இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, October 07, 2024

தேவன் ஒவ்வொரு தலைமுடிக்கும் எண்கள் கொடுத்துள்ளார்

 'ஆதவன்' 💚அக்டோபர் 09, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,339


"உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம்  எண்ணப்பட்டிருக்கின்றன. ஆதலால், பயப்படாதிருங்கள்" ( மத்தேயு 10 : 30, 31 ) "But the very hairs of your head are all numbered. Fear ye not therefore, ..." ( Matthew 10 : 30, 31 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு தைரியமும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளைக் கூறுகின்றார். சிலவேளைகளில் நாம் நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளைக் கண்டு கலங்கிவிடுகின்றோம். இனி என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கின்றோம். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "பயப்படாதிருங்கள், உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம்  எண்ணப்பட்டிருக்கின்றன". என்று. 

அதாவது நமது தலையில் எத்தனை கோடி முடிகள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியாது ஆனால் தேவன் அவற்றை எண்ணிக் கணக்கு வைத்திருக்கின்றார். இந்த நாளில் இந்த முடி உதிரவேண்டும் என்பது தேவ சித்தமானால் அந்த முடி மட்டும்தான் உதிர்ந்து விழும். இந்த வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நாம் இரண்டு அர்த்தம் கூறலாம். ஒன்று நாம் வாசிக்கும் தமிழ் அர்த்தம். இன்னொன்று, நமது வீட்டிற்கு அரசு நிர்வாகம் எண்கள்  கொடுப்பதுபோல தேவன் ஒவ்வொரு தலைமுடிக்கும் எண்கள் கொடுத்துள்ளார் என்று பொருள். இதனையே, "the very hairs of your head are all numbered" என்று வாசிக்கின்றோம். 

நாம் அற்பமாக எண்ணும் தலைமுடிக்குக்கூட தேவன் எண்கள் கொடுத்துப் பராமரிக்கின்றார். அவரது சித்தமில்லாமல் குறிப்பிட்ட எண்  கொடுக்கப்பட்ட  முடி உதிராது. அப்படி நமது தலையிலுள்ள முடியைப் பராமரிப்பவர் நம்மைப் பராமரிக்காமல் இருப்பாரா? எனவே, பயப்படாதிருங்கள் என்கிறார் இயேசு கிறிஸ்து. இதுபோல வேதாகமத்தை வாசிக்கும்போது இன்றைய வசனத்தில் அடைக்கலான் குருவிகளைப்பற்றியும் அவர் கூறுவதைப் பார்க்கலாம். 

வானில் பறக்கும் ஒரு குருவிகூட தேவ சித்தமில்லாமல் கீழே விழாது என்கிறார். சாதாரண தலைமுடியையும் குருவியையும் பராமரித்துக் காப்பவர் நம்மைக் காப்பாற்றமாட்டாரா? குருவிகள் மட்டுமல்ல, நாம் காணும் தெரு நாய்களைப் பாருங்கள், அவற்றுக்கும் உணவு கிடைக்கின்றது; அவையும் உலகில் வாழ்கின்றன. எந்த நாயும் துன்பத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்வதில்லை.  எனவே அன்பானவர்களே, நாம் துன்பங்கள் பிரச்னைகளைக்கண்டு பயப்படவேண்டியதில்லை. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்கு தேவ பராமரிப்பு நிச்சயம் உண்டு. 

தேவனது பார்வையில் மனிதர்கள் குருவிகள், நாய்களைவிட மதிப்புமிக்கவர்கள். எனவே, இந்த வசனத்தை வாழ்வில் நாம் எப்போதும் நினைவில் கொண்டவர்களாக வாழும்போது நமக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். "என் தலைமுடியைக்கூட தேவன் அறிந்து வைத்திருக்கின்றார்" என்று எண்ணும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படாமல் போகாது. 

ஆனால் நாம் ஒருவருக்கு மட்டும் நிச்சயமாக பயப்படவேண்டும் என்கின்றார் இயேசு கிறிஸ்து:- "ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்." ( மத்தேயு 10 : 28 )  ஆம், மற்ற எதற்கும் பயப்படாமல் தேவனுக்கு மட்டும் பயப்படுகின்றவர்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

No comments: