Sunday, October 06, 2024

அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து.....

 'ஆதவன்' அக்டோபர் 07, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,337


"அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்".( சங்கீதம் 18 : 23 )

கர்த்தர் தாவீதை அவரது எல்லா எதிரிகளின் கைகளுக்கும் சவுலின் கைகளுக்கும் தப்புவித்து காத்தபோது தாவீது பாடிய சங்கீதம் என்று இன்றைய தியான வசனம் இடம்பெறும் இந்தச் சங்கீதத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இப்படித் துர்குணத்துக்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டதால் என்ன பலன் கிடைத்தது என்று பின்வருமாறு அவர் கூறுகின்றார்:-

"ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்." ( சங்கீதம் 18 : 24 ) ஆம் அன்பானவர்களே, பல வேளைகளில் நாம் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு நமது தகாத செயல்களே தடையான காரணமாக அமைந்துவிடுகின்றன.  

தாவீதுக்கு இருந்த எதிரிகள் அதிகம். அவரைக்கொல்ல சவுல் மட்டுமல்ல அவரது சொந்த மகனே முயன்றுகொண்டிருந்தான். இது தவிர, தாவீதைக் கொன்று சவுலிடம் நன்மதிப்பைப் பெறவேண்டுமென்று சிலர் விரும்பினர். ஆனால் கர்த்தர் அவரை எவரிடமும் ஒப்படைக்காமல் காத்துக்கொண்டு மொத்த இஸ்ரவேலரின்மீதும் ராஜாவாக்கினார். 

இன்று தாவீதைப்போல நேரடி எதிரிகள் நமக்கு இல்லாமலிருக்கலாம், ஆனால் நம்மை நமது உத்தமத்திலிருந்து விலகச் செய்யும் பல்வேறு எதிரிகள் உண்டு. நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் சூழ்நிலைகள் நமக்கு எதிரிகளாக நிற்பதுண்டு. நாம் பணிசெய்யும் இடங்களில் நாம் தவறுசெய்யும் சூழ்நிலைகள் உண்டு. இந்தச் சூழ்நிலைகளில் நாம் தாவீதைப்போல உத்தமனாயிருந்து, துர்க்குணத்துக்கு நம்மை விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

அப்படி வாழ்வோமானால் கர்த்தர் நமது நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற நமது  கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் நமக்குப் பதிலளிப்பார். ஆம், வெறும் ஜெபங்களும் வேத வாசிப்புகளும் உபவாசங்களும் ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும் முக்கியமல்ல. இன்று பலரும் தங்களுக்குத் துன்பங்கள் தொடரும்போது தங்களது மேற்படி சில பக்திச் செயல்பாடுகளையே எடுத்துக்கூறி புலம்புகின்றனர். தேவனை நோக்கி முறுமுறுகின்றனர். 

முதலில் தேவனுக்குமுன் உத்தமர்களாக வாழ முயற்சியெடுப்போம். துர்குணங்களுக்கு நம்மை விலக்கிக் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                 

No comments: