'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,183 💚 மே 06, 2024 💚 திங்கள்கிழமை 💚
"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )
ஆவிக்குரிய வாழ்வில் நாம் கொள்ளவேண்டிய உறுதி இதுதான். அதாவது, கர்த்தரோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்தி, ஒரே குடும்பத்தில் வாழ்பவர்களைப்போல வாழவேண்டும். இதுவே ஆவிக்குரிய வாழ்வில் நாம் எடுக்கவேண்டிய முக்கியமான நிலை.
இதனையே, ஆவிக்குரிய வாழ்வு ஒரு ஓட்டப்பந்தயத்தைப் போன்றது என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது நம் கண்கள் இறுதி இலக்கைநோக்கி இருக்கவேண்டுமேத் தவிர நம்மோடுகூட ஓடுபவர்களையும் சுற்றிலும் நிற்பவர்களை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் வெற்றிபெற முடியாது. எனவே நாம் பரிசைப் பெற்றுக்கொள்ளத் தக்கவர்களாக ஓடவேண்டும். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 )
சூழ்நிலை, பிரச்சனைகளை நோக்காமல் கர்த்தரையே இலக்காகக் கொண்டு வாழ்வோம். அவரை நமது குடும்பத்து நபராக, நம்மோடு ஒரே பாத்திரத்தில் உண்டு உறவோடு வாழ்பவராக வாழ்வில் நிறுத்திக்கொள்வோம். அப்படி வாழ்வோமானால் அவரும் நமது அனைத்துக்கும் போதுமானவையாக இருப்பார். இதனையே இன்றைய வசனத்தில் இறுதியாகத் தாவீது கூறுகின்றார், "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ஆம், அப்படி நாம் வாழும்போது இந்த உலகிலும் மறுஉலகிலும் தேவனோடுள்ள நமது உரிமை காப்பாற்றப்படும். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல நமது பரிசினையும்நாம் பெற்றுக்கொள்வோம்.
No comments:
Post a Comment