Friday, October 18, 2024

லீதியாள் கற்றுத்தரும் பாடம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 21, 2024. திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,352


"தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 14 ) 

அப்போஸ்தலரான பவுல் பிலிப்பி நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கச் சென்றபோது நடந்த இந்தச் சம்பவம் நமக்கு ஒரு உண்மையினைப் புரியவைக்கின்றது. அதாவது நற்செய்தியைக் காதால் கேட்பது என்பது வேறு அதனை உள்ளத்தில் ஏற்றுக்கொள்வது என்பது வேறு. நாம் நூற்றுக்கணக்கான பிரசங்கங்களைக் கேட்கலாம், நல்ல ஆவிக்குரிய கட்டுரைகளையும் தியானங்களையும் வாசிக்கலாம். ஆனால் அவை நமது இருதயத்தில் பதிந்து மனமாறுதல் ஏற்படவேண்டுமானால் தேவன் நமது இருதயத்தில் செயல்புரிய இடம்கொடுக்கவேண்டும்.  

இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனம் கூறுகின்றது, "ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்." (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 13 ) என்று. அதாவது அங்கு பல பெண்கள் பவுலின் பிரசங்கத்தைக் கேட்கக் கூடியிருந்தனர்.  அவர்கள் எல்லோரும் ஏனோதானோ மனப்போக்கில் பிரசங்கத்தைக் கேட்டனர். ஆனால் லீதியாள் உள்ளான ஆர்வத்துடன் பிரசங்கத்தைக் கேட்டாள். எனவே தேவன் அவளது இருதயத்தைத் திறந்தார்.

இன்று பல ஆலயங்களில் விசுவாசிகள் பிரசங்கநேரத்தை ஏதோ பொழுதுபோக்கும் நேரமாக எண்ணுகின்றனர். சிலர் பிரசங்கம் முடிந்தபின்னர் நாம் ஆலயம் சென்றால் போதும் என எண்ணி காலதாமதமாக ஆலயத்துக்கு வருகின்றனர். அதாவது அவர்களுக்கு பிரசங்க நேரத்தைவிட சடங்காச்சார வழிபாடுகள் மட்டுமே மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன. 

அன்பானவர்களே, தேவ வார்த்தைகள் நமது இருதயத்தில் நுழையாமல் நம்மில் மாற்றம் ஏற்படாது. ஏற்கெனவே யாரோ எழுதி அச்சிடப்பட்ட ஜெபங்களைப்பார்த்து வாசிப்பது  போதும் என பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவை தேவனை அறிய உதவாது. லீதியாளைப்போல தேவ வார்த்தைகள் நம்முள் இறங்க அனுமதித்தால் மட்டுமே நாம் தேவனை அறிய முடியும். 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 10, 11 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே, ஆன்மீக காரியங்களில் ஈடுபடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நல்ல பிரசங்கங்களை காதுகொடுத்துக் கேட்டு இருதயத்தில் பதிய வைப்போம்; வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு கருத்தாக வாசிப்போம்; லீதியாளைப்போல் தேவ வார்த்தைகள் நம்முள் செயல்பட அனுமதிப்போம். அப்போது தேவன் நமது இருதயத்தைத் திறந்து மேலான ஆவிக்குரிய சத்தியங்களைப் புரியவைப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: