Monday, October 28, 2024

துன்பத்தில் பொறுமை

 'ஆதவன்' 💚நவம்பர் 04, 2024. 💚திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,366


"இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்." ( யாக்கோபு 5 : 7 )

நமக்கு எதிராகச் செயல்படும் மக்களுக்கு; அதிகாரத்துக்கு  நாம் எதிர்த்து நிற்காமல் கர்த்தரது நியாயத்தீர்ப்பு வரும்வரை பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது இன்றைய தியான வசனம்.   எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதற்கு விவசாயியை உதாரணமாகக் காட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

விவசாயி விதையை விதைத்தவுடன் அதன் பலன் அவனுக்குக் கிடைக்காது. மாறாக அவன் பயிர் விளைவதற்கான பராமரிப்பைச் செய்யவேண்டும். அத்துடன் தேவனது பராமரிப்பும் தேவை. தேவனது பராமரிப்பையே முன்மாரி, பின்மாரி என்று கூறுகின்றார் யாக்கோபு. விதை விதைப்பதற்கு முன்பு மழை பெய்யவேண்டியது அவசியம். அதனையே முன்மாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல பயிர் வளரும்போது அதற்கு ஏற்றகாலத்தில் நீர் கிடைப்பதற்கும் மழை தேவை. அதுவே பின்மாரி. விவசாயி இந்த இரு மழையையும் எதிர்பார்த்துப்  பொறுமையாகக் காத்திருக்கின்றான்.   

இந்தப் பொறுமை அறுவடைநாளில் அவனுக்கு ஏற்ற பலனைத் தருகின்றது. இன்றைய தியான வசனத்தின் முன்வசனங்களில் அப்போஸ்தலராகிய யாக்கோபு செல்வந்தர்கள் தங்களுக்குக் கீழானவர்களுக்குச் செய்யும்  கேடுகளைக் குறித்துச் சொல்கின்றார். அதாவது "இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது." ( யாக்கோபு 5 : 4 ) என்கின்றார். மேலும் தொடர்ந்து, நீதிமானை அநியாயமாக ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து கொலை செய்தீர்கள் என்கின்றார்.  

இப்படி உங்களுக்கு எதிராகச் செய்யும்  கொடுமைகளை அனுபவிக்கும்போது நீங்கள் ஒரு விவசாயி பொறுமையாக முன்மாரிக்கும் பின்மாரிக்கும் காத்திருப்பதுபோல பொறுமையாகக் காத்திருங்கள் என்கின்றார் யாக்கோபு. "நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே." ( யாக்கோபு 5 : 8 ) ஆம், கர்த்தரின் நாள் சமீபமாக இருக்கின்றது. அவர் வந்து உங்களுக்கு ஏற்ற பலனைத் தருவார். 

அதற்காக எல்லாவற்றுக்கும் நாம் அடிமைகள்போல இருக்கவேண்டுமென்று பொருளல்ல, மாறாக நம்மால் சிலவேளைகளில் நமது எதிர்ப்பை வாயினால் சொல்லக்கூடிய நிலைகூட இல்லாமல்போகலாம். உதாரணமாக, இன்று பல வேளைகளில் நாம் அதிகாரம் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் பேசமுடியாதவர்களாக இருக்கின்றோம்.  இத்தகைய சூழ்நிலைகளில் நாம் மேலே பார்த்த விவசாயியைப்போல பொறுமையாக தேவன் செயல்பட காத்திருக்கவேண்டும். அப்படி நாம் காத்திருக்கும்போது தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். 

"இதோ, பொறுமையாய் இருந்தவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 ) அதாவது அப்படி நாம் காத்திருக்கும்போது யோபு பெற்றதைப்போல ஆசீர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு. பதில்பேச முடியாத நெருக்கடியான அநியாயத்துக்கு எதிராகப்  பொறுமையாகக் காத்திருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

No comments: