Sunday, October 06, 2024

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்

 'ஆதவன்' அக்டோபர் 08, 2024. செவ்வாய்க்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,338

"தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்." ( சங்கீதம் 18 : 28 )

நேற்றைய வேதாகமத் தியானத்தின்  தொடர்ச்சியே இன்றைய தியானம். "அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்".( சங்கீதம் 18 : 23 ) என்று நேற்று தியானித்தோம். அப்படி தாவீது உத்தமனாகத் தன்னைக் காத்துக்கொண்டதால் தேவனிடம் தைரியமாக முறையிட்டுத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். 

"தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் என்று மட்டும் மன்றாடாமல்  தொடர்ந்து,  "என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்." என்று நம்பிக்கை அறிக்கையும்  செய்கின்றார் அவர். காரணம், நான் தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருந்து என் துர்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் என்கிறார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கை ஒளியிழந்துபோய் இருப்பதற்கு ஒருவேளை நமது துர்க்குணங்கள் காரணமாக இருக்கலாம். அந்தக் குணங்கள் மாறவேண்டும். நமது குணங்கள் மாறவேண்டுமானால் நமக்குள் ஒளி வரவேண்டியது அவசியம். நமது சொந்த முயற்சியால் நமக்குள் ஒளி வராது. பின், அந்த ஒளி எங்கிருக்கிறது? அந்த ஒளி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். 

மேலும், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்த மனிதனையும் எனும்போது ஜாதி, மதம், இனங்களைக்கடந்து மக்களை ஒளியடையச் செய்பவர் என்று பொருள். 

அந்த ஒளி நமக்குள் வரும்போது நாமும் ஒளியடைவதோடு புது பெலனும் பெறுகின்றோம். காரணம், அவரே "வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்." ( சங்கீதம் 18 : 34 ) என்று கூறுகின்றார் தாவீது. வெண்கலம் மிக உறுதியான ஒரு உலோகம். அந்த வெண்கலத்தால்  செய்யப்பட்ட வில்லை நமது கைகள் வளைக்கும் அளவுக்கு  பெலன் நமக்கு உண்டாகும்.  

ஆம், இவை அனைத்துக்கும் மூலம் தேவனுக்குமுன் நாம்  உத்தமனாயிருந்து,  துர்க்குணத்துக்கு நம்மை  விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டியதே. அப்படி நம்மைக் காத்துக்கொள்ளும்போது முதலில் நமது கைகளின் சுத்தத்துக்கு ஏற்ப நமக்குத் தேவன் பலனளிப்பார்; நமது வாழ்க்கையின் இருளை மாற்றுவார், அனைத்துக்கும் மேலாக நமக்குப் புது பெலனைத் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

No comments: