Thursday, May 16, 2024

தீர்க்கத்தரிசி, அவனிடம் விசாரிப்பவன் இருவருக்கும் தண்டனை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,201     💚 மே 23, 2024 💚 வியாழக்கிழமை 💚


"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." ( எசேக்கியேல் 14 : 10 )

நமது தேவன் தனது பிள்ளைகள் ஒரு தகப்பனோடுள்ள உறவுபோல தன்னோடு உறவுகொண்டு வாழவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பாலான மக்கள் தேவனோடு எந்தத் தனிப்பட்ட உறவும் ஐக்கியமுமின்றி வாழ்கின்றனர். தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது ஊழியர்களைத்தேடி,  அதுவும்  தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர் என தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஊழியர்களைத் தேடி குறிகேட்கச் செல்வதுபோலச் செல்கின்றனர். 

இப்படி தேவ ஐக்கியமற்ற விசுவாசிகளையும் அவர்களுக்கு ஏற்றாற்போல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களையும் பார்த்து கூறுவதாக இன்றைய தியான வசனம் உள்ளது. ஆம், இத்தகைய தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும் என்கின்றார் கர்த்தர். 

ஆம் தேவன் தனது மக்கள் எதனைப்பற்றியும் தன்னிடம் நேரடியாக விசாரித்து அறியவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் இதன்  காரணத்தையும் பின்வருமாறு கூறுகின்றார்:-  "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 11 )

அதாவது தனது ஜனமாகிய இஸ்ரவேலர்கள் (புதிய ஏற்பாட்டு முறைமையில் நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள்)  தன்னைவிட்டு வழிதப்பிப் போகாமலிருக்கவும் தங்கள் மீறுதலால் தங்களைக் கெடுத்துக்கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்பதற்காக இப்படிச் சம்பவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே தீர்க்கத்தரிசிகளிடம் விசாரிக்கும் இத்தகைய முறைகேடான  செயலைச் செய்யாமலிருந்தால் "அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்" என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 

இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துவது, நாம் தனது மக்களாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். ஒரு தகப்பனிடம் அல்லது தாயிடம் நாம் நமது பிரச்சனைகளைப்  பேசி முடிவுகாண்பதுபோல நாம் அவரிடம் பேசவேண்டுமென்று விரும்புகின்றார். இதற்கு மாறாக நாம் குறுக்கு வழியில் விடைதேடி தீர்க்கதரிசன ஊழியர்களைத் தேடி ஓடினால் நமக்கும் அந்தத் தீர்க்கதரிசிக்கும் தண்டனை உண்டு என்கின்றார் தேவன். 

எனவே அன்பானவர்களே, தேவனோடுள்ள நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள முயல்வோம். நமது தேவைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடமே கூறுவோம். நாம் அப்படி மாறும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சியடைவார். தேவனுக்கும் நமக்குமுள்ள இத்தகைய உறவே நிரந்தர உறவு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

No comments: