'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,184 💚 மே 07, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 58 )
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்தான் ஆபிரகாம். அவரே இஸ்ரவேல் குலத்தினரின் தந்தை. இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாகப் பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. எனவேதான் நாம் அவரைக் கடவுள் என்கின்றோம்.
"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 2, 3 ) என்று வாசிக்கின்றோம். உலகத்தையே அவர் படைத்தார் என்பதால் அவர் ஆபிரகாமுக்கு முந்தினவர். இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.
ஆனால் இன்று உலகில் வாழும் பல கிறிஸ்தவர்களைப்போல யூதர்களாலும் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே அவர்மேல் கோபம்கொண்டு கல்லெறிய முயன்றனர். "அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்." ( யோவான் 8 : 59 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, அன்னை மரியாவிடம் மனிதனாக கிறிஸ்து பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. உலகினில் தான் மனித உடலெடுக்க அன்னை மரியாளை கருவியாகத் தெரிந்துகொண்டார். எனவே அவர் அன்னை மரியாளுக்கு முந்தினவர்.
கிறிஸ்துவை வல்லமையுள்ள தேவனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிக் கூறுவதால் அன்னை மரியாவை நாம் தாழ்வாக எண்ணுகின்றோம் என்று பொருளல்ல, மாறாக கிறிஸ்து காலங்களையும் யுகங்களையும் கடந்த தேவாதி தேவன் என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதனால்தான்.
வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்த ஒருவராக நாம் அவரைப் பார்த்தோமானால் அவரை நாம் கடவுளாக முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், புத்தர், காந்தி, அரிஸ்ட்டாட்டில் போன்று ஒரு மகானாக அவரை நாம் நம்பியுள்ளோம் என்றுதான் பொருள். அப்படி நம்பிக்கொண்டிருப்பவர் மீட்பு அனுபவத்தை அடையவும் முடியாது, பாவத்திலிருந்து முழு விடுதலையை அடையவும் முடியாது.
ஆம் அன்பானவர்களே, அவர் ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இருக்கிறார்; உலகம் தோன்றுவதற்குமுன்னமே இருக்கிறார். இதனையே அவர் பிதாவை நோக்கி ஜெபித்தபோது கூறினார், "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்." ( யோவான் 17 : 5 ) என்று. இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பெயர் கிறிஸ்தவர்களே.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment