'ஆதவன்' அக்டோபர் 20, 2024. ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,351
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு......." ( எபேசியர் 3 : 20 )
இன்றைய தியான வசனம் தேவனுடைய வல்லமை நமக்குள் செயல்படும் விதத்தினை விளக்குவதாக உள்ளது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் எவ்வளவு பரிசுத்தமாய் வாழவேண்டுமென்று நினைக்கின்றோமோ, விரும்புக்கின்றோமோ அதற்கும் மேலாக அவர் நமக்குள் செயல் புரிந்து நமது ஆவிக்குரிய வாழ்வை மேம்படுத்துவார்.
சில வேளைகளில் நமக்குள் எழும் எரிச்சல்கள், கோபங்கள், போட்டிகள், பொறாமை எண்ணங்கள் போன்ற குணங்களை நாமே விரும்புவதில்லை. ஆனால் உள்ளார்ந்த நிலையில் இவற்றை மாற்றிடவேண்டுமென்று எண்ணுகின்றோம் ஆனால் நம்மால் அது முடிவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தத் தவறைச் செய்கின்றோம். காரணம் இவை மனிதனால் கூடாதவை.
ஆனால் இயேசு கிறிஸ்து, "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மத்தேயு 19 : 26 ) அது எப்படிக் கூடும்? அதனையே, இன்றைய தியான வசனத்தில் "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியை செய்து" என்று கூறப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளின்படி முதலில் நாம் நமது தகாத குணங்கள் எண்ணங்கள் நம்மைவிட்டு மாறவேண்டுமென்று எண்ணவேண்டியது அவசியம். அப்படி ஒரு உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்குமானால் அதற்கு அதிகமாய் அவர் நமக்குள் செயல்புரிந்து நம்மை மாற்றுவார்.
தாய்ப்பறவையானது தனது குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக்கொடுக்க வேண்டுமானால் அந்தக் குஞ்சுகள் முதலில் பறப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். நான் காலமெல்லாம் இப்படியே கூட்டில் இருப்பேன், எனது தாய் உணவுத்தேடி எனக்குக் கொண்டுவரவேண்டுமென்று எண்ணிக்கொண்டே இருக்குமானால் அந்தக் குஞ்சு ஒருநாளும் பறக்கக் கற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே, நீச்சல் கற்றுக்கொள்ள முதலில் தண்ணீரில் இறங்கவேண்டியது அவசியம்.
நமது குணங்கள் மாறவேண்டுமானால் முதலில் நமது தவறான குணங்களை நாம் உணரவேண்டியது அவசியம். இரண்டாவது அப்படித் தவறு என உணர்ந்த குணங்கள் நம்மைவிட்டு நீங்கவேண்டும் எனும் எண்ணம் நமக்கு வேண்டும். அப்படி இருக்குமானால், இன்றைய தியான வசனத்தின்படி நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்து நமது குணங்களை தேவன் மாற்றுவார். இதற்கு மாறாக, நாம் மற்றவர்களை உதாரணமாகக் கொண்டு "அவன் / அவள் அப்படித்தானே செய்கின்றான்/ள் எனவே நானும் அப்படிதான் இருப்பேன்; நான் செய்வது சரிதான்" என்று கூறிக்கொண்டிருப்போமானால் நமது குணங்கள் மாற வாய்ப்பே இல்லை.
நல்ல குணங்களை விரும்புவோம்; அவற்றை நமதாக்கிக்கொள்ள தேவனிடம் மெய்யான இருதயத்தோடு வேண்டுவோம், தேவன் நம்மை முற்றிலுமாக மாற்றுவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment