INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Friday, May 31, 2024

மாயக்காரனின் ஜெபம்

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,216       💚 ஜூன் 07, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 5 )

ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமுள்ள தனிப்பட்ட உறவின் அடையாளம். நாம் அவரோடு பேசுவதும் அவர் பேசுவதைக் கேட்பதும்தான் ஜெபம். நாம் தேவனோடு பேசும்போது உலக காரியங்களை மறந்து அவரோடு பேசவேண்டும். 

நாம் ஜெபிப்பதை நம்மைப் பலர் பார்த்துக்கொண்டிருக்க, புகைப்படக் கேமராவும் வீடியோவும் பதிவு செய்துக்கொண்டிருக்குமானால் நாம் எப்படி அந்தரங்கமாக ஜெபிக்கமுடியும்?  அந்த ஜெபம் எப்படி தேவனுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? அத்தகைய ஜெபம் மாயக்காரனின் ஜெபம் என்று வேதம் கூறுகின்றது. "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு குறிப்பிடுகின்றார்.

அதாவது,  அவர்கள் ஜெபிப்பதை உலக மக்கள் பார்த்தார்களே அதுதான் அவர்கள் அத்தகைய ஜெபத்தால் அடைந்த பலன். அதனை அவர்கள் அடைந்து தீர்த்தாகிவிட்டது. எனவே இதற்குமேல் அந்த ஜெபத்தால் பலனில்லை என்று பொருள். 

இன்று பல கிறிஸ்தவ ஊழியர்களும் இப்படித்  தங்கள் தனிப்பட்ட ஜெபத்தை வீடியோ காட்சியாக பதிவேற்றி முகநூலில் வெளியிடும் அவலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  "மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்" என்றுதான் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது, ஜெபிப்பதை முகநூலில் வெளியிடுவதைக் குறித்துக் குறிப்பிடவில்லை என்று இவர்கள் எண்ணிக்கொள்கின்றார்கள். 

அன்பானவர்களே, அரசியல் தலைவர்கள் மக்களைக் கவரவும் ஓட்டுகள் வாங்கவும் இப்படி நடிக்கலாம். ஆனால் தேவனுக்குமுன் மனிதர்களது நடிப்பு எடுபடாது. பெருமையில்லாமல், தன்னைத் தாழ்த்தி, தனது பாவங்களை அறிக்கையிட்டு அந்தரங்கத்தில் ஜெபிப்பதையே தேவன் விரும்புகின்றார். "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 ) என்று வேதம் கூறவில்லையா? 

ஆலயங்களில் நாம் ஜெபிப்பதற்கும் தனிப்பட்ட ஜெபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தனிப்பட்ட ஜெபம் வல்லமையுள்ளது. தனி ஜெபத்தில்தான் நாம் தேவனோடு நெருக்கமாக பேசவும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும். பல கிறிஸ்தவர்கள் ஆலய ஆராதனையோடு ஜெபத்தை முடித்துக்கொள்கின்றனர். இப்படி இருக்கும் மக்கள் தேவனது பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாது. 

எனவே அன்பானவர்களே, நமது தனி ஜெப வேளையை நாம் அதிகரிக்கவேண்டும். அத்துடன் நமது ஜெபம் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ளத்  தொடர்பு என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது அறைவீட்டுக்குள் தனியே அந்தரங்கத்திலிருக்கிற நமது  பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுவோம்; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற நமது பிதா நமக்கு வெளியரங்கமாய்ப்   பலனளிப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே தியானிப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,215     💚 ஜூன் 06, 2024 💚 வியாழக்கிழமை 💚

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 )

பொதுவாக இரவு நடுச்சாமத்தில் விழிக்கும்போது மனிதர்களது நினைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் கடன் தொல்லையால் அவதிப்படும்போது நமக்குக் கடன்கொடுத்தவர்களது முகங்களும் அவர்கள் நமக்கு எதிராகப் பேசிய பேச்சுக்களும் நமக்கு நினைவுக்குவரும். 

கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளும், நமது குடும்பத்தைப்பற்றிய எண்ணமும் நம்மை வருத்தமுறச்செய்யும். காதல் வசப்பட்டவர்களுக்குத் தங்களது காதலர்களின் முகமும் அவர்களது அன்பான பேச்சுகளும் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது , இராச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத்  தியானிப்பதாகக் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தை பஞ்சு மெத்தையில் அமர்ந்துகொண்டு எழுதவில்லை. மாறாக மிகுந்த உபத்திரவத்தின் மத்தியில், சுகமாகப்   படுப்பதற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்துகொண்டு எழுதுகின்றார். இதனையே வறண்டு தண்ணீரற்ற பாலை நிலத்தில் நடுச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத் தியானிப்பதாகக் இன்றைய தியான சங்கீதத்தின் முதல் வசனமாக அவர் கூறுகின்றார்:-

"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது."( சங்கீதம் 63 : 1 )

நமது வாழ்க்கையினை நாம் நினைத்துப் பார்ப்போம். நிச்சயமாக இதை வாசிக்கும் எவரது வாழ்க்கையும் இப்படிப்பட்ட வீடற்று பாலை நிலத்தில் வாழக்கூடிய வாழ்க்கையாக இருக்காது என்று எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை நமக்குக் கடன்களும் நோய்களும் இதரப் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் நாம் பிரச்னைகளையே நோக்கிடாமல் தாவீதைப்போல சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே நோக்கிப் பார்க்க இன்றைய தியான வசனம் நமக்கு வழி  காட்டுகின்றது.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் இதுபோலவே இருந்தனர். அவர்கள் சிறைச்சாலைச் சூழ்நிலையையும் தாங்கள் கைதியாக அடைபட்டிருப்பதையும் எண்ணாமல் நடுச்சாமத்தில் தேவனைப் புகழ்ந்து பாடி ஜெபித்தார்கள். 

"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, நமது படுக்கையில் விழிப்பு ஏற்படும்போதெல்லாம் நமது பிரச்சனைகளை எண்ணிக் கலங்காமல்  தேவனையே நினைத்துத் தியானிப்போம். பவுல் அப்போஸ்தலரும் சீலாவும் அப்படி ஜெபித்தபோது "சிறைச்சாலைக் கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." என்று கூறப்பட்டுள்ளதுபோல நமது சிறையிருப்பின் வாழ்க்கையும் கட்டுக்களும் நிச்சயம் கழன்றுபோகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Wednesday, May 29, 2024

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,214      💚 ஜூன் 05, 2024 💚 புதன்கிழமை 💚


"கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோசெயர் 3:11)

இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஒரே தேவனுடைய பிள்ளைகளே. யாராக இருந்தாலும், எந்த மதம், ஜாதி, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் ஒரே பிதாவின் பிள்ளைகளே. அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார். 

இன்று நாம் கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அப்படி நாம் வாழ்வதால் நாம் மட்டுமே கடவுளின் மக்கள் என்று எண்ணிவிடக்கூடாது. எல்லோரும் அவரது பிள்ளைகளே. இன்று இந்த அறிவும் தெளிவும் இல்லாததால்தான் மற்றவர்களை அற்பமாக பார்க்கும் நிலைமை உள்ளது. ஆனால் நாம் அப்படி இருக்கலாகாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவேதான் தொடர்ந்து அவர் கூறுகின்றார்:-

"ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (கொலோசெயர் 3:12, 13)

ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான்குபேருமே அவருக்கு ஒன்றுதான். ஆனால் நான்கு பிள்ளைகளும் வெவ்வேறான குணங்கள் உள்ளவர்களாகவும், சிலர்  தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்கள். எனவேதான் பவுல் கூறுகின்றார், "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

இந்த எண்ணமும் பவுல் குறிப்பிடும் சுபாவங்களும் இல்லாததால்தான் மத வெறுப்புகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்குள், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமை இல்லாததற்கும் இதுவே காரணம். 

சிலர்  சபை ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து பல்வேறு சபையினைச் சார்ந்த ஊழியர்களை அழைப்பதுண்டு. இது நல்ல ஒரு முயற்சிதான். ஆனால் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது அனைவருமே தாங்கள் சார்ந்துள்ள சபை ஊழியர்களே தலைமை இடத்துக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே இத்தகைய பல கூட்டமைப்பு முயற்சிகள் ஒரு சில மாதங்களிலேயே தோல்வியில் முடிவடைந்துவிடுகின்றன.    

சபைகளில் மட்டுமல்ல, ஊர்களில் பிரச்னை ஏற்படுவதற்கும் இத்தகைய பெருந்தன்மைக் குணமில்லாமையே காரணம். ஆம் அன்பானவர்களே, பவுல் அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோல "கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" எனும் எண்ணம் வரும்போதுதான் அனைவரையும் மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இதனையே கிறிஸ்து விரும்புகின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Tuesday, May 28, 2024

என் ஜனங்களோ மதியற்றவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,213    💚 ஜூன் 04, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". ( எரேமியா 4:22)

ஆதிகாலமுதல் தேவன் பல்வேறு விதங்களில் மனிதர்களிடம் இடைபட்டுக்கொண்டிருக்கின்றார்.  ஏதேனில் ஆதாம் ஏவாளோடு உலாவிய தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களோடும்  இடைப்பட்டார். பின்னர் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தி அவரோடு பேசி இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்.  யோசுவா, சாமுவேல், பல்வேறு நியாதிபதிகள், அரசர்கள் மூலம் தனது மக்களை நடத்தினார்.  ஆனாலும் மக்கள் அவரை அறியவோ, அறிந்துகொள்ளவேண்டுமென்று விருப்பப்படவோ இல்லை. 

தேவன் இஸ்ரவேல் மக்களை பல்வேறு விதமாக நேசித்து நடத்தியும் அவர்கள் மீண்டும் மீண்டும் வழிவிலகி நடந்து தேவனைத் துக்கப்படுத்தினர். எனவே அவர் கூறுகின்றார், "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை"

இன்றைய வசனம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைக்குறித்து கூறப்பட்டிருந்தாலும் இதே நிலைமைதான் இன்றும் தொடர்கின்றது. பொதுவாக பலரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் தேவனை அறியவேண்டும் எனும் உணர்வோடு செல்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தேவனிடமிருந்து உலக நன்மைகளைப் பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து ஆலயங்களுக்குச் செல்கின்றனர். 

மக்கள் இப்படித் தேவனை அறியாதிருப்பதால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல்,  "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மனிதர்களது கேடான சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் காரணம் தேவனை அறியாமல் இருப்பதுதான்.

இப்படித் தேவனை அறியாதிருப்பதால் பலரும் பல்வேறு பக்திச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களில் உள்ளான மாறுதல்களைக் காண முடிவதில்லை.  ஆம், இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, "பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தனிப்பட்ட முறையில் அறிந்தால் மட்டுமே நம்மில் சுபாவமாற்றம் ஏற்பட முடியும். எனவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான ஆன்மீகத் தேடுதலும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.  அப்படித் தேடும்போது மட்டுமே நாம் அவரைக் கண்டுபிடிக்கமுடியும்.  அப்படிக் கண்டுபிடிக்கும்போது மட்டுமே நமது குணங்களில் மாற்றம் ஏற்படும். 

நம்மை யாராவது அறிவுகெட்டவனே / அறிவுகெட்டவளே என்று கூறிவிட்டால் நமது மனம் எவ்வளவு வேதனைப்படும்? ஆனால் அவரை நாம் அறிய முயலாவிட்டால் தேவனும் நம்மைப்பார்த்து அப்படிதான் கூறுவார்.  "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை."

நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து, "தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தித்தாரும்; நான் உமது மகனாக, மகளாக வாழ விரும்புகின்றேன்" என்று உண்மையான மனதுடன் ஜெபிப்போம்.  "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                      

Saturday, May 25, 2024

பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,212    💚 ஜூன் 03, 2024 💚 திங்கள்கிழமை 💚

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 )

நித்திய ஜீவனைக்குறித்து வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் வாசித்தாலும் இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறுவது நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். அதாவது நாம் நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வை அடையவேண்டுமானால் மெய்யான தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களோடு உறவுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியமாகும்.  

பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவது என்பது வெறுமனே அவர்களுக்கு ஆராதனை செய்வதோ ஒரு சில கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதோ அல்ல; மாறாக அவரை ஒரு குழந்தைத் தனது தாயையும் தகப்பனையும் அறிந்து அவர்களோடு ஐக்கியமாக இருப்பதுபோல நமது தனிப்பட்ட வாழ்வில் அவரோடு உறவை வளர்த்துக் கொள்வதைக் குறிக்கின்றது. அவரோடு பேசுவதும் அவர் நம்மோடு பேசுவதைக் அன்றாடம் கேட்டு  நடப்பவர்களாகவும் இருப்பதைக் குறிக்கின்றது. 

அதாவது, நாம் மனம் திரும்பிப்  பாவ மன்னிப்பைப் பெற்றால் போதாது; அவர்மேல் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் போதாது; ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதோ, கைகளை ஒருவர்மேல்வைத்து குணமாக்குவதோ, மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு போன்றவரைப்பற்றி அறிந்து மற்றவர்களுக்கு உபதேசிப்பதோ மட்டும் போதாது. இவை அனைத்தும் கிறிஸ்தவ விசுவாசம்தான். ஆனால் நாம் பூரணராகவேண்டுமானால் இவற்றைக் கடந்து, இவற்றுக்கும் மேலாக பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.      

எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர், "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1, 2 ) என்று கூறுகின்றார். இவைகள் அஸ்திபார உபதேசங்கள்தான் ஆனால் நாம் இவற்றையே சொல்லிச் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பது போதாது.

ஒரு குழந்தைக்கு நாம் நல்ல உணவு, உடை, பராமரிப்புக் கொடுக்கலாம், ஆனால் அந்தக் குழந்தை நாம் எவற்றைக்கொடுத்தாலும் அதில் முழுத் திருப்தி அடையாது. மாறாக அது தனது தாயின் முகத்தையும் தாயின் அரவணைப்பையும் தான் அதிகம் விரும்பும். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு போன்றவை நல்ல உபயோகமான காரியங்களாக இருந்தாலும் நாம் தனிப்பட்ட முறையில் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழ்வதே நித்திய ஜீவன். இந்தத் தனிப்பட்ட உறவினை அடைந்துகொள்ள முயல்வோம். 

இதற்கு நாம் உலக ஆசீர்வாதங்களையே அவரிடம் கேட்பதை விட்டு ஆவிக்குரிய ஆர்வமுள்ளவர்களாக, ஆவிக்குரிய மேலான காரியங்களை ஜெபத்தில் அவரோடு பேசி, கேட்டு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், இம்மைக்குரியவைகளையல்ல; மேலானவைகளையே தேடுபவர்களாக வாழ்வோம். மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

கர்த்தரை முழு இருதயத்தோடும் சேவியுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,211       💚 ஜூன் 02, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்." ( 1 சாமுவேல் 12 : 20 )

நமது தேவனது மன்னிக்கும் மனப்பான்மையையும், அவரது அளவில்லாக் கிருபையையும் சாமுவேல் உணர்ந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். நீங்கள் தேவனுக்கு எதிராக பல பொல்லாங்கான செயல்களைச் செய்துளீர்கள். பரவாயில்லை, ஆனால், கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் மட்டும் இருந்து கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள் என்கின்றார்.

நாம் தேவனுக்கு எதிராகப் பலப்  பாவங்களைச் செய்திருந்தாலும் ஒருபோதும் அவரை மறுதலித்துப் பின்வாங்கிப் போய்விடக்கூடாது எனும் உண்மையினை அவர் இங்கு விளக்குகின்றார். "நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்" என்பது நமக்கும் பொருந்தும். பல பாவங்களை நாம் செய்திருந்தாலும் அவரை நாம் மறுதலியாமல் இருப்போமானால் அவரது கிருபையினால் இரக்கத்தையும் மன்னிப்பையும்  பெறுவோம். 

இதற்கான காரணத்தையும் சாமுவேல் அடுத்த இரு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார். அதாவது,  "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்." ( 1 சாமுவேல் 12 : 22 ) கர்த்தர் நம்மை அவருக்கு உகந்த மக்களாக விருப்பப்பட்டுள்ளார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், ஜீவனுள்ள தேவனாகிய அவர் நம்மைத் தனது மக்களாகத் தெரிந்துகொண்டுள்ளார்.

நல்ல ஆயனாகிய இயேசு கிறிஸ்துவும் இதனையே கூறினார். எந்த ஆடும் வழிதப்பித் போவது அவருக்குப் பிரியமில்லை. அவர் நாம் ஒவ்வொருவரது மனநிலையினையும் அறிந்துள்ளார். இதனையே அவர், "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்று கூறினார்.

"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்"என்று இயேசு கிறிஸ்து கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது அவர் அவருடைய மக்களாகிய நம்மை அறிந்துள்ளார், நாம் அவரை மறுதலியாமல் இருக்கின்றோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். சில வேளைகளில் துன்பங்கள் நெருக்கும்போது சிலர் மனதுக்குள் சோர்வடைந்து, "என்ன ஜெபம் செய்தும் தேவன் என்னையும் எனது ஜெபத்தையும் கேட்கவில்லை....நான் இனி அவரிடம் எதனையும் கேட்கமாட்டேன்" என விரக்தியில் கூறுவதுண்டு. 

அன்பானவர்களே இத்தகைய மனித மன நிலையையும் அவர் அறிவார். நமது பலவீனம் இது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் நாம் இத்தகையைச் சூழ்நிலையிலும் அவரை மறுதலியாமல் பிற தெய்வங்களை நாடாமல் இருப்போமானால் அவர் நம்மைச் சேர்த்துக்கொள்வார். 

இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற தெய்வங்களை நாடிச் செல்வார்கள் என்பது சாமுவேலுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவர் மக்களிடம் "விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே." ( 1 சாமுவேல் 12 : 21 ) என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இதனைக் கூறுகின்றார். 

எனவே அன்பானவர்களே, எந்த நெருக்கடிச் சூழ்நிலை வந்தாலும்  கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை நமது  முழு இருதயத்தோடும் சேவிப்போம். கர்த்தர் நமைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனமாகிய நம்மைக் கைவிடமாட்டார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

மரித்தோரை விட்டு எழுந்திரு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,210       💚 ஜூன் 01, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் ஆவிக்குரிய தூக்கத்தையும், மரணத்தையும் குறித்து நமக்கு அறிவுறுத்தி ஆலோசனைச் சொல்கின்றார்.  தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமோ, நமது பாவ காரியங்களைக் குறித்த உணர்வோ இன்றி வாழ்வதுதான் பவுல் குறிப்பிடும் தூக்கமும் மரணமும்.

இத்தகைய உணர்வுகள் இன்றியே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீ அப்படி அவர்களைப்போல இல்லாமல் விழித்து எழுந்திரு என்கின்றார் அவர். இதனையே அவர், "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" எனும் வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். மற்றவர்கள் எப்படியும் இருக்கட்டும், நீ முதலில் அத்தகைய மரித்தவர்களை விட்டு எழுந்திரு என்கின்றார். 

நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளலாம், வேதாகமத்தைத் தினசரி வாசிக்கலாம். ஆனால் இத்தகைய செயல்பாடுகள் இருப்பதால் நாம் ஆவிக்குரிய மக்கள் என்றும்  விழித்திருப்பவர்கள் என்றும் கூறிவிட முடியாது. காரணம், இத்தகைய செயல்களை அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்பச்  செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே இத்தகைய செயல்பாடுகள் ஆவிக்குரிய விழித்திருந்தல் ஆகாது. 

ஆம் அன்பானவர்களே, பாவத்தை நாம் மேற்கொள்ளாதவரை நாம் ஆத்தும மரணத்தில்தான் இருக்கின்றோம்.  "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23) இன்றைய தியான வசனத்தின்படி நாம் மரணத்திலிருந்து எழுந்திருக்க வேண்டுமானால்  நமது பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் நமக்கு வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும். 

அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் தூங்குகின்றவர்களையும் மரித்தவர்களையும் விட்டு எழுந்திருக்கின்றவர்கள் ஆவோம். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், நமது ஒளியிழந்த வாழ்க்கை அப்போது பிரகாசமடையும். நாம் மற்றவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டுகின்றவர்களாகவும் மாறுவோம். இதனையே இயேசு கிறிஸ்துத் தனது மலைப் பிரசங்கத்தில் கூறினார்:- 

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 )

"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 )

ஆதலால், தூங்குகிற நாம்  விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருப்போம்.  அப்பொழுது கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறது. தூக்கம், மரணம் இவற்றைவிட்டு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  எனவே, நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். அப்போது,  நமது ஆவிக்குரிய இருளும் உலக வாழ்விலுள்ள இருளும் அகன்று மனிதர்கள்முன் நாம் பிரகாசிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

Friday, May 24, 2024

வேதாகம முத்துக்கள் - மே 2024


                                                  - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,178                                  💚 மே 01, 2024 💚 புதன்கிழமை 💚

"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்." ( பிலிப்பியர் 4 : 11, 12 )

சிலருக்கு எவ்வளவு அதிகமான செல்வமோ, பெரிய பதவியோ இருந்தாலும் திருப்தி இருக்காது. காரணம், மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு மற்றவர்களுக்குள்ளது போல தங்களுக்கு இல்லையே எனும் மனநிலைதான் காரணம். இத்தகைய மனிதர்களுக்கு ஒருபோதும் மனமகிழ்சி இருக்கமுடியாது. 

அப்போஸ்தலரான பவுல் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர். ஆனால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் அற்பமும் குப்பையுமாக  எண்ணித் துறந்தவர். காரணம், கிறிஸ்துவின் மகிமைக்குமுன் அவரது செல்வமோ பதவியோ அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கிறிஸ்துவுக்காக அவர்பட்ட பாடுகள் எண்ணிலடங்காதவை. இன்றைய வசனத்தை அவர் குளிரூட்டப்பட்ட அறையில் (Air Condition )  இருந்துகொண்டு எழுதவில்லை. கிறிஸ்துவுக்காக அவர் பட்ட பாடுகளை அவர் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்" ( 2 கொரிந்தியர் 11 : 23-25 )

"அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்." ( 2 கொரிந்தியர் 11 : 26, 27 )

அன்பானவர்களே, எனவே நமது துன்பங்களை நாம் பவுல் அப்போஸ்தலர் பட்டத் துன்பங்களுடன் ஒப்பிடும்போது நமக்கு ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும். ஆவிக்குரிய மக்களாகிய நாம் இத்தகைய மனமுள்ளவர்களாக வாழவேண்டுமேத்தவிர நம்மைவிட உலக செல்வத்திலும், பதவியிலும் உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.   ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ மேலான அனுபவங்களும்  மேன்மைகளும் உண்டு. கிறிஸ்துவுக்குள் வாழும்போது இன்றும் நாம் அவற்றை அனுபவிக்க முடியும். ஆனால் செல்வமும் பதவியும் மட்டுமே வாழ்க்கை என எண்ணுபவர்கள் இவற்றை  அனுபவிப்பதில்லை. 

இதுவே மனமகிழ்ச்சி. இத்தகைய மனமகிழ்ச்சியை அனுபவித்ததால்தான் பவுல் அப்போஸ்தலர் தனக்கு வந்த  பாடுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை அறிவித்தார்.  இதுபோலவே, கிறிஸ்துவை அறிவிக்கும் கிறிஸ்தவ ஊழியன் என்பவனும் பாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவனாக இருக்கவேண்டும்.  இதுவே வேதம் நமக்குக் காண்பிக்கும் கிறிஸ்தவ வழிமுறை. கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய அனுபவங்களில் வளரும்போது மட்டுமே நாம் இத்தகைய மனநிலையினை அடைந்திட முடியும். ஆம், சிலுவைகள் இல்லாமல் உயிர்ப்பு இல்லை.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,179                                    💚 மே 02, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 10, 11)

நாம் மெய்யாக ஒருவரிடம் அன்புள்ளவர்களாய் இருந்தால் அவர்கள் என்ன விரும்புகின்றார்களோ அவைகளைச் செய்ய தயாராக இருப்போம்.  நமக்கு வேண்டியவர்கள் நமது வீட்டிற்கு வருகின்றார்களென்றால் வீட்டில் அனைத்தையும் சரிப்படுத்துவோம். அதுபோல கர்த்தரோடு நாம் ஐக்கியமுள்ளவர்களென்றால் கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நாம் சோதித்துப் பார்ப்பவர்களாகவும் அவற்றைச் செயல்படுத்துகின்றவர்களாகவுமாக இருப்போம். 

இன்றைய தியான வசனத்துக்கு முன்னதாக  அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 8 ) அதாவது கர்த்தரை அறியாமல் நாம் வாழ்ந்தபோது அந்தகார இருள் நம்மைச் சூழ்ந்திருந்தது. இப்போதோ கர்த்தரை அறிந்து நம்மில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளதால், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் என்கின்றார். 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்" என்று. ஆவியின் கனிகள் இல்லாதவன் கிறிஸ்துவை உடையவனல்ல. "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) நற்குணம், நீதிச் செயல்கள் மற்றும் உண்மையில்லாத செயல்கள் அனைத்துமே அந்தகாரச் செயல்பாடுகள். 

எனவே அன்பானவர்களே, நாம் எந்தச் செயல்களைச் செய்தாலும் அந்தச் செயல்கள்  உண்மையும், நீதியும் உள்ளவையாக இருக்கின்றதா என்று சோதித்துப்பார்த்துச் செய்யவேண்டும்.  இதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்" என்று கூறுகின்றது. 

இன்று கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில்தான் முரண்பட்டு வாழ்கின்றார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.  பலரிடம் ஆவியின் கனிகள் இல்லை. ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவதுதான் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை என்று எண்ணிக்கொள்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் கிறிஸ்தவத்தை பத்தோடு பதினொன்றாக ஒரு மதமாகவே  எண்ணிக்கொள்கின்றனர். 

எனவே நாம் நம்மையே சோதித்துக்கொள்வோம். கனியற்ற அந்தகாரச் செயல்பாடுகள் நம்மிடம் இருந்தால் அவைகளை தேவனிடம் அறிக்கையிட்டு மெய்யான மனம்திரும்பிய வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,180                                    💚 மே 03, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
 
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது ." (  மத்தேயு 26 : 41 ) 

கெத்சமனே தோட்டத்தில் தான் காட்டிக்கொடுக்கப்படுமுன் இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை. தான் படப்போகும் பாடுகளும் மரணமும் இயேசுவின் கண்முன் இருந்தன. அவரது மனம் மிகுந்த துக்கத்துக்குள்ளாக இருந்ததுஆனால் அவரது ஆவி சோர்ந்துபோகவில்லை. சீடர்கள்  சோர்ந்துபோய் தூக்கக்கலக்கத்தில் இருந்தனர்அவர்களை இயேசு உற்சாகப்படுத்தி ஜெபிக்கச்சொல்கின்றார்.  

இது மேலான ஆவிக்குரிய ஒரு அனுபவத்துக்காக இயேசு கிறிஸ்து காட்டும் ஒரு வழி. நாம் உடலளவிலும் மனதளவிலும்  சோர்ந்துபோகும்போது பலவேளைகளில் நம்மால்  ஜெபிக்க முடியவதில்லை. ஜெபிக்கவேண்டுமென்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் நம்மால் ஜெபிக்கமுடியாத வேளைகள் வருவதுண்டு. காரணம், நமது உடல் பலவீனம். இதனையே இயேசு கிறிஸ்து,"ஆவி உற்சாகமுள்ளதுதான்மாம்சமோ பலவீனமுள்ளது" என்று கூறுகின்றார். நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அத்தகைய சோர்வு நமக்கு வரும்போது அந்த சோர்வுக்கு மத்தியிலும் நாம் தேவனைத் தேடும் ஆவலோடு  இருப்போமானால் தேவனுடைய ஆவியானவர்  நமக்காக வேண்டுதல் செய்வார்.

அப்போஸ்தலரான பவுலும் இதுபற்றிக் கூறுகின்றார். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." (  ரோமர் 8 : 26 ) 

வெறும் உலக ஆசீர்வாதத்துக்காக மட்டுமே நாம் ஜெபித்துக்கொண்டிருந்தால் இந்த அனுபவத்தை நாம் பெற  முடியாது. நோய்களுக்காகவும், பொருளாதார  ஆசீர்வாதத்துக்காகவும், கடன் பிரச்சனை தீரவும், நம் பிள்ளைகளுடைய வேலைக்காகவும், திருமணத்துக்காகவும் மட்டுமே நாம் ஜெபித்துக்கொண்டிருந்தால் இந்த அனுபவத்தைப்  பெற முடியாது. ஆனால் ஆவிக்குரிய வாஞ்சையோடு ஆதாவது நான் இன்னும் பரிசுத்தமாகவேண்டுமென்டும் ஆவலோடு, தேவனை இன்னும் கிட்டிச் சேரவேண்டுமெனும் ஆவலோடு  விண்ணப்பம் செய்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறலாம். அதாவது ஆவியின் சிந்தனையோடு ஜெபித்தால் தேவனுடைய ஆவியானவர் நமக்காக விண்ணப்பம்செய்வார். அதனை நமது வாழ்வில் நாம் கண்டுணரலாம்.

"ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் , இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்." (  ரோமர் 8 : 27 )     

இயேசு கிறிஸ்து இத்தகைய ஆவிக்குரிய மேலான எண்ணமுடன் இருந்ததால் அவரது பாடுகளைத் தாங்கத்தக்கப் பலத்தை ஆவியானவரின் மன்றாட்டினால் பெற்றுக்கொண்டார்

அன்பானவர்களே, ஆவிக்குரிய சோர்வோ, உடல்சோர்வோ நம்மைத் தாக்கும்போது அப்படியே இருக்குமிடத்திலிருந்து நமக்கு முடிந்தமட்டும் ஜெபித்தால் போதும். நமது உள்ளத்தின் ஆழத்தினை அறிந்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பம் செய்வார். நமது உள்ளம் தேவனை நேசிக்கும் உற்சாக்கத்துடன் இருந்தால் போதும். ஆவிக்குரிய வாழ்வில் எந்த சோர்வும் நம்மை தேவனைவிட்டு விலக்கிட முடியாது

 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,181                                    💚 மே 04, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் ஆகும்போது நமது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதுகின்றார். இது மெய்யான ஒரு சத்தியமாகும்.   வேதாகம   பக்தர்கள்   பலரும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்

இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு  ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன.  உதாரணமாக,  பிறப்பு சான்றிதழ்,  ஆதார் கார்டு போன்றவைஆதார் அடையாள அட்டை  இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் நிலையே உள்ளதுஅரசாங்கத்திடம்  என்ன  காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு  முக்கியமாக உள்ளது

எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே  பிறப்பு சான்றிதழைப்  பெற ஓடுகின்றனர்ஆதார் அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர்அன்பானவர்களேஇதுபோலவே  தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம்இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம்  உரிமையானவர்கள் எனும் பாஸ்போர்ட்இந்திய பாஸ்போர்ட்  உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால்  ஏற்றுக்கொள்வதைப்போலத்தான் இதுவும்.

இப்படித் தங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே தேவனது பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். இதனை வேதம் தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது.  "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

மேலும்,  "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடுகின்றார். "அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (  பிலிப்பியர் 4 : 3 )

பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்' என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார். அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது, "ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."(  யாத்திராகமம் 32 : 32 )

அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப் பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது.  "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்." (  யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.

இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவாஅன்பானவர்களேதேவனிடம் நம்மைத் தாழ்த்தி  ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம்தேவன்தாமே நமது பெயரை  ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார்அந்த நிச்சயம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். உலக அரசாங்க சட்டங்களுக்கு மதிப்பளித்து நமது பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்ற நாம் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டாமா? நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெற முயலுவோம். அப்போது கர்த்தர் நமது பெயரையும் ஜீவபுத்தகத்தில் எழுதுவார். 

ஆம் அன்பானவர்களே, ஜீவபுஸ்தகத்திலே  பெயர்  எழுதப்பட்டவனாகக்                  காணப்படாதவன் நரக  அக்கினிக்கடலிலே  தள்ளப்படுவான் என்பதே வேதம் தெளிவாகக் கூறும் உண்மை. வெறுமனே கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டிராமல் நாம் கிறிஸ்தவர்கள்தான் என்பதனை தேவனுக்குமுன் பதிவுசெய்வோம்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,182                                   💚 மே 05, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

பழைய ஏற்பாட்டுக்கால ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் கிருபாசனம் இருந்தது. கிருபாசனத்தின்மேல் உடன்படிக்கையின் பெட்டி இருந்தது. அங்கிருந்துதான் தேவன் மோசேயுடன் பேசுவார். "அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்." ( யாத்திராகமம் 25 : 22 ) என்று வாசிக்கின்றோம்

ஆனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிரதான ஆசாரியன் மட்டுமே இந்த மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் செல்ல  முடியும். மேலும் இந்த இடத்தைக்குறித்து மக்களிடையேயும் ஆசாரியர்களிடமும் ஒருவித அச்சம் இருந்தது. காரணம் தவறுதலாக அல்லது தகுந்த முன் தயாரிப்பின்றி இங்கு செல்வோரை தேவன் அழித்துவிடுவார். எனவே பழைய ஏற்பாட்டுக்கால  மக்கள் தேவனை அச்சத்துடனேயே பார்த்தனர்

ஆனால்இந்த பயத்தையும் தேவனிடம் ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தைரியமாகப் பேசும் உரிமையையும் நமது புதிய ஏற்பாட்டின் பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து நமக்கு உருவாக்கியுள்ளார். எனவே, பழைய ஏற்பாட்டுக்கால ஆசாரியர்கள்போலவும் மக்களைப்போலவும் நாம் அச்சப்படத் தேவையில்லை. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அனைவருமே ஆசாரியர்கள்தான். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தன்னுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1பேதுரு 2:9) என்று கூறுகின்றார்.

இன்று தேவன் நம்மோடு பேசுவது ஒரு இனிய அனுபவமாக இருக்கின்றது. அதற்காக ஆவலாய் ஏங்குகின்றோம். ஆனால் பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனது குரலைக் கேட்டு அஞ்சினர். எனவேதான்,  "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )"

அன்பானவர்களேஇஸ்ரவேல் மக்களைப்போல நாம் பயப்படாமல், அவரது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய் அவரிடத்தில் நெருங்கிச் சேர்ந்து அவரோடு ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தனிப்பட்ட உறவுடன் பேச முடியும். கிருபையாய் நமக்கு இந்த உரிமையைப் பெற்றுத்தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ்வோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,183                                   💚 மே 06, 2024 💚 திங்கள்கிழமை 💚

"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )


இன்றைய தியான வசனம் தாவீது கர்த்தரை எப்படித் தனது வாழ்க்கையில் கொண்டிருந்தார் என்பதனை நமக்கு விளகுவதாக உள்ளது. 

சுதந்திரம் என்பது உரிமையைக் குறிக்கும். அதாவது, கர்த்தர் எனது உரிமையானவர். இதனையே அடுத்த வார்த்தைகளில் அவர் கூறுகின்றார்,  "அவர் என் பாத்திரத்தின் பங்குமானவர்" என்று. ஒரே வீட்டில் உரிமையுடன் வாழ்பவர்கள் ஒரே உணவைத்தான் உண்பார்கள். அவர்களது உணவுப்பாத்திரம் வேறுபடுவதில்லை. அதுபோல, கர்த்தரோடு நான் ஒரு தாய் தகப்பனோடு உரிமையோடு ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரே உணவை உண்பதுபோல உண்ணும் மகனைப்போன்றவன் என்கிறார் தாவீது. 

அன்பானவர்களே, இதுவே நாம் கர்த்தரோடு கொள்ளவேண்டிய உறவு. வெறும் நன்மைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல, மாறாக அவரை நம்மோடு நம் வாழ்க்கையாக மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

சோர்வுகள், துன்பங்கள், நோய்கள் நமக்கு வரலாம். காரணம், நாம் இந்த உலகத்தில்தான் வாழ்கின்றோம். எனவே எல்லா உலகப் பாடுகளும் நமக்கும் உண்டு. ஆனால் நாம் கர்த்தரோடு ஒரே பாத்திரத்தில் உண்ணுமளவு உரிமையுள்ளவர்களாக வாழ்வோமானால் நாம் எந்தத் துன்பச் சூழ்நிலையிலும் அசைவுறமாட்டோம். எனவேதான் தாவீது தொடர்ந்து கூறுகின்றார், "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை." ( சங்கீதம் 16 : 8 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் கொள்ளவேண்டிய உறுதி இதுதான். அதாவது, கர்த்தரோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்தி, ஒரே குடும்பத்தில் வாழ்பவர்களைப்போல வாழவேண்டும். இதுவே ஆவிக்குரிய வாழ்வில் நாம் எடுக்கவேண்டிய முக்கியமான நிலை. 

இதனையே, ஆவிக்குரிய வாழ்வு ஒரு ஓட்டப்பந்தயத்தைப் போன்றது என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது நம் கண்கள் இறுதி இலக்கைநோக்கி  இருக்கவேண்டுமேத் தவிர நம்மோடுகூட ஓடுபவர்களையும் சுற்றிலும் நிற்பவர்களை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் வெற்றிபெற முடியாது. எனவே நாம் பரிசைப் பெற்றுக்கொள்ளத் தக்கவர்களாக ஓடவேண்டும். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 )

சூழ்நிலை, பிரச்சனைகளை நோக்காமல் கர்த்தரையே இலக்காகக் கொண்டு வாழ்வோம். அவரை நமது குடும்பத்து நபராக, நம்மோடு ஒரே பாத்திரத்தில் உண்டு உறவோடு வாழ்பவராக வாழ்வில் நிறுத்திக்கொள்வோம்.  அப்படி வாழ்வோமானால் அவரும் நமது அனைத்துக்கும் போதுமானவையாக இருப்பார். இதனையே இன்றைய வசனத்தில் இறுதியாகத் தாவீது கூறுகின்றார், "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ஆம், அப்படி நாம் வாழும்போது இந்த உலகிலும் மறுஉலகிலும் தேவனோடுள்ள நமது உரிமை காப்பாற்றப்படும். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல நமது பரிசினையும்நாம் பெற்றுக்கொள்வோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,184                                  💚 மே 07, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 58 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்தான் ஆபிரகாம். அவரே இஸ்ரவேல் குலத்தினரின் தந்தை. இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாகப் பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. எனவேதான் நாம் அவரைக் கடவுள் என்கின்றோம். 

"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 2, 3 ) என்று வாசிக்கின்றோம். உலகத்தையே அவர் படைத்தார் என்பதால் அவர் ஆபிரகாமுக்கு முந்தினவர். இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

ஆனால் இன்று உலகில் வாழும் பல கிறிஸ்தவர்களைப்போல யூதர்களாலும் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே அவர்மேல் கோபம்கொண்டு கல்லெறிய முயன்றனர். "அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்." ( யோவான் 8 : 59 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, அன்னை மரியாவிடம் மனிதனாக கிறிஸ்து பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. உலகினில் தான் மனித உடலெடுக்க அன்னை மரியாளை கருவியாகத் தெரிந்துகொண்டார். எனவே அவர் அன்னை மரியாளுக்கு முந்தினவர். 

கிறிஸ்துவை வல்லமையுள்ள தேவனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிக் கூறுவதால் அன்னை மரியாவை நாம் தாழ்வாக எண்ணுகின்றோம் என்று பொருளல்ல, மாறாக கிறிஸ்து காலங்களையும் யுகங்களையும்  கடந்த தேவாதி தேவன் என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதனால்தான். 

வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்த ஒருவராக நாம் அவரைப் பார்த்தோமானால் அவரை நாம் கடவுளாக முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றும்,  புத்தர், காந்தி,  அரிஸ்ட்டாட்டில் போன்று ஒரு மகானாக அவரை நாம் நம்பியுள்ளோம் என்றுதான் பொருள். அப்படி நம்பிக்கொண்டிருப்பவர் மீட்பு அனுபவத்தை அடையவும் முடியாது, பாவத்திலிருந்து முழு விடுதலையை அடையவும் முடியாது. 

ஆம் அன்பானவர்களே, அவர் ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இருக்கிறார்; உலகம் தோன்றுவதற்குமுன்னமே இருக்கிறார். இதனையே அவர் பிதாவை நோக்கி ஜெபித்தபோது கூறினார், "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்." ( யோவான் 17 : 5 ) என்று. இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்  கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பெயர் கிறிஸ்தவர்களே.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,185                                  💚 மே 08, 2024 💚 புதன் கிழமை 💚

"நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." ( யோவான் 16 : 27 )

அன்பானவர்களே, சர்வலோகத்தையும் படைத்து ஆண்டு நடத்தும் தேவாதி தேவனது அன்பைப் பெறுவது எவ்வளவு மேலான காரியம் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த மேலான காரியத்தை நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது பிதா நம்மேல் அன்புகூருகின்றார்.  இப்படி பிதா நம்மேல் அன்புகூருவதால் என்ன பலன் நமக்குக் கிடைக்கின்றது? அது இந்த உலகத்தில் எதற்கும் கலங்காமல் துணிவுடன் இருக்கும் பலத்தை நமக்குத் தருகின்றது. மேலும், பிதா நம்மேல் அன்புகூருவதால் அவர் நம்மைத் தனியே இருக்க விடமாட்டார். 

இந்த உலகத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. மிகப்பெரிய நோயோ, கடன் பாரமோ நம்மை நெருக்கும்போது நம்மிடம் அதுவரை அன்புடன் பழகிய நண்பர்களும் சுற்றத்தாரும் நம்மைவிட்டு நீங்கிவிடுவர். அத்தகைய நிர்க்கதியான வேளைகளில் பிதாவாகிய தேவன் மட்டும் நம்மைக் கைவிடமாட்டார். காரணம், அவர் நம்மை அன்புசெய்வதால்.  

இயேசு கிறிஸ்துவுக்கு இத்தகைய நெருக்கடியான காலம் ஏற்பட்டபோது அவரோடு உண்டு உறங்கிய அனைவரும் அவரைவிட்டு  ஓடிவிட்டனர். ஆனால் பிதாவாகிய தேவன் மட்டும் அவரோடு இருந்தார். இதனையே இயேசு கிறிஸ்து, "இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 ) என்று கூறினார். 

இன்றைய தியானவசனம் நமக்குக் கூறும் உண்மை இதுதான். அதாவது நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூர்ந்து,  அவர் பிதாவாகிய தேவனிடமிருந்து வந்த மெய்யான தேவ குமாரன் என்று நாம் விசுவாசிப்போமானால் இயேசு கிறிஸ்துவைத் தனித்திருக்கவிடாமல் அவரோடுகூட எப்போதும் பிதாவாகிய தேவன் தங்கியிருந்ததுபோல நம்மோடும் இருப்பார்.

இந்த உலகமே நம்மைக் கைவிட்டாலும், தகுதியில்லாதவர்கள் என்று நம்மைப் புறம்பே தள்ளினாலும், பிதாவாகிய தேவன் நம்மைத் தள்ளாமல் நம்மோடுகூட இருந்து நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பார். விசுவாசத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம்.  எப்படி அவரை அன்பு செய்வது என்பதனையும் இயேசு நமக்குக்  கற்பித்துள்ளார்.

"நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்." ( யோவான் 15 : 10 ) கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரை நாம் அன்புசெய்வதை உறுதிப்படுத்துவோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,186                                  💚 மே 09, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை." ( 1 யோவான்  2 : 4 )

இயேசு கிறிஸ்துவை அறிவது என்பது மேலான ஒரு அனுபவமாகும். இயேசு கிறிஸ்துவை வெறுமனே ஆராதிப்பதும் நமது தேவைகளுக்காக மட்டும் தேடுவதும்  அவரை அறிவதல்ல. மாறாக, நாம் நமது குடும்பத்து உறவினர்களுடன் உறவோடு வாழ்வதுபோல அவரோடு உறவை வளர்த்துக்கொள்வதே அவரை அறிவதாகும். 

இப்படி அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்வார்கள். ஆறது கற்பனை சிறிதான ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்வதும் தன்னை அன்பு செய்வதுபோல பிறரை அன்பு செய்வதுமே அவரது கற்பனை.  அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவன் இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்பவனாக இருக்கவேண்டும். இப்படி "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்." ( 1 யோவான்  2 : 3 )

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்பவன் அவரை மட்டுமே அன்புசெய்பவனாக வாழ்வான். எந்தச் சூழ்நிலையிலும் அவருக்குக்  கொடுக்கவேண்டிய முன்னுரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்வான். இப்படி, "அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  2 : 5 )

கிறிஸ்துவுக்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையை நாம் பிற புனிதர்களுக்கோ, உலக செல்வங்களுக்கோ கொடுப்போமானால் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்றுதான் பொருள். அவரிடம் நேரடியாக நமது உள்ளத்தை வெளிப்படுத்திப் பேசாமல் பரிந்துரைவேண்டி மற்றவர்களை உதவிக்குத் தேடுவதும் அழைப்பதும் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்பதையே வெளிப்படுத்தும்.  

ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பவன் அந்தப் பெண்ணை மட்டுமே எண்ணி வாழ்வானேத்தவிர எல்லா பெண்களையும் அன்புசெய்யமாட்டான். இதனையே, "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 2, 3 ) என்று எழுதுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம், தந்திரத்தால் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல நாமும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.   அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதிருந்தால் நாம் பொய்யர்கள். ஏவாளைப்போல வஞ்சிக்கப்பட்டவர்கள். அவரையே அறிந்திருக்கிறோம் என்று வெறுமனே சொல்லிக்கொள்ளாமல் அவரையே  அன்புசெய்து அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாழ்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,187                                  💚 மே 10, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." ( யோபு 42 : 2 )

இந்த உலகத்தில் சில சர்வாதிகார அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்தத் தலைவர்கள் தங்கள் இருதயத்தில் எண்ணியத்தைச் செய்வார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது. ஹிட்லர் இத்தகைய சர்வாதிகாரியாக இருந்தார். இப்போதும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) ஒரு சர்வாதிகாரியாக இருக்கின்றார். அரசியலில் இவர்கள் செய்ய நினைத்தது தடைபடாது. வேண்டாதவர்களையும் எதிர் கருத்துக் கொண்டவர்களையும் கொன்று ஒழிப்பதே அவர்களது குணம். 

அற்பமான இந்த உலகப் பதவியை வைத்துக்கொண்டு அதுவும் குறுகிய ஒரு நிலப்பரப்புக்குள் உள்ள அதிகாரத்தைக்கொண்டு இவர்கள் இப்படிச் செயல்படுகின்றனர். ஆனால் இவர்களால் பெரும்பாலும் மக்களுக்கு நன்மைகள் எதுவும் ஏற்படாது. தேவன் நினைத்தால் இவர்கள் படுக்கையில் உறங்கி மீண்டும் விழித்தெழாமலேயிருக்கச் செய்யமுடியும் எனும் உண்மை உணர்வில்லாமல் வாழ்கின்றனர். 

அன்பானவர்களே, நமது தேவன் இத்தகைய இழிவான மனிதர்களைப் போன்றவரல்ல. "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" என்று யோபு கூறுவதுபோல விசுவாசத்தோடு நாமும் கூறுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். தேவன் நம்மை அழிப்பதற்கல்ல; மாறாக, நம்மை மேலான வாழ்வு வாழவைப்பதற்காகவே அவர் சகலத்தையும் செய்கின்றார். ஆம் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனும்  விசுவாசம் நமக்கு இருக்குமேயானால் அவரிடமிருந்து அதிசயங்களையும் நமது வாழ்க்கையில் பெற்று அனுபவிக்கமுடியும்.  

அவரால் நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கமுடியும், நோய்களிலிருந்து விடுதலையளிக்க முடியும், கடன் தொல்லைகள், பிரச்சனைகள், இக்கட்டுகள் இவைகளிலிருந்து விடுதலையளிக்க முடியும். முற்றிலும் நமது வாழ்க்கையினை மாற்றிட முடியும். ஆம்,  அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைப்பது தடைபடாது.  நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள், நம்மை ஏளனம் செய்பவர்கள் இவர்களை ஒரேயடியாக தாழ்த்த அவரால் ஆகும். 

இதனையே பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டி தேவன் கூறிய வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன.  "என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, ஒருவரும் திறக்கமுடியாதபடி பூட்டுகின்றவரும் ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும்தான் நமது தேவன். எனவே நமக்கு எதிராக யாரும் செயல்படமுடியாது. இத்தகைய வல்லமையுள்ள பரிசுத்த தேவனை நமது பிதாவாகக் கொண்டுள்ளது எவ்வளவு மகிமையான காரியம் பாருங்கள். நாம் அவரது பிள்ளைகளாக வாழும்போது இந்த சர்வ வல்லவரின் உடனிருப்பும் பாதுகாப்பும் நமக்கு நிச்சயம் உண்டு. எனவே யோபுவைபோல விசுவாசத்தோடு நாமும் "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." என்று அறிக்கையிடுவோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,189                                  💚 மே 11, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

சபைகளில் முக்கியமான நேரம் பிரசங்க நேரமாகும். ஆனால் பெரும்பாலும் பல பாரம்பரிய சபைகளில் விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பிரசங்க வேளையை அலட்சியப்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆவியின் அபிஷேகம் இல்லாத பல ஊழியர்களின் உப்புச்சப்பற்ற பிரசங்கங்கள். 

ஒரு ஊழியன் ஆவியின் அபிஷேகத்தோடு பரிசுத்த ஆவியானவரின் தொடர்பில் இருக்கும்போதுதான் அவனால் வல்லமையான ஆவிக்குரிய செய்தியினைக் கொடுக்கமுடியும்.  ஆனால், பாரம்பரிய சபைகளில் ஒவ்வொரு நாளுக்கென்றும் ஏற்கெனவே குறிக்கப்பட்ட வேத வசனங்களை வாசித்து போதகர்கள் செய்திகளைக் கொடுக்கின்றனர். அதிலும் பலவேளைகளில் வாசித்த வேத வசனத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத உலக காரியங்களை அரசியல்வாதிகள் பேசுவதுபோல பேசி மக்களை நோகடிக்கின்றனர். 

ஆவியானவர் ஒரு மனிதனில் இருந்து செயல்படும்போது அந்த நாளுக்கு ஏற்ற செய்திகளை தேவன் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும் செய்தி தேவனே அளிக்கும் செய்தியானதால் மக்களது இருதயங்களைத் தொடுவதாக இருக்கும்.  ஆவியானவரே அந்தந்த நாளுக்கான செய்தியை போதகர் வழியாகக் கொடுக்கின்றார் என்பதனை எனது வாழ்வில்  தேவன் எனக்குப் புரியவைத்தார். 

நாகர்கோவிலிலிருந்து கொட்டாரம் சபைக்கு பேருந்தில் நான் பயணம்செய்யும்போது அன்று எந்த வசனத்தை சபையின் போதகர் எடுத்துக் பிரசங்கிக்கப்போகிறார் என்பதனை தேவன் வெளிப்படுத்தித் தந்தார். அந்தப் போதகருக்கும் அவரது தனிப்பட்ட ஜெபத்தில், "நீ இன்று இந்த வசனத்தை எடுத்து பிரசங்கம்பண்ணு" என தேவன் காண்பித்துள்ளார். இருவருக்கும் ஒரே வசனத்தை தேவன் வெளிப்படுத்தி  இதுவே மக்களுக்கான இன்றைய செய்தி என்று கூறியது, ஆவியானவரே மக்களுக்கான செய்தியைக் கொடுக்கின்றவர் என்பதனை விளக்குகின்றதல்லவா? 

இரண்டு நாட்கள் இந்த அனுபவத்தைத் தேவன் எனக்குக் கொடுத்தார். இரண்டு நாட்களும் அதேபோல அந்த ஊழியர் தேவன் எனக்குக் காண்பித்த வசனத்தை எடுத்துப் பிரசங்கித்தார்.  மனிதர்கள் கொடுப்பதல்ல இறைச்செய்தி ஆவியானவர் வெளிப்படுத்தி மனிதர்கள் மூலம் கொடுப்பதே இறைச்செய்தி.

இப்படி "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது கேட்க மனதுள்ளவன் கேட்கட்டும் என்கிறார் தேவன். தேவன் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டார். விருப்பமுள்ளவன் கேள், அப்படிக் கேட்டால் "அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." என்கின்றார் தேவன். 

நாம் உணவு சாப்பிடச் செல்லும்போது எந்த ஹோட்டலில் சிறப்பான உணவு கிடைக்கும் என்று பார்த்துப் பார்த்து உண்ணச் செல்கின்றோம். ஆனால் ஆவிக்குரிய உணவினை உண்பதற்கு அலட்சியம் காட்டுகின்றோம். ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்பதற்குக் கருத்துள்ளவர்களாக வாழ்வோம். அப்படி ஆர்வமுள்ளவர்களாக வாழும்போதுதான்  தேவன் நமக்கு அரிய பல காரியங்களை வெளிப்படுத்தித் தருவார். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,190                                  💚 மே 12, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

தேவனது கிருபையினை மிகுதியாகப்பெற்ற அன்னை மரியாள் உன்னதனமான ஒரு உண்மையினை உணர்ந்திருந்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் தனக்குப் பயந்து நீதியோடு வாழும் மக்களுக்கு கிருபையினை அளிக்கின்றார். மட்டுமல்ல அப்படி தேவன் அளிக்கும் கிருபை தலைமுறைக்கும் நிலைத்ததாக இருக்கும். 

இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்கு முன் அன்னை மரியாள் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்." ( லுூக்கா 1 : 48 ) ஆம் அன்பானவர்களே, சர்வ லோகத்தையும் படைத்தாளும் தேவன் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தது எத்தனை பெரிய கிருபை. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றும் நாம் அவரைப் பாக்கியவதி என்று போற்றுகின்றோம்.

இதனைத் தாவீது ராஜாவும் அறிக்கையிடுகின்றார். தேவனுக்குப் பயந்து வாழ்ந்தவர்தான் தாவீது. அவருக்குத் தேவன் அளித்த கிருபை மிகப்பெரியது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்திலே தோன்றியது மட்டுமல்ல, தாவீதின் மகன் என்றே குறிப்பிடப்படுகின்றார். இது எத்தனை பெரிய கிருபை பாருங்கள்!!! இதனையே, "தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்." ( சங்கீதம் 18 : 50 ) என்று கூறுகின்றார் அவர். 

அன்பானவர்களே, இதே கிருபையினைத்  தேவன் நமக்கும் நமது சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்துள்ளனர். நாம் செய்யவேண்டியது தேவனுக்குப்பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதே.  "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55 : 3 ) என்கிறார் சர்வ வல்லமையுள்ள தேவன். 

மனிதர்களாகிய நாம் நமது தலைமுறையினர் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு சொத்து சுகங்களைச்  சேர்த்து வைக்கின்றோம். வங்கிகளில் பணங்களை முதலீடு செய்து வைக்கின்றோம். ஆனால் இவை அனைத்தையும்விட   நாம் செய்யவேண்டியது தேவனுக்குப் பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதுதான். அப்படி வாழும்போது, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது."
என இன்றைய தியான வசனத்தில் கூறியுள்ளபடி  தேவ இரக்கம் நமது தலைமுறை மக்களுக்குச் சொந்தமாகும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,191                                  💚 மே 13, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )

நமது தேவன் உலக ஆசீர்வாதங்களுக்கு மட்டும் உரியவரல்ல; மாறாக, மறுவுலக வாழ்க்கைக்கும் நித்திய ஜீவனுக்கும் வேண்டிய வழியினை நமக்குக் காண்பித்து நடத்துகின்றவர். அதுவே நமது ஆத்துமாவுக்கு உபயோகரமானது. இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." என்று. 

நமக்கு ஆவிக்குரிய வழியைப் போதித்து நடத்துகின்றவர் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்தான். நமது உபயோகத்துக்காக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

மட்டுமல்ல, "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.

எனவே, இன்றைய தியான வசனம் கூறுவது போல, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற  தேவனாகிய கர்த்தர் காட்டும் வழிகளில் நடக்க நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  அப்படிக்  கீழ்படிதலுள்ளவர்களாக நாம் நடக்கும்போது நமக்குப் பூரண சமாதானம் கிடைக்கும். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

நதியானது அமைதியாக ஓடுகின்றது. மட்டுமல்ல, அதன் கரையோரத்திலுள்ள மரங்களை செழித்து வளரச் செய்கின்றது. அதுபோலவே தேவனது ஆவியானவர் காட்டும் வழியில் நாம் நடக்கும்போது நமது வாழ்க்கை அமைதியானதாகவும் மற்றவர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கும். மட்டுமல்ல, "உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." என்று ஏசாயா கூறுகின்றார். அதாவது கடலில் அலைகள் ஓய்வில்லாமல் இருப்பதுபோல நமது நீதி அழிவில்லாத நித்திய நீதியாக இருக்கும்.  

ஆம் அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தரின் குரலுக்குச் செவிசாய்த்து நடப்போமானால் அதுவே நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். உலக ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிக்காமல் இத்தகைய ஆவிக்குரிய தேவ வழிநடத்துதலுக்கு நாம் ஜெபிக்கும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சிக்கொள்வார். சமுத்திரத்தின் அலைகள்போல முடிவில்லாத நீதி நம்மைச் சூழ்ந்துகொள்ளும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,192                                  💚 மே 14, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." ( எண்ணாகமம் 14 : 24 )

எகிப்திலிருந்து மோசே அழைத்துக்கொண்டு வந்த மக்கள் பாரான் வனாந்தரத்தில் வந்தபோது மோசே இஸ்ரவேல் மக்களினங்களின் 12 கோத்திரத்திலிருந்தும் கோத்திரத்துக்கு ஒருவராகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துத் தாங்கள்  செல்லவிருந்த கானான் தேசத்தைச் சுற்றிப்பார்த்து அந்தத் தேசம் எப்படிப்பட்டது என்று தகவல் கொண்டுவர அனுப்பினார். அப்படிச் சென்று வந்த மக்கள் தலைவர்கள் மக்கள் மத்தியில் துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் காலேபும் யோசுவாவும் மட்டும் விசுவாச வார்த்தைகளைக் கூறினார்கள். "அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 ) ஆனால் இஸ்ரவேல் மக்கள் அவர்கள்மேல் கல்லெறிய முயன்றார்கள். 

இப்படி காலேப் கூறக்காரணம் அவரிடமிருந்த "வேறே ஆவி" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களிடமிருந்து ஆவியைவிட வேறான ஒரு ஆவி இருந்ததால் காலேப் விசுவாச வார்த்தைகளைக் கூறினார். 

ஹீலியம் வாயு அடைத்த பலூன்களை நாம் திருவிழா கடைகளில் பார்க்கலாம். வெளியில் பார்ப்பதற்கு அவை மற்ற பலூன்களைப்போலவே இருந்தாலும் அவைகளின் உள்ளே இருப்பது வேறு வாயு.  ஆதலால் அவைகளைக் கட்டியுள்ள நூலை நாம் அறுத்துவிட்டால் மேலே எழும்பிச் சென்றுவிடும். மற்ற பலூன்கள் தரையிலேயே கிடக்கும். இதுபோலவே காலேப்பினுள் பரிசுத்த ஆவியானவர் இருந்ததால் அவர் மேலான எண்ணமுடையவராக இருந்தார். 

ஆம் அன்பானவர்களே, காலேப் தேவனால் அருளப்பட்டவைகளை அறியும் கிருபை பெற்றிருந்தார். நாமும் உலகத்தின்  ஆவியைப் பெறாமல் வேறே ஆவியைப் பெறவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலரும் இதனால்தான் "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

வேறே ஆவியைப் பெற்ற காலேப் தேவனை உத்தமமாய்ப் பின்பற்றினார். நாமும் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறும்போது வித்தியாசமானவர்களாக மாறுவோம்.   "அவன் உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." என்று கர்த்தர் கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும். இந்த ஆவியானவரை இதுவரைப் பெறாமல் வாழ்ந்திருந்தால் நமது ஜெபங்களில் வேண்டுவோம்.  கர்த்தர்தாமே தூய்மையின் ஆவியானவரை நமக்குத் தந்து தூய வழியில் நம்மை நடத்துவார். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,193                                  💚 மே 15, 2024 💚 புதன்கிழமை 💚

"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 16 : 9 )

மிகப்பெரிய குப்பைக்கிடங்கில் சிலவேளைகளில் அரிய பொருட்கள் மறைந்து கிடப்பதுண்டு. குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்யும் மனிதர்கள் சிலவேளைகளில் இந்த விலை உயர்ந்த பொருட்களைக் கண்டுபிடிப்பார்கள். சிலவேளைகளில் தங்க நகைகளும் கிடைப்பதுண்டாம். குப்பை சேகரிக்கும் தொழில் செய்யும் நண்பரொருவர் இதுபற்றி கூறும்போது,  "மற்றவர்களுக்கு குப்பை அருவெறுப்பாகத் தெரிந்தாலும் எங்களது கண்கள் அந்தக் குப்பையினுள் ஏதாவது கிடைக்குமா என்றுதான் பார்க்கும்"  என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே இந்த மொத்த உலகமும் பொல்லாங்குக்குள் கிடந்தாலும் தேவனது கண்கள் இந்த பொல்லாத உலகத்தினுள்ளும் தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடு யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்துத்  தனது வல்லமையினை அவர்களுக்கு வெளிப்படுத்தப்  பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

"வல்லமை" என்று கூறியதும் பலருக்கு அற்புத அதிசயம் செய்வதும், நோய்களைக் குணமாக்குவதும், பேய்களை ஓட்டுவதும், தீர்க்கத்தரிசனம் கூறுவதும்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் மேலான வல்லமை என்பது பாவத்தை மேற்கொள்ளுவதில் இருக்கின்றது. மனித அவலட்சண குணங்களை மேற்கொள்வதைக் குறிக்கின்றது. அதாவது இது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்," ( எபேசியர் 3 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு இந்த வல்லமையை அளித்து அவர்களைப் பரிசுத்தமாக்கும்படி  கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை சுய கட்டுப்பாட்டால் வருவதல்ல. மாறாக, அது தேவனால் வருகின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மண்ணான மனிதனுக்குள் வரும்போது இந்த மகத்துவமான வல்லமை விளங்குகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று குறிப்பிடுகின்றார். 

எனவே அன்பானவர்களே, நாம் கர்த்தரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயத்தோடு இருக்கவேண்டியது அவசியம். கர்த்தரிடம் கிடைக்கும் உலக ஆசீர்வாதங்களுக்கல்ல, அவரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயம் நமக்கு வேண்டும். அப்படி நாம் வாழும்போது இந்த வல்லமை நம்மில் செயல்படும். இதற்கான தகுதியுள்ளவர்களைத் தேடி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அவரது கண்களில் படும் தகுதியுள்ளவர்களாக வாழ முயற்சியெடுப்போம். 

"கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." ( எபேசியர் 6 : 10 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,194                                  💚 மே 16, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

சிறு குழந்தைகளிடமிருந்து நமது வாழ்கைக்குத் தேவையான பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். எனவேதான் "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

இந்தச் சிறு பிள்ளைகளுடைய ஒரு முக்கிய குணம் தேவனுக்கு நேராக நாம் வாழ்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளது. ஒருதாய் குழந்தைத் தவறு செய்யும்போது கோபத்தில் அடித்துவிடுவாள். ஆனால் அந்தக் குழந்தை தாய் தன்னை அடித்ததை மனதினில் வைத்துகொண்டிராது. சற்று நேரத்திலேயே எல்லாவற்றையும் மறந்து தாயைநோக்கிச் செல்லும். ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றைய தியான வசனம் "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என்று கூறுகின்றது. 

எருசலேமிலிருந்து எரிகோவைநோக்கிச் சென்ற ஒரு மனிதனை இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். எருசலேம் என்பது பரிசுத்த நகரம். எரிகோ சாபத்தின் நகரம். யோசுவா இந்த நகரத்தைச் சபிப்பதை நாம் பார்க்கலாம். "அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்." ( யோசுவா 6 : 26 )

அதாவது இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வது பரிசுத்த வாழ்க்கையிலிருந்து ஒருவன் பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்வதைக் குறிக்கின்றது. இப்படிச் செல்பவர்களுக்கு திருடர்களால் துன்பம் வருவதுபோல துன்பங்கள் தொடரும். ஆனால் இப்படித் திருடர்கையில் அகப்பட்டு அடிக்கப்பட்ட மனிதனை சமாரியன் கண்டு உதவுகின்றான்.  சமாரியன் "கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்." ( லுூக்கா 10 : 34 ) என்று வாசிக்கின்றோம்.

எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வதுபோல இன்றுநாமும்  பரிசுத்த வாழ்க்கையிலிருந்து பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்ல்லும்போது துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. அது நாம் நமது வழியினைத் திருத்திக்கொள்ள தேவன் தரும் அழைப்பு.  காயப்பட்ட மனிதனுக்கு சமாரியன் தானாக வந்து உதவினானென்றால் நல்ல சமாரியானான இயேசு கிறிஸ்து அவரிடம் நாம் திரும்பும்போது எத்தனை அதிகமாக உதவுவார்!!!

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் நமக்கு கூறுவதுபோல கர்த்தரிடத்தில் திரும்புவோம்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் அவரிடமே திரும்புவோம். "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19 ) என்கிறார் உன்னதமான தேவன். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,195                                  💚 மே 17, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )

பெரும்பாலான உலக வேலைகளைச் செய்பவர்களும் ஆவிக்குரிய மக்களும் தங்களை அறியாமலேயே பெருமை எனும் வலையினுள் சிக்கிக்கொள்கின்றனர். அந்தப் பெருமை மற்றவர்களைவிடத் தங்கள் மேலானவர்கள் எனும் எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்குவதால் அதனை மற்றவர்களும் உணர வேண்டுமென்று அதனை வெளிப்படுத்த பல்வேறு உபாய காரியங்களைச் செய்கின்றனர். 

இந்த பெருமையும் தன்னைத்தான் உயர்த்தும் குணமும் கிறிஸ்தவ ஊழியர்களிடையே இன்று அதிகமாகப் பரவியுள்ளது மறுக்கமுடியாத உண்மை. எனவே, தங்களைத் தாங்களே உயர்த்தும் உபாயங்களாக "தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர்" , "குணமாகும் வரம் பெற்றவர்", "கர்த்தருடைய தீர்க்கதரிசி" போன்ற பட்டங்களைத் தங்களது பெயருக்குப்பின் போட்டுக்கொள்கின்றனர்.  பல ஊழியர்கள் கூடும் இடங்களில் மற்றவர்களைவிடத் தான்தான் பெரியவன் என்பதனைக் காட்டிக்கொள்ள அற்பமான பெருமை காரியங்களையும் செய்கின்றனர். 

உலக மனிதர்களும் பெருமைகொண்டு தங்கள் செயலிலும் பேச்சிலும் தங்களை மற்றவர்களைவிட உயர்திக்கொள்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் கூறுகின்றார், உங்களை நீங்களே உயர்திக்கொள்ளாதீர்கள். கர்த்தர் உங்களை உயர்த்தும்படி அவரது கரங்களுக்குள் அடங்கியிருங்கள். அப்போஸ்தலரான பேதுருவும், "...........நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என எழுதுகின்றார். 

தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என்று கூறிய பேதுரு தொடர்ந்து கூறும்போது பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது உன்னையே நீ உயர்த்துவது தேவனுக்கு எதிர்த்து நிற்பதுபோன்ற செயல் ஆனால் தாழ்மையோடு இருப்பாயானால் தேவ கிருபையினைப் பெறுவாய் என்று பொருள். 

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு."( பிரசங்கி 3 : 1 ) என்று கூறியுள்ளபடி நம்மை உயர்த்துவதற்கு தேவனுக்கேற்ற காலம் ஒன்று உண்டு. அந்தக்காலம் வரும்வரை அவரது பலத்த கைக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டியது அவசியம். தேவனது கரத்துக்குள் என்று வெறுமனே கூறாமல், "அவரது பலத்த கைகளுக்குள்" என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் பலத்தக் கரம் ஒரே நொடியில் ஒருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லமைபொருந்தியது என்பதனை நாம் மறந்திடக்கூடாது.

எனவே அன்பானவர்களே, பெருமையை நீக்கித் தாழ்மையோடு வாழப் பழகுவோம். உயர்ந்த பதவியோ பணமோ,  அழகோ, பேச்சாற்றலோ மட்டுமே சிறப்பல்ல;  ஒவ்வொருவருக்கும் தேவன் ஏதாவது சிறப்பான காரியத்தைக் கொடுத்திருப்பார். எனவே பெருமையை நீக்கி மனத் தாழ்மையோடு வாழும்போதுதான் தேவ ஆசீர்வாதத்தை நாம் பெறமுடியும். 

"ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்." ( பிலிப்பியர் 2 : 3 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,196                                  💚 மே 18, 2024 💚 சனிக்கிழமை 💚

"கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

நமக்குள் கிறிஸ்து வாழ்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம்தான் இன்றைய வசனம்கூறுவது. அதாவது கிறிஸ்து நமக்குள் வாழ்கின்றார் என்றால்  நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், நமது ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். செத்தவர்கள் பாவம் செய்வதில்லை. அதுபோல நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது நமதுசாரீரம் செத்ததாகின்றது. நாம் அவரோடுகூடச்  சிலுவையில் அறையப்படுகின்றோம். எனவே நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாகின்றது; பாவம் செய்யாத ஒன்றாகின்றது. 

அதேநேரம் நமது ஆவியானது உயிர்ப்படைகின்றது. கிறிஸ்துவைப்போல ஜீவனுள்ளதாக மாறுகின்றது. ஆம், கிறிஸ்துவோடு நாம் பாவத்துக்கு மரித்தோமானால் அவரோடுகூட பிழைத்துமிருப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருந்தால் நாம் உடல்சார்ந்தவர்களாக இருக்கமாட்டோம். அதாவது நமது சரீர நன்மைகளுக்காகவே உழைக்கின்றவர்களாக இருக்கமாட்டோம். இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனமாக அப்போஸ்தலரான பவுல் இதனையே குறிப்பிடுகின்றார். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்ட வர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படவேண்டுமானால் அவரது ஆவி நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. அப்படிக் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருக்கும்போது இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல, நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

நாம் மெய்யான ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழவேண்டுமானால் தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இருந்து செயல்படவேண்டும். அப்போதுதான் நமது சாவுக்கேதுவான சரீரம் உயிரடையும். "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )

எனவே நாம் கிறிஸ்துவுக்குள் தூய்மையான வாழ்வு வாழவேண்டுமானால் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வந்து செயல்படவேண்டியது அவசியம். அப்படிக்  கிறிஸ்து நமக்குள் இருந்தால் நமது  சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ஆராதனைகளில் கலந்துகொண்டு, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று,  வேதாகமத்தை வாசித்து, காணிக்கை அளிப்பதால் மட்டும் நாம் தூய்மையானவர்களாக மாற முடியாது. இத்தகையச் செயல்களை அனைத்து மதத்தினர்களும் அவரவர் முறைமைகளின்படி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நாமும் ஆவியானவருக்கு இடஙகொடாமல் இவைகளை மட்டும் செய்து கொண்டிருப்போமானால் வெறும் மதவாதிகளாகவே இருப்போம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,197                                  💚 மே 19, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து" ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 8 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தையும், பிதாவிற்குமுன் அவருக்குள்ள உரிமையையும் இன்றைய வசனம் விளக்குவதாக உள்ளது.  சிங்காசனத்தில் வீற்றிருந்தவரது கையிலிருந்த "புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 2 ) எனக் கூறுகின்றார் யோவான். 

மேலும், "வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 3 ) என்றுகூறப்பட்டுள்ளது. அப்போது அப்படி ஒருவரும் இல்லையே என்று  நினைத்து யோவான் அழுததாகக் கூறுகின்றார். "அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 5 )

ஆம் அன்பானவர்களே, பிதாவின் கையிலுள்ள அதிகாரத்தை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவருக்கும் அவர் கொடுக்கவில்லை. இதனையே, வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. பிதாவுக்கு நிகராக இருக்கக்கூடியவர் நமது ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. எனவே அவரைத் தவிர வேறு எவரையும் நாம் துணைக்கு அழைக்க முடியாது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." ( 1 தீமோத்தேயு 2 : 5, 6 ) என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பேதுருவும், "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" என்கின்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

பரலோக மகிமையில் நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும்  பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து வணக்கவேண்டுமானால் அவர் எத்தனை அதிகாரமும் வல்லமையும் உள்ளவராக இருக்கவேண்டும்!!! ஆம் அன்பானவர்களே, இதிலிருந்து எந்த பரிசுத்தவானும் நமக்காக பிதாவாகிய தேவனிடம் பரிந்துபேச முடியாது என்பது தெளிவாகின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே அந்தத் தகுதியுடையவர். 

"நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 20 ) என அவர் பூமியில் இருந்த நாட்களிலேயே நமக்காக பிதாவிடம் ஜெபிக்கவில்லையா? எனவே அவரையே நமது துணையாக பற்றிக்கொள்வோம். "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 8 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,198                                  💚 மே 20, 2024 💚 திங்கள்கிழமை 💚

"முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்." ( எரேமியா 32 : 33 )

கர்த்தரது வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் இருப்பது என்பது நமது முதுகை அவருக்குக் காண்பிப்பதுபோல என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் ஒரு நண்பனிடமோ, உயர் அதிகாரியிடமோ பேசும்போது எப்படி நிற்போம் என்று சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் பேசும்போது நாம் மறுபுறம் திரும்பி நமது முதுகைக் காட்டிக்கொண்டிருப்போமானால் எப்படி இருக்கும்? அவர்களிடம் நாம் ஏதாவது பெறமுடியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படியே இருக்கிறார்கள் என்று கூறுகின்றார் கர்த்தர். 

சிலர் தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை எதிரில் சந்தித்தால் தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். சில வேளைகளில் நாம் அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் பேசலாம், சிரிக்கலாம் என்று எண்ணுவோம்,  ஆனால் அவர்கள் தொலைவிலிருந்தே நம்மைப் பார்த்து விட்டு அருகில் வந்ததும் நம்மை பார்க்காததுபோல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 

இதுபோலவே நாம் தேவனது கற்பனைகளைப் புறக்கணிக்கும்போது அவருக்குச் செய்கின்றோம். நமது முதுகை அவருக்குக் காட்டுகின்றோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. எனவே தேவன் சொல்கிறார் "என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்." ( உபாகமம் 32 : 20 )

மனிதர்களை நாம் புறக்கணித்துவிடலாம். ஆனால் எப்படியேனும் ஒரு சூழலில்  நாம் தேவனைத் தேடித்தான் ஆகவேண்டும். இப்படி நமது முதுகை அவருக்குக் காட்டியபடி வாழ்ந்துவிட்டு நமக்குத் தேவை ஏற்படும்போது மட்டும் அவரைத் தேடுவோமானால் அவரும் தனது முகத்தை நமக்கு மறைப்பேன் என்கிறார் தேவன். ஆம் அன்பானவர்களே, நமது ஜெபங்களைத் தேவன் கேட்காமல் இருக்க இதுதான் காரணம்.

"அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதனால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்." ( உபாகமம் 31 : 17 )

கர்த்தரது இருதயத்துக்குப் பிரியமானவனாக வாழ்ந்த தாவீது கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 ) அதாவது நான் எப்போதும் உமது முகத்தையே தேடுவேன். காரணம், என் இருதயம் அப்படித் தேடும்படி என்னிடம் சொல்லிற்று என்கிறார். 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 ) "ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்." ( எபிரெயர் 3 : 7, 8 )

எனவே அன்பானவர்களே, நமது  முதுகை அவருக்குக் காண்பித்து அவரை அவமதிக்காமலும்   நமது இருதயத்தைக் கடினப்படுத்தாமலும் நமது முகத்தை தேவனுக்குக் காண்பித்து வாழ்வோம்.  தாவீது கூறுவதுபோல, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று நமது இருதயமும் சொல்லக்கடவது. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,199                                  💚 மே 21, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்" ( லுூக்கா 21 : 4 )

இன்று பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் ஆலய காரியங்களுக்கு அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு அதிக மதிப்பும் குறைவாகக் கொடுப்பவர்களுக்கு அற்பமான உபசரிப்பும் உள்ளது நாம் கண்கூடாகக் காணக்கூடிய ஒரு விஷயம். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் இந்த வேறுபாடு அதிகமாகக் காணப்பட்டாலும் பாரம்பரிய சபைகளிலும் இந்த பாரபட்சம் உள்ளது. 

ஆலய காரியங்களுக்கு அதிகமாகக் கொடுப்பவர்கள் தான் மேலான நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரமுடியும். இதற்கு இன்னொரு காரணம் அதிகமாக ஆலய காரியங்களுக்குக் கொடுக்க இயலாதவர்கள் தாங்களாகவே சற்று ஒதுங்கி நின்றுவிடுகின்றனர். பல்வேறு செலவினங்கள் வரும்போது வசதி குறைந்தவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது எனும் நிலைமையே இன்று இருக்கின்றது. 

ஆனால், ஆவிக்குரிய முறையில் பார்ப்போமானால் இது தேவனுக்கு ஏற்பில்லாத செயலாகும்.  ஏனெனில்,  ஆவிக்குரிய செயல்பாடுகள் பணத்தின் அடிப்படையில் உள்ளவையல்ல. அது தேவன் பார்க்கக்கூடிய உள்ளான மனித நிலைமை, மனித இருதயத்தின் எண்ணங்களின் அடிப்படையிலானவை. காணிக்கை அதிகமாகக் கொடுக்க முடியாதவர்கள் உண்மையில் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கலாம். தேவன் அதனையே முக்கியமாகக் கருதுகின்றார். 

எனவேதான் அதிகமாகக் காணிக்கைகளைப் போட்ட மற்றவர்களைவிட இரண்டு காசு காணிக்கைப் பெட்டியில் போட்ட பெண்ணை இயேசு கிறிஸ்து பாராட்டி நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளும் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தினார்.  மற்றவர்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இந்தப் பெண்ணோ தனது  வறுமை நிலையிலும் தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று பொதுவாக ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் தசமபாக காணிக்கையை அதிகம் வலியுறுத்தி பிரசங்கிக்கப்படுகின்றது. ஆனால், பத்தில் ஒன்று காணிக்கையாகச் செலுத்த புதிய ஏற்பாட்டில் காட்டாயப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.  மாறாக,  நாம் எதனை தேவனுக்கென்று செலுத்தினாலும் மன மகிழ்ச்சியோடு கொடுக்கவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

மக்கெதோனியா சபை மக்களைக் குறித்து கொரிந்திய சபையினருக்கு அப்போஸ்தலரான பவுல்  எழுதும்போது, "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." ( 2 கொரிந்தியர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

ஆம், அவர்கள் தரித்திரர்கள்; அதாவது ஏழைகள். அப்படியிருந்தும் "தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இப்படிச் சந்தோஷமாய்க் கொடுப்பதையே தேவன் விரும்புகின்றார். இயேசு கிறிஸ்து புகழ்ந்து பேசிய இரண்டு காசு காணிக்கைப்பெட்டியில் போட்ட பெண்ணும் இப்படி சந்தோஷத்தோடு கொடுத்தவள்தான். அவளது இருதயத்தை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். 

நாம் அதிகமாக காணிக்கை போடுவதையும் ஆலயங்களுக்கு என அதிகமாகப் பொருளுதவிச் செய்வதையும் மக்கள் வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் தேவன் நாம் என்ன மனநிலையில் அதனைச் செலுத்துகின்றோம் என நமது இருதயத்தையும் (மற்றவர்கள் நம்மைப் பெருமையாகப் பார்க்கவேண்டும் எனும் எண்ணம் இருக்கின்றதா என்பதனையும்) நாம் காணிக்கையாகச் செலுத்தும் பணத்தை எப்படிச் சம்பாதித்தோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். 

எனவே மற்றவர்களைப்போல் ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகளையும் பொருளுதவியையும் நம்மால் செய்யமுடியவில்லையே எனும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியோடு நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். அதுபோல, அதிகமாக ஆலயக் காரியங்களுக்குச் செய்பவர்கள் பெருமை இல்லாமல் உண்மையான தேவ அன்போடு, நேர்மையாக சம்பாதித்தவற்றை ஆலயங்களுக்குச்  செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  
  
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,200                                  💚 மே 22, 2024 💚 புதன்கிழமை 💚

"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40 : 29 )

மனிதர்கள் நாம் இந்த உலகத்தில் வாழ்வதால் பல்வேறு பாடுகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். இதனால் பல்வேறு சமயங்களில் நாம் சோர்வடைந்துவிடுகின்றோம். இந்தச் சோர்வு உடலளவிலும், மனதளவிலும், ஆவிக்குரிய சோர்வாகவும் பலவேளைகளில் இருக்கின்றது. 

மனச் சோர்விலிருந்து விடுபட உலக மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர்.  திரையரங்குகளுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது, மது அருந்துவது, மனத்துக்குப் பிடித்த நண்பர்களை அழைத்துத் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது  எனப்   பல்வேறு முயற்சிகளைச் செய்கின்றனர். மேலும் சிலர் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்கின்றனர். 

அன்பானவர்களே, இன்றைய தியானவசனம் சொல்கின்றது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." அதாவது சோர்ந்திருக்கின்றவனுக்கும் பெலனில்லாமலிருக்கின்றவர்களுக்கும்  பெலன் கொடுப்பவர் தேவன் ஒருவரே.  தேவன் அனைத்துச்   சோர்வையும்  மாற்றுகின்றவர் மட்டுமல்ல அவற்றை மேற்கொள்ளும் பெலத்தை (சத்துவத்தை) நம்மில் பெருகப்பண்ணுகின்றவர். 

அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன என்று கேள்வி எழுகின்றது. உடல் சோர்வோ மனச் சோர்வோ ஆவிக்குரிய சோர்வோ எதுவாக இருந்தாலும் நாம் ஆறுதல் அளிக்கும் மனிதர்களையோ கவலை தீர்க்கும் உலகப் பொருட்களையோ நம்பி ஓடாமல் தேவ கிருபையை இறைஞ்சவேண்டியது அவசியம். காரணம்,  நமது தேவன் நமக்கு வாக்களித்துள்ளார், " கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று.

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பலவீனங்களை மேற்கொள்ள தேவ கிருபை அவசியம். அவரது கிருபை இல்லாமல் சுய முயற்சியால் நாம் சோர்விலிருந்து நிரந்தர விடுதலை அடைய  முடியாது. சில உலக வழிமுறைகள் தற்காலிக விடுதலையைத் தரலாமே தவிர நிரந்தர விடுதலையைத் தேவன் ஒருவரே நமக்குத் தரமுடியும். எனவே, சோர்ந்துபோகிறவனுக்குப்   பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற அவரை நாம் பற்றிக்கொள்ளவேண்டியதும் அவரது கிருபைக்கு இறைஞ்சவேண்டியதும்  அவசியம். 

இன்றைய தியான வசனத்தை எழுதிய ஏசாயா தொடர்ந்து எழுதும்போது இரண்டு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார்,  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) ஆம், கர்த்தரை நாம் பற்றிக்கொள்ளும்போது சோர்வு, இளைப்பு எல்லாமே மறைந்துவிடும். நாம் ஓடினாலும் இளைப்படையமாட்டோம்,  நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,201                                  💚 மே 23, 2024 💚 வியாழக்கிழமை 💚

"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." ( எசேக்கியேல் 14 : 10 )

நமது தேவன் தனது பிள்ளைகள் ஒரு தகப்பனோடுள்ள உறவுபோல தன்னோடு உறவுகொண்டு வாழவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பாலான மக்கள் தேவனோடு எந்தத் தனிப்பட்ட உறவும் ஐக்கியமுமின்றி வாழ்கின்றனர். தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது ஊழியர்களைத்தேடி,  அதுவும்  தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர் என தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஊழியர்களைத் தேடி குறிகேட்கச் செல்வதுபோலச் செல்கின்றனர். 

இப்படி தேவ ஐக்கியமற்ற விசுவாசிகளையும் அவர்களுக்கு ஏற்றாற்போல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களையும் பார்த்து கூறுவதாக இன்றைய தியான வசனம் உள்ளது. ஆம், இத்தகைய தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும் என்கின்றார் கர்த்தர். 

ஆம் தேவன் தனது மக்கள் எதனைப்பற்றியும் தன்னிடம் நேரடியாக விசாரித்து அறியவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் இதன்  காரணத்தையும் பின்வருமாறு கூறுகின்றார்:-  "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 11 )

அதாவது தனது ஜனமாகிய இஸ்ரவேலர்கள் (புதிய ஏற்பாட்டு முறைமையில் நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள்)  தன்னைவிட்டு வழிதப்பிப் போகாமலிருக்கவும் தங்கள் மீறுதலால் தங்களைக் கெடுத்துக்கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்பதற்காக இப்படிச் சம்பவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே தீர்க்கத்தரிசிகளிடம் விசாரிக்கும் இத்தகைய முறைகேடான  செயலைச் செய்யாமலிருந்தால் "அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்" என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 

இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துவது, நாம் தனது மக்களாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். ஒரு தகப்பனிடம் அல்லது தாயிடம் நாம் நமது பிரச்சனைகளைப்  பேசி முடிவுகாண்பதுபோல நாம் அவரிடம் பேசவேண்டுமென்று விரும்புகின்றார். இதற்கு மாறாக நாம் குறுக்கு வழியில் விடைதேடி தீர்க்கதரிசன ஊழியர்களைத் தேடி ஓடினால் நமக்கும் அந்தத் தீர்க்கதரிசிக்கும் தண்டனை உண்டு என்கின்றார் தேவன். 

எனவே அன்பானவர்களே, தேவனோடுள்ள நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள முயல்வோம். நமது தேவைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடமே கூறுவோம். நாம் அப்படி மாறும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சியடைவார். தேவனுக்கும் நமக்குமுள்ள இத்தகைய உறவே நிரந்தர உறவு. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,202                                  💚 மே 24, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்." ( ஓசியா 8 : 14 )

இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இஸ்ரவேல், யூதா என்பவை தேவனுடைய மக்களைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களே இஸ்ரவேலரும் யூதரும். ஆம் புதிய ஏற்பாட்டின்படி நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலரும் யூதரும். நாமே ஆபிரகாமின் சந்ததி. "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 7 ) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

சரி, இன்றைய தியான வசனம்  கூறும் கருத்துக்கு வருவோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது மக்களாகிய விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம்  இன்று பலவேளைகளில் கர்த்தரையும் அவரது கற்பனைகளையும் கடைபிடிக்காமல் அவைகளை மறந்து வெறும் ஆலய காரியங்களுக்கும் வழிபாடுகளுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். உலகச் செல்வங்களைச் சேர்ப்பதிலேயே ஆர்வத்தைக் காட்டுகின்றோம். இதனையே, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் ஆலயக்காரியங்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நமது உடலாகிய ஆலயத்தைப் பாவமில்லாமல் பேணக்  கொடுக்கவேண்டும். எனவேதான் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்றும், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்றும் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

நமது வாழ்வில் தேவனை மறந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்துகொண்டு ஆலயங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பது அர்த்தமற்றது. ஆசீர்வாதம் கிடைக்குமென்று கோடிக்கணக்கான பணத்தை காணிக்கைப் பெட்டியில் போடும் பலரைப்பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றதை நாம் வாசித்திருக்கலாம். நாம் இப்படி அறிவிலிகளாக இருக்கலாகாது. தேவனை மறந்து கோவில்களைக் கட்டுவதைவிட்டு தேவனோடு இணைந்து நமது உடலைப் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு ஆவிக்குரிய ஆலயத்தைக் கட்டவேண்டும்.  

கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து ஆலயம் கட்டுவது மனிதர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி ஆலயம் கட்டக்கூடியவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் கட்டும் நோக்கத்தையும் பார்க்கின்றார்.  ஆம், மண்ணினாலும் கல்லினாலும் கட்டப்பட்ட ஆலயங்களிலல்ல; நமது உடலாகிய ஆலயத்தில்தான் தேவன் வாசமாயிருக்கின்றார் எனும் சத்தியத்தைப் புரிந்துகொள்வோம். "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,203                                  💚 மே 25, 2024 💚 சனிக்கிழமை 💚

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவை நறுமணத்துக்கு ஒப்பிட்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவன் விசுவாசிகளாகிய நம்மைக்கொண்டு கிறிஸ்துவின் அந்த வாசனையை எல்லா  இடங்களிலும் வெளிப்படச் செய்கின்றார். அதாவது, நமது சாட்சியுள்ள வாழ்வாகிய நறுமணத்தால் இப்படி அவரை அறியும் அறிவின் வாசனையை வெளிப்படுத்துகின்றார். இதனையே, "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

உன்னதப்பாட்டு  ஆவிக்குரிய மறைபொருளோடு தேவனை மணவாளனாகவும் விசுவாசிகளை மணவாட்டியாகவும் உருவகப்படுத்திப் பாடப்பட்ட நூல். அங்கும் இந்த வாசனையைப் பற்றி நாம் வாசிக்கின்றோம். அவரது பெயரே பரிமளத்தைலம் போன்ற நறுமணம் வீசக்கூடியது. இதனையே, "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த வாசனையை மக்களுக்கு அளிக்கவே தேவன் நம்மை அழைத்துள்ளார். ஆனால் நாம் இந்த வாசனையை வெளிப்படுத்தினாலும் எல்லோரும் இந்த வாசனையை அறிந்துகொள்வதில்லை. ஒரு பன்றியின்முன் மணமான கேக் துண்டையும் மனிதக் கழிவையும் வைத்தால் பன்றி மனிதக் கழிவையே விரும்பும். காரணம் அதற்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அதுபோலவே கிறிஸ்துவின் பெயரும் அவரது கற்பனைகளும் கெட்டுப்போகிறவர்களுக்கு வாசனையாகத் தெரியாது. இரட்சிப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கோ அது ஜீவ வாசனையாக இருக்கும். 

ஆம் அன்பானவர்களே, ஒரேபொருள் அதனை அறியும் அறிவிற்கேற்ப ஒருவருக்கு நறுமணமாகவும் இன்னொருவருக்கு துர்நாற்றமாகவும் இருக்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். " ( 2 கொரிந்தியர் 2 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்துவை அறியும் அறிவின் வாசனையை மிக அதிகமாக வெளிப்படுத்தியவர் அப்போஸ்தலரான பவுல். இன்று இரண்டாயிரம் ஆண்டுக்களைக் கடந்தபின்னரும் அவரின் எழுத்துக்கள் மூலம் கிறிஸ்துவின் வாசனையை நாம் நுகர முடிகின்றதல்லவா? இத்தகைய வாசனையினை நாமும் வெளிப்படுத்துகின்றவர்களாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.

யார் நம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல நாம் எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாக வாழவேண்டியது அவசியம். சாட்சியற்ற வாழ்வு அவரது வாசனையை பிறருக்கு வெளிக்காட்டாது. நறுமண வாசனை நம்மில் வெளிப்படும்போது நறுமணப் பூவைத்தேடி வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வருவதுபோல கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரை அறியும் ஆவலில் நெருங்கி வருவார்கள். கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நறுமணமுள்ளவர்களாக வாழ்வோம். 

நமது வாழ்வு அப்படி மாறும்போது தேவனே நம்மைப்பார்த்துக் கூறுவார்:- "உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!" ( உன்னதப்பாட்டு 4 : 10 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,204                                 💚 மே 26, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக." ( எபேசியர் 3 : 20, 21 )

பிதாவாகிய தேவனது முக்கியமான ஒரு குணத்தைக்குறித்து அப்போஸ்தலராகிய பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது அவர் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிறவர். இந்த வசனத்தில் "நமக்கு" என்று கூறாமல் "நமக்குள்ளே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் அவர் நமது உள்ளான மனிதனில் நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் மேலாகச் செயலாற்றுபவர். 

பாவத்தை மேற்கொள்ளும் பலம் நமக்கு இல்லாமலிருக்கலாம், அல்லது சில மோசமான குணங்கள் நம்மில் இருக்கலாம். உதாரணமாக, பொறாமை, பெருமை, எரிச்சல், கோள்சொல்லுதல், பொய், மற்றவர்களை அற்பமாக எண்ணுவது போன்ற குணங்கள் நம்மில் இருக்கலாம். இவற்றை நாம் உணர்ந்து இவைகளை நம்மைவிட்டு அகற்றவேண்டும் என வேண்டுதல் செய்யும்போது நாம் வேண்டியதற்குமேலேயே அவர் செயல்படுவார். 

இதனை நாம் வெளிநாட்டில் வேலைசெய்து ஊருக்குத் திரும்பும் ஒரு நல்ல தந்தையை உதாரணம் கூறலாம். அவரது மகனும் மகளும் தகப்பனிடம் ஊருக்கு வரும்போது சில பொருட்களை வாங்கிவரச் சொல்லியிருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தந்தை ஊருக்கு வரும்போது தனது குழந்தைகள் கேட்டதற்கும் எண்ணியதற்கும் மிக அதிகமான பொருட்களை வாங்கி வருவது போன்றது இது. 

ஒரு பூலோக தகப்பனார் இப்படி இருப்பார் என்றால் பரலோக தந்தை எவ்வளவு மேலானவராக இருப்பார்? இதனையே இயேசு கிறிஸ்து, "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" ( மத்தேயு 7 : 11 ) என்று கூறினார்.

இன்று புனிதர்களாக கருதப்படும் மனிதர்கள் அனைவருமே நம்மைப்போல பலவீனமானவர்கள்தான். அவர்கள் புனித நிலைமைக்கு வந்ததற்கு காரணம் அவர்களது உள்ளான மனிதனில் ஏற்பட்ட மாற்றம். அது அவர்களது சுய பலத்தால் வந்ததல்ல, அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்து அவற்றை மாற்றிடவேண்டுமெனும் எண்ணமும் அவர்களுக்கு இருந்ததால்தான். 

இத்தகைய வல்லமையினை நமக்குத் தரும் பிதாவாகிய தேவனுக்கு இயேசு கிறிஸ்துமூலம் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மூலம் நாம் பிதாவாகிய தேவனிடம் வேண்டுதல்செய்து இந்த வல்லமையினைப் பெற்றுள்ளோம். எனவே அந்த கிறிஸ்து வழியாக பிதாவுக்கு நாம் மகிமை செலுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே அன்பானவர்களே, நமது உள்ளான குணத்தை மாற்றிட கிறிஸ்து வழியாக வேண்டுதல் செய்வோம். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே அவர் செயல்புரிந்து நம்மை புது மனிதர்களாக மாற்றுவார்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,205                                 💚 மே 27, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 )

நமது பேச்சிலும் செயலிலும் நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்படவேண்டியது அவசியம். நமது பேச்சுக்கள்  இயேசு கிறிஸ்து கூறியதுபோல ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் இருக்க வேண்டியது அவசியம். "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்று அவர் கூறவில்லையா?

ஆனால் இன்று மக்களில் பலரும் பிறர் தங்களை மேன்மையாகவும் நீதிமானாகவும் எண்ணவேண்டும் என்பதற்காக பல்வேறு உபாயங்களைக் கைக்கொள்ளுகின்றனர். செய்யும் ஒவ்வொருசெயலிலும் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே மக்களில் பலரும் இத்தகைய கபட மனிதர்களை நீதிமான்களாக மேன்மையாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தேவன் சொல்கின்றார், "மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது."
 
இன்று பல அரசியல்வாதிகளது வாழ்க்கையினை நாம் பார்க்கும்போது அவர்களது செயல்பாடுகள் மனிதர்களாகிய நமக்கே அருவருப்பாக இருக்கின்றதே!!! ஊழலும் ஏமாற்றும் செய்து சொத்துக்களைத் சேர்த்து வைத்துள்ள பலர் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின்  ஆட்சிமாறி அடுத்த ஆட்சியாளர்கள் வந்து அவர்கள்மேல் ஊழல் வழக்குத் தொடரும்போது கள்ளத்தனமாக நெஞ்சுவலி வருவதாக நடிப்பதும், பழிவாங்கும் நோக்கத்துடன் தன்மேல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என அறிக்கைகள் வெளியிடுவதும்,   நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வழக்குகளிலிருந்து விடுபடுவதும், இறுதியில் "நீதி வென்றது" என அறிக்கையிட்டு முழங்குவதும் நாம் காண்பதுதான். 

ஆம் அன்பானவர்களே, "நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." ( மத்தேயு 12 : 35 ) 

இத்தகைய பொல்லாத மனிதர்களைப்  பார்த்துத் தேவன் கூறுகின்றார்,  "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்" என்று. இவை தேவன் கூறும் வெறும் வார்த்தையல்ல, மாறாக இவர்களுக்குத் தண்டனை உண்டு என்று பொருள்படுகின்றது. 

இந்த மனிதர்கள் இவையெல்லாம் ஏன் செய்கின்றார்கள்? மக்கள்முன் தங்களை நீதிமான்கள் எனக் காட்டுவதற்கு. இவர்களது இந்தச் அவலட்சணச் செய்கைகளை மக்களில் பலரும்  அறிந்திருந்தாலும் அவர்களை மேன்மையாகவே கருதுகின்றனர். ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களையும் அவர்களை புகழ்ந்து துதிபாடிக் கொண்டிருப்பவர்களையும் அருவருப்பாகவே பார்க்கின்றார். 

எனவே நாம் தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் உண்மையும் உத்தமமும் உள்ளவர்களாக வாழவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. தானியேலைச் சிங்கக்கெபியினுள் போட்டபோது சிங்கங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவர் தேவனுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்னும் உண்மையுள்ளவராக, குற்றமற்றவராக வாழ்ந்துதான். இதனைத் தானியேல் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" ( தானியேல் 6 : 22 )

ஆம் அன்பானவர்களே, தேவனுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்பும் நீதியுள்ளவர்களாக வாழ்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,206                                💚 மே 28, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா." ( சங்கீதம் 117 : 2 )

தேவனது கிருபை இல்லாமல் நாம் பூஜ்யமே. ஆனால் இந்த அறிவு பெரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. எல்லோரும் தங்கள் சொந்த பலத்தினால் நிலை நிற்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்ன? அடுத்த நொடியில் நடக்கயிருப்பதுகூட நமக்குத் தெரியாது.  "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4 : 14 ) 

ஆம் அன்பானவர்களே, இத்தகைய உலகில் இன்று நாம் நிலை நிற்கின்றோமென்றால் அது தேவனது சுத்தக் கிருபையினால்தான். வேதாகமத்தில் நாம் வாசிக்கும் அனைத்துப் பரிசுத்த மனிதர்களும் பலவீனமானவர்களே. ஆபிரகாம், மோசே, ஈசாக்கு, யாக்கோபு, கிதியோன், எலியா, எலிசா, தாவீது,  பேதுரு, யோவான், யாக்கோபு, பவுல் ......இப்படி அனைத்து வேதாகம பக்தர்களும் பலவீனத்தில் வாழ்ந்து, தேவ கிருபையால் நிலைநிறுத்தப்பட்டவர்கள்தான்.

இதனை உணர்ந்த தாவீது, "என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்." ( சங்கீதம் 86 : 12, 13 ) என்று கூறுகின்றார். அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்கள் செய்தபோதும் தேவன் தனது கிருபையால் அவரை நிலை நிறுத்தினார். 

அன்பானவர்களே, நாம் தேவனற்றவர்காக இருந்தபோது எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று சிந்தித்துப்பார்த்தால் அவர் நம்மேல் வைத்திருந்த கிருபையை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பழைய வாழ்க்கையை எண்ணிப்பார்ப்போம். நாம் எல்லாவற்றிலும் நிறைவுள்ளவர்களாக வாழவும் நற்செயல்கள் செய்து அவருக்கு உகந்தவர்களாகவும் தேவன் நம்மில் கிருபையைப் பெருகச் செய்ய வல்லவராய் இருக்கின்றார் என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

"மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 9 : 8 ) என்கின்றார் அவர்.

தேவன்  நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது என்பதை நமது உள்ளம் உணர்ந்துகொள்ளும்போதுதான் அவர்மேலுள்ள  நமது அன்பு மேலும் அதிகாரிக்கும். நமது பழைய பாவ வாழ்க்கையோடு புதிய வாழ்க்கையினை ஒப்பிடும்போது அவர்மேல் நமது அன்பு அதிகரிக்கும். "ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்." ( லுூக்கா 7 : 47 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூருவோம். ஏனெனில் அவரே கிருபைமிகுந்தவர். "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,207                                💚 மே 29, 2024 💚 புதன்கிழமை 💚

"அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்." ( மாற்கு 9 : 38 )

இன்றைய கிறிஸ்தவ உலகில் நடக்கும் காரியங்களை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துச்சொல்கின்றது. கிறிஸ்தவத்தின் பல்வேறு சபைப் பிரிவினரும் ஒருவரை ஒருவர் குறைகூறித் தாங்கள்தான் கிறிஸ்துவுக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயலுகின்றனர். 

கத்தோலிக்கர்கள் மற்ற சபைப் பிரிவினரை ஆடுதிருடர்கள் என்றும் அப்படிப் பிற சபைகளுக்குச் செல்பவர்களைக் கொலைபாதகர்கள் போலவும் பார்க்கின்றனர். அவர்களை அவிசுவாசிகள் என்கின்றனர். தங்கள் தலைவர்தான் பேதுருவின் வழித்தோன்றல் என்றும் எனவே தங்களது சபைதான் கிறிஸ்து உருவாக்கிய சபை என்றும் கூறிக்கொள்கின்றனர். 

சி.எஸ்.ஐ  சபையினர், பழைய தப்பறைகளை மார்ட்டின் லூத்தர் திருத்தி சீர்படுத்தி உருவாக்கியதுதான் எங்களது சபை. எனவே நாங்கள்தான் வேதாகமம் கூறும் வழியில் தேவனை ஆராதிக்கின்றோம்; எல்லா தப்பறைகளும் எங்கள் சபையில் மாற்றப்பட்டுவிட்டன  என்கின்றனர்.

பெந்தெகொஸ்தே சபையினரோ  ரோமன் கத்தோலிக்கர்களையும் சி.எஸ்.ஐ  சபையினரையும் ஆவியில்லாத செத்த சபைகள் என்கின்றனர். அவர்களை  நரகத்தின் மக்கள் என்றும் தாங்கள் மட்டுமே ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்கள்  என்றும் சொல்லிக்கொள்கின்றனர். 

தனி ஊழியம் செய்யும் ஊழியர்களோ எவரையும் நம்பவேண்டாம், கிறிஸ்து சபைகளை உருவாக்க வரவில்லை.  எனவே, சபைகள்மேல் நம்பிக்கைக் கொள்ளவேண்டாம் என்கின்றனர். உண்மையான விசுவாசிகள் எது சரி என்று குழம்புகின்றனர்.

கிறிஸ்துவின் சீடர்களும் ஆரம்பத்தில் இப்படியே இருந்தனர். எனவே அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரால் மற்றவர்கள் அற்புதங்கள் செய்வதை விரும்பவில்லை. எனவேதான் யோவான் அவரை நோக்கி: "போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்."

இன்றைய மேற்கூறிய கிறிஸ்தவ சபைகளும் ஊழியர்களும் யோவானைப்போன்ற மனமுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.  யோவானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து, "அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்." ( மாற்கு 9 : 39, 40 ) என்றார். ஆம், கிறிஸ்துவை அறிவிக்கின்ற எல்லோருமே சகோதரர்களே. இந்தப் புரிதல் இல்லாததே இன்றைய சபை வெறுப்புணர்ச்சிகளுக்குக் காரணம். 

சபை ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் பேசும் பல சபைக் குருக்கள் யோவானைப் போலவே இருக்கின்றனர். அவர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கும் தங்களது சபைகளில் பேசுவதற்கும் முரண்பாடாகவே இருக்கின்றது. காரணம் உண்மையான தேவ அன்பு இவர்களுக்கு இல்லை. அன்பு இருக்குமானால் இயேசு கிறிஸ்து கூறியதைப்போல "என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்." என்று மற்றவர்களை சகோதரர்களாக எண்ணுவர். 

இப்படி விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படாதவாறு தடுத்து மத வெறியைத் தூண்டி மற்ற கிறிஸ்தவ சபைகளை விரோதியாக எண்ணுபவர்களும் பேசுபவர்களும் விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குகின்றனர். "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 42 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,208                                💚 மே 30, 2024 💚 வியாழக்கிழமை 💚

"உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்." ( ஏசாயா 47 : 10 )

அதிக படிப்பு, அறிவு  இவற்றால் அகங்கார எண்ணத்தோடு வாழ்பவர்களை இன்றைய தியான வசனம் கண்டிக்கின்றது. இதனையே, "உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்" என்று கூறப்பட்டுள்ளது. 

"அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்." ( பிரசங்கி 1 : 18 ) என்று பிரசங்கி நூலில் வாசிக்கின்றோம். அதிக அறிவு இருப்பதால் ஒருவர் உலகத்தில் வல்ல செயல்கள் செய்யலாம் ஆனால்,  அவர்கள் தங்கள் அறிவுமூலம் தேவனை அறிய முடியாது. மேலும் அதிக அறிவே தேவனை  அறிந்துகொள்ளத் தடையாக இருக்கின்றது. காரணம், அறிவு பெருத்தவர்கள் எதனையும் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாமல் அறிவோடு ஆராய்ந்து பார்ப்பார்கள். 

சிறு குழந்தைகள் நாம் சொல்லும் எதனையும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மத்தேயு 19 : 14 ) என்று. 

மேலும் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய்". ஆம், அதிக அறிவு இருப்பதால் மனமானது பல்வேறு துன்மார்க்கச் செயல்களைச் செய்யும்படித் தூண்டுகின்றது. இன்றைய உலகில்  பல்வேறு இணையதளக் குற்றங்கைச் செய்பவர்களும், நவீன ஏமாற்றுக்களைச் செய்பவர்களும் அறிவு பெருத்தவர்கள்தான்.  நம்மைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லை என இவர்கள் எண்ணிக்கொள்வதால் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

"நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்." ( ரோமர் 16 : 19 ) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். நமது அறிவும் ஞானமும்  நன்மை செய்வதற்கு மட்டுமே பயன்படவேண்டும். 

ஆம் அன்பானவர்களே, நமக்கு தேவன் அதிக அறிவைத் தந்திருந்தால் அதனைப் பெருமையாக எண்ணி அகம்பாவத்துடன் நடக்காமல் மற்றவர்களை மதிப்போம்.  தீமையான காரியங்களைச் செய்யாமல் நன்மை செய்ய ஞானத்துடன் நடந்துகொள்வோம்.  "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 3 )

இன்றைய தியான வசனம் வேதாகமத்தில் இதற்கு அடுத்த வசனமாகவும் தொடர்கின்றது. அதில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்." ( ஏசாயா 47 : 11 ) எனவே எச்சரிக்கையாக நடந்துகொள்வோம். தவறான செயல்பாடுகள் நம்மில் இருக்குமானால் திருத்திக்கொள்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,209                                💚 மே 31, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்." ( 1 கொரிந்தியர் 7 : 19 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் இரண்டு அன்புக் கட்டளைகளை மட்டுமே கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்பு செய்வதும், தன்னை அன்பு செய்வதுபோல பிறரையும் அன்பு செய்வதுமே அந்தக் கட்டளைகள். இவைகளைக் கைக்கொள்வதே முக்கியம். இவைகளைக் கைவிட்டு மேலோட்டமாக நமது உடல் சம்பந்தமான செயல்களைச் செய்வது அர்த்தமற்றது என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும் உடல் சார்ந்த காரியங்களான உணவுக் கட்டுப்பாடு, உடலை வருத்தி சில பக்தி காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கலாம்.  ஆனால் ஒருவர் கிறிஸ்து கூறிய கட்டளைகளுக்கு முரணாக நடந்துகொண்டு இவைகளைச்  செய்வதில் அர்த்தமில்லை. இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 ) இங்கு உணவைப்பற்றி பவுல் கூறினாலும், உணவு மட்டுமல்ல, பல உடல் சார்ந்த செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பதும் இப்படியே.  

விருத்தசேதனம் ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே ஒரு முக்கிய பிரச்சனையாகக் கருதப்பட்டது. ஏனெனில் யூதர்களது முறைமையான விருத்தசேதனத்தை பிற இனத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் செய்யவேண்டுமா வேண்டாமா என்று பிரச்சனை எழுந்தது. பிற இனத்து மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருந்தது.

அப்போது அப்போஸ்தலர்கள் கூடி எடுத்த முடிவு என்னவென்றால், "விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 15 : 28, 29 )

இன்று நமக்குள் விருத்தசேதனம் என்ற செயல்பாடு இல்லாவிட்டாலும் புதிதாக மனம்திரும்பி கிறிஸ்துவுக்குள் வரும் விசுவாசிகளைச் சிலர் தேவையில்லாத முறைமைகளைப் பின்பற்றச்சொல்லி வலியுறுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது. உதாரணமாக, உபவாசமிருத்தல், காணிக்கை அளித்தல் அந்நியபாஷை பேசுதல் இவைகளில் தவறான வழிகாட்டுதல்களைக் கொடுக்கின்றனர். ஒருவரை கர்த்தர் தனக்கு ஏற்புடையவராக இரட்சிக்கின்றார் என்றால் தேவனுடைய ஆவியானவரே அவரது உள்ளத்தில் உணர்த்தி சத்தியத்தின் பாதையில் நடத்துவார். 

தேவையற்ற கட்டளைகளும் வழிகாட்டுதல்களும் புதிய விசுவாசிகளைக் குழப்பமடையவேச் செய்யும். எனவே,  மேலோட்டமாக நமது உடல் சம்பந்தமான செயல்களைச் செய்வது அர்த்தமற்றது என்கிறார் அப்போஸ்தலரான பவுல். தேவையற்ற குழப்ப மனநிலை இல்லாமல் பவுல்  கூறுவதுபோல, "தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்." எனவே கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வோம்.