Tuesday, October 22, 2024

மேலான இரகசியம்

 'ஆதவன்' அக்டோபர் 29, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,360

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )

தேவன் தனக்கு வெளிப்படுத்தின இரகசியம் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். முற்காலங்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்கள் கடவுளை ஆலயங்களில் தேடி அலைகின்றனர். ஆலயங்களில் மட்டுமே தேவன் தங்கியிருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் சில புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுவாக எல்லா மதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது. 


அன்று இஸ்ரவேலர் எருசலேம் தேவாலயத்தை பெரிதாக மதித்து அங்குதான் தேவன் இருக்கின்றார் என்று நம்பினர். இன்றும் கிறிஸ்தவர்களிலும் பலர் இப்படி நம்புவதால்தான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்கின்றனர். இதுபோல, தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலர் குறிப்பிட்ட ஊழியர்களிடம்தான் தேவன் இருக்கின்றார், அவரிடம் சென்றால் நமக்குப் பதில் கிடைக்கும்; விடுதலை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.  

ஆனால் தேவனை வெளியில் தேடி அலையவேண்டாம் அவர் வெளியில் எங்கும் இல்லை மாறாக  ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றார் என்பதே பவுல் அப்போஸ்தலருக்குத் தேவன் வெளிப்படுத்தின இரகசியம். ஆம், "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." கிறிஸ்துவானவர் வெறுமனே நம்முள் இருக்கவில்லை, மாறாக எதிர்கால மகிமையான வாழ்க்கையைத் தருபவராக, அந்த நம்பிக்கையை நமக்கு ஊட்டுபவராக  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றார். 

இதனை ஒவ்வொருவரும் அறிய அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பு. ஆனால் இன்று ஊழியர்கள் ஏதேதோ அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு ஆசீர்வாதங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய அவர்  மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வர வழிகாட்டுவதே மெய்யான சுவிசேஷ அறிவிப்பு. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று. 

ஆம் அன்பானவர்களே, தேவன் வெளியில் எங்கும் இல்லை. ஆலயம் என்பது நாம் அனைவரும்கூடி தேவனை ஆராதிக்கும் இடம் மட்டுமே. அங்கு மட்டுமே தேவன் இருக்கின்றார் என்று நம்பி கோவில் கோவிலாக அலைவதைவிட நமக்குள் இருக்கும் அவரை நாம் நமது பரிசுத்தமான வாழ்க்கையால் மகிமைப்படுத்தவேண்டும். மட்டுமல்ல நமது அடுத்திருப்பவர் உள்ளேயும் அதே தேவன் இருக்கின்றார் எனும் உணர்வு நமக்கு வேண்டும். இந்த உணர்வு இல்லாததால்தான் பக்தியுடன் ஆராதனை மற்றும் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பலர் ஆராதனை முடிந்து வெளியில் வந்ததும் மற்றவர்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். 

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கவேண்டுமானால் முதலில் நமது பாவங்கள் அவரது இரத்தத்தால் கழுவப்படவேண்டும். எனவே முழு மனதுடன் அவரிடம் பாவ அறிக்கைசெய்வோம்.  பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுவோம். அப்போது அப்போஸ்தலரான பவுல் கூறும் இந்த இரகசியத்தை நாமும் கண்டுகொள்வோம். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வாசம்பண்ணுவார். 

சிந்தனை வசனம்:- "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                            

No comments: