இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, October 09, 2024

என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

 'ஆதவன்' அக்டோபர் 10, 2025. வெள்ளிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,341



"இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்." ( யோவான் 8 : 21 )

நாம் பரலோகம் சேர்ந்திட இயேசு கிறிஸ்துதான் ஒரே வழி. பரலோகம் பாவங்கள் கழுவப்பட்ட பரிசுத்தவான்கள் சென்று சேரும் இடம். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று வாசிக்கின்றோம். 

இயேசு கிறிஸ்து  இப்படி நாம் பரிசுத்தவான்களாக மாறும்படிக்கு நம்மை பாவங்கள் நீக்கி இரட்சித்து வழிகாட்டவே உலகினில் வந்தார். ஆனால் அன்றைய யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  அவர்கள் இயேசு கிறிஸ்துவை வெறும் தச்சன்மகனாகவே பார்த்தனர். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வருமா? என்று சந்தேகப்பட்டனர். அவர்கள் மேசியா என்பவரை சாதாரண உலக அரசன்போல எண்ணி அவர்  இனிமேல்தான் வருவார் என நம்பினர்; கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றுவரை யூதர்கள்  இனிமேல்தான் மேசியா வருவார் என்று காத்திருக்கின்றனர். 

இத்தகைய மனநிலையுள்ள யூதர்களைப் பார்த்துத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தைக் கூறினார். இயேசு கூறுவதன் பொருள் என்னவென்றால், "நான் இத்தனை நாட்கள் பல்வேறு அதிசயங்கள் அற்புதங்கள் செய்து பல போதனைகளை எடுத்துக்கூறி நான் தான் வரவிருக்கிறவர் என்பதை உங்களுக்கு விளங்கச் செய்தேன், நீங்கள் என்னை நம்பவில்லை. எனக்குப் பிதா குறித்த உலக நாட்கள் முடிவடைந்தபின் நான் அவரிடம் திரும்பப் போகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் மேசியாவைத் தேடித் தேடி உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்கிறார் இயேசு கிறிஸ்து.

மட்டுமல்ல, "நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது." என்றும் கூறுகின்றார். காரணம் பாவியான மனிதன் பரிசுத்தவான்கள் கூட்டத்தில் சென்று சேர முடியாது.   

ஆம் அன்பானவர்களே, நமக்கு பூமியில் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் அவரைக் கண்டுகொள்ளவேண்டும். நமது பாவங்கள் அவரால் மன்னிக்கப்பட இடம்தரவேண்டும். அப்படிக் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் நாம் அவரை காணத் தவறினால் பரிதபிக்கப்படத் தக்கவர்களாகவே இருப்போம்.  பரிசுத்தவான்கள், புனிதர்கள் நம்மை பரலோகத்தில் சேர்க்க முடியாது. அவர்கள் இருக்குமிடத்துக்கு கிறிஸ்துதான் நம்மை அழைத்துச்செல்ல முடியும். 

யூதர்கள் தங்களை ஆபிரகாமின் வழித்தோன்றல் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைந்தனர். அதுபோலவே இன்றும் பலர் புனிதர்களையும், சிலர் பாஸ்டர்களையும் பின்பற்றுவதில் பெருமை கொள்கின்றனர்.  இது போதாது. கிறிஸ்து நமக்குள் வந்து நம்மை ஆட்சிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் நம்பும் புனிதர்களும் பரிசுத்தவான்களும் பரலோகத்தில் இருந்தாலும் நாம் அங்கு நுழைய முடியாது. நாம் புறம்பே தள்ளப்படுவோம். 

இதனையே, "நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்." ( லுூக்கா 13 : 28 ) என்று எச்சரிக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

No comments: