இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, October 02, 2024

பயப்படாதே

 'ஆதவன்' அக்டோபர் 04, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,334

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

நமது நாட்டின் பிரதமர் நமது கையைப் பிடித்து இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று நேரடியாகக் கூறுவாரானால் அது நமக்கு எத்தனை பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்!!! ஆனால் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தைக் கூறுபவர் இந்த அண்டசராசரங்களையும்  படைத்து ஆளும் சர்வ வல்லவரான தேவனாகிய கர்த்தர். அப்படியானால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருக்கவேண்டும்?

ஆனால் இந்த வார்த்தைகளை தேவனாகிய கர்த்தர் "பயப்படாதே" என்று ஒருமுறையல்ல பல முறை நம்மை நோக்கிக் கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." ( ஏசாயா 41 : 14 )

இன்று நமது குடும்பத்தில், நமது உறவினர்கள் மத்தியில்  நாம் அற்பமான பூச்சி போன்று எண்ணப்படலாம். அதாவது அவர்கள் நம்மை கணக்கில் கொள்ளாமல் போகலாம். ஆனால் நமது ஆண்டவர் நம்மை நோக்கிக் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்." அதுபோல,  நமது நாட்டில் நாம் சிறுபான்மையினரான கூட்டமாக இருக்கலாம். நம்மைப்பார்த்து அவர் கூறுகின்றார், "இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று.  

ஆம் அன்பானவர்களே, தேவனது மக்களாகிய நாம் அவரில் திடன்கொண்டு வாழவும் அவரது பலத்தை நமது வாழ்வில் அனுபவிக்கவும் ஏசாயா 41 முதல் 43 வரையிலான அதிகாரங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களை தேவன் நமக்குத் தந்துள்ளார். இவை வெற்று  வார்த்தைகளல்ல, நமது பரலோக தகப்பன் நமக்கு அளிக்கும் உறுதிமொழிகள். வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும், சோகங்களும், இழப்புக்களும் ஏற்படும்போது இந்த அதிகாரங்களை தேவ அன்போடு வாசித்துப்பாருங்கள். 

இந்த வசனங்களே பல புனிதர்களை வாழ்வில் திடன்கொண்டு வாழ உதவியவை. இன்று நமக்கும் இவையே ஆறுதலும் தேறுதலுமானவைகளாக இருக்கின்றன. நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாழ்வில் கண்டுகொண்ட ஆரம்ப நாட்களில் இந்த வசனங்களை வாசிக்கும்போது அவை தேவனே பேசிய  வாக்குத்தத்தங்களாக  இருப்பதை ஆவியில் உணர்ந்தேன். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது உண்மையிலேயே ஆவியில் புத்துணர்வு அடைவீர்களென்றால் தேவன் அதனை உங்களுக்கும்   வாக்களிக்கிறார் என்று பொருள். 

விசுவாசத்தோடு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் இந்த அதிகாரங்களை ஜெபத்துடன் வாசியுங்கள். கர்த்தர் உங்கள் விசுவாசத்தைக் கனம் பண்ணுவார். ஆம், உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: