Sunday, October 20, 2024

வாழ்வின் நிகழ்வுகளுக்கு நமது செயல்பாடுகளே காரணம்

 'ஆதவன்' அக்டோபர் 24, 2024. 💚வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,355

"முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." ( ரோமர் 2 : 9, 10 )

எல்லா உலகச் செல்வங்கள் இருந்தாலும் பலருக்கு வாழ்வில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை  இவை தொடருவதை பலவேளைகளில் நாம் காணலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அவரவர் வெளிப்படையான மனநிலையுடன் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  மட்டுமல்ல,நம்மிடம் தவறு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். 

மெய்யான தேவ ஆசீர்வாதம் என்பது வெறும் உலகச் செல்வங்களைப் பெறுவது அல்ல, மாறாக நமக்குத் தேவையான காரியங்களை வேதனையில்லாமல் பெற்று அனுபவிப்பது. எந்தத் தகப்பனும் தன் குழந்தைக்கு நல்ல உணவையும் கூடவே உடலுக்கு கேடு தரும் அசுத்தத்தையும் கொடுக்கமாட்டான். அதுபோலவேதான்  தேவனும் ஆசீர்வாதத்தினையும் வேதனையையும் சேர்த்தே கொடுக்கமாட்டார். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேதம் கூறுகின்றது. ஆம்,  கர்த்தரின் ஆசீர்வாதம் வேதனையை அதிகரிக்காத ஆசீர்வாதம். மனிதர்களுக்கு  பலவேளைகளில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை ஏற்படக்  காரணம் என்ன என்பதை விளக்கவந்த அப்போஸ்தலரான பவுல்,   "பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்." என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

உலகத்தில் உபத்திரவம், துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவையே. ஆனால், கிறிஸ்துவுக்குள் வாழும் மக்களுக்கு எந்தத் துன்பத்திலும் மன ஆறுதலும் மனச் சமாதானமுமிருக்கும். இந்தச் சமாதானம் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் இருக்காது. அதுபோல,  "எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படிப் பொல்லாங்கானவற்றைச் செய்கின்றவனுக்கு சமாதானம் இல்லை என்பதால் அப்போஸ்தலரான பவுல், "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 22 ) என்று அறிவுரை கூறுகின்றார். அதாவது பொல்லாங்கான ஒரு வழியை அல்ல, மாறாக பொல்லாங்காய்த் தோன்றும் அனைத்து வழிகளையும்விட்டு விலகிவிடவேண்டும் என்கின்றார். 

இதற்கு மாறாக, நன்மைசெய்வோமானால் நிச்சயம் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. அது உடனடியாக இல்லையானாலும் பிந்திய நிலையிலாகிலும் நமக்குக் கிடைக்கும். எனவேதான் "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6 : 9 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களுக்கும் நமது செயல்பாடுகளே காரணம். பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.  எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். வேத வார்த்தைகள் பொய்யானவையல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் இதனை கண்டுணர முடியும். எனவே, பொல்லாங்கான வழிகளை விட்டு விலகி அமைதியும் சமத்தானமும் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

No comments: