'ஆதவன்' 💚அக்டோபர் 16, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,346
"கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்." ( கலாத்தியர் 5 : 6 )
விருத்தசேதனம் என்பது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் யூதர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான ஒரு கட்டளை. யூதர்கள் இதனை நிறைவேற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டினர்.
ஆனால் புதியஏற்பாட்டு முறைமையின்படி விருத்தசேதன கட்டளை மட்டுமல்ல, எந்தக் கட்டளைகளையையும் அப்படியே நிறைவேற்றி விடுவதால் மட்டும் நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியாது. காரணம், நியாயப்பிரமாணம் (கட்டளைகள்) எது பாவம் எது பாவமில்லை எனும் அறிவை மட்டுமே நமக்குக் கொடுக்கும். அதனை நாம் எந்த மன நிலையில் நிறைவேற்றுகின்றோம் என்பதே தேவனுக்கு முக்கியம்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." ( ரோமர் 3 : 20 ) என்று கூறுகின்றார்.
அதாவது, தேவன்மேல் பூரண விசுவாசம் வரும்போது நமது செயல்பாடுகள் மெய்யான அன்பு கலந்த செயல்பாடுகளாக அமையும். அப்படி அன்புடன் செய்யும் செயல்பாடுகளே முக்கியமேத்தவிர வெறுமனே கட்டளைகளைக் கடைபிடிப்பது தேவனுக்குமுன் நம்மை நீதிமானாக்க மாட்டாது.
இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். நான் ஜெர்மனி நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மிகச் சரியாகப் பின்பற்றுவதைக் கண்டு வியப்புற்றேன். நடு இரவில் சாலைகள் வெறுமனே கிடந்தாலும் சிகப்பு சிக்னல் மாறி பச்சை விளக்கு எரிவதுவரை வாகனத்தை இயக்காமல் அமைதியாகக் காத்திருந்து வாகனத்தை ஓட்டுவார்கள். அதனைப் பார்த்து, "இந்த மனிதர்கள் மிக நல்லவர்கள்" என்று எண்ணினேன்.
ஆனால் எனது மருமகன் கூறினார், "அப்படியல்ல, இவர்கள் எல்லோரும் நம்மைபோன்றவர்கள்தான். இங்கு சாலை விதிகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறினால் கேமராவில் அது பதிவாகி அடுத்த நொடியே நமது வங்கிக்கணக்கிலிருந்து அபராதம் வசூலிக்கப்படும். மட்டுமல்ல, தொடர்ந்து இப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்பட்டால் நமது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும். மீண்டும் அதனை புதுப்பிப்பது கடினம். இங்கு சொந்த வாகனம் இல்லாமல் நாம் எதுவும் செய்யமுடியாது. எனவேதான் சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றுகின்றனர்"
ஆம் அன்பானவர்களே, அன்பில்லாமல் நியாயப்பிரமாண கட்டளைகளைப் பின்பற்றுவது இவர்கள் சாலை விதியை சட்டத்துக்குப் பயந்து மதிப்பது போன்றதுதான். முதலில் நமது உள்ளார்ந்த மனம் மாறுதல் அடையவேண்டும். நமது உள்ளமானது தேவனுக்கு ஏற்ற இதயமாக இருக்குமானால் தேவ அன்பினால் நாம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். இப்படி அன்போடு தேவனுக்கு ஏற்ற செயல்களைச் செய்வதையே தேவன் விரும்புகின்றார். எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்." விருத்த சேதன கட்டளை மட்டுமல்ல; அனைத்துக் கட்டளைகளுக்கும் இதுவே அடிப்படை.
"நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) எனவே தேவ அன்போடு கட்டளைகளுக்குக் கீழ்படிவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment