மாறுகின்றது. ஆம், கிறிஸ்துவோடு நாம் பாவத்துக்கு மரித்தோமானால் அவரோடுகூட பிழைத்துமிருப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 ) என்று கூறுகின்றார்.
கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருந்தால் நாம் உடல்சார்ந்தவர்களாக இருக்கமாட்டோம். அதாவது நமது சரீர நன்மைகளுக்காகவே உழைக்கின்றவர்களாக இருக்கமாட்டோம். இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனமாக அப்போஸ்தலரான பவுல் இதனையே குறிப்பிடுகின்றார். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்ட வர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )
ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படவேண்டுமானால் அவரது ஆவி நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. அப்படிக் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருக்கும்போது இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல, நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
நாம் மெய்யான ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழவேண்டுமானால் தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இருந்து செயல்படவேண்டும். அப்போதுதான் நமது சாவுக்கேதுவான சரீரம் உயிரடையும். "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )
எனவே நாம் கிறிஸ்துவுக்குள் தூய்மையான வாழ்வு வாழவேண்டுமானால் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வந்து செயல்படவேண்டியது அவசியம். அப்படிக் கிறிஸ்து நமக்குள் இருந்தால் நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ஆராதனைகளில் கலந்துகொண்டு, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, வேதாகமத்தை வாசித்து, காணிக்கை அளிப்பதால் மட்டும் நாம் தூய்மையானவர்களாக மாற முடியாது. இத்தகையச் செயல்களை அனைத்து மதத்தினர்களும் அவரவர் முறைமைகளின்படி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நாமும் ஆவியானவருக்கு இடஙகொடாமல் இவைகளை மட்டும் செய்து கொண்டிருப்போமானால் வெறும் மதவாதிகளாகவே இருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment