Wednesday, May 15, 2024

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவரும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,197      💚 மே 19, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து" ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 8 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தையும், பிதாவிற்குமுன் அவருக்குள்ள உரிமையையும் இன்றைய வசனம் விளக்குவதாக உள்ளது.  சிங்காசனத்தில் வீற்றிருந்தவரது கையிலிருந்த "புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 2 ) எனக் கூறுகின்றார் யோவான். 

மேலும், "வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 3 ) என்றுகூறப்பட்டுள்ளது. அப்போது அப்படி ஒருவரும் இல்லையே என்று  நினைத்து யோவான் அழுத்ததாகக் கூறுகின்றார். "அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதன் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 5 )

ஆம் அன்பானவர்களே, பிதாவின் கையிலுள்ள அதிகாரத்தை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவருக்கும் அவர் கொடுக்கவில்லை. இதனையே, வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. பிதாவுக்கு நிகராக இருக்கக்கூடியவர் நமது ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. எனவே அவரைத் தவிர வேறு எவரையும் நாம் துணைக்கு அழைக்க முடியாது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." ( 1 தீமோத்தேயு 2 : 5, 6 ) என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பேதுருவும், "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" என்கின்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

பரலோக மகிமையில் நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும்  பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து வணக்கவேண்டுமானால் அவர் எத்தனை அதிகாரமும் வல்லமையும் உள்ளவராக இருக்கவேண்டும்!!! ஆம் அன்பானவர்களே, இதிலிருந்து எந்த பரிசுத்தவானும் நமக்காக பிதாவாகிய தேவனிடம் பரிந்துபேச முடியாது என்பது தெளிவாகின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே அந்தத் தகுதியுடையவர். 

"நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 20 ) என அவர் பூமியில் இருந்த நாட்களிலேயே நமக்காக பிதாவிடம் ஜெபிக்கவில்லையா? எனவே அவரையே நமது துணையாக பற்றிக்கொள்வோம். "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 8 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: