'ஆதவன்' 💚அக்டோபர் 12, 2025. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,342
"நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்." (யோவான் 17:26)
சுவிசேஷம் அறிவிக்கப்படுவதன் முக்கிய நோக்கத்தை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். அதாவது, பிதாவான தேவன் இயேசு கிறிஸ்துவின்மேல் வைத்திருந்த அன்பை அவர் நம்மேலும் வைக்கவேண்டும். அது எப்போது முடியும்? கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது மட்டுமே. கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது பிதாவான தேவன் கிறிஸ்துவை அன்பு செய்ததுபோல நம்மையும் அன்பு செய்வார்.
இதனையே இயேசு கிறிஸ்து, "நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும் படிக்கும், நானும் அவர்களிலிருக்கும் படிக்கும்," என்கின்றார். அதற்காகவே அவர் நமக்குத் பிதாவாகிய தேவனை வெளிப்படுத்தினார். "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." ( யோவான் 1 : 18 ) என்று வாசிக்கின்றோம். இப்படி பிதாவை நமக்குகிறிஸ்து வெளிப்படுத்தக் காரணம் பிதா நம்மையும் இயேசுவை அன்புசெய்ததுபோல அன்புசெய்யவேண்டும் என்பதற்காகவே.
"இன்னமும் தெரியப்படுத்துவேன்" என்று இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகின்றார். ஆம், இப்போதும் தனது ஊழியர்கள்மூலம் கிறிஸ்துவிடம் பிதா வைத்த அதே அன்பு நம்மிடத்திலிருக்கும்படிக்கும் கிறிஸ்துவும் நம்முள் இருக்கும்படிக்கும் சுவிஷேச அறிவிப்புகள் மூலம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார். எனவேதான் பிதாவையும் கிறிஸ்துவையும் அறிவிக்காமல் வெறும் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே போதிக்கும் ஊழியங்கள் போலியானவை என்று நாம் சொல்லுகின்றோம்.
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். எனவே நித்திய ஜீவனுக்கு நேராக நம்மை வழிநடத்தும் ஊழியர்களே மெய்யானஊழியர்கள். அவர்கள் காட்டும் வழியில் செல்லும்போது மட்டுமே நமக்குள் கிறிஸ்து வருவதையும் அதனால் பிதாவான தேவன் நம்மை அன்பு செய்வதையும் நாம் கண்டு உணரலாம்.
ஆனால் இன்று இத்தகைய ஊழியர்கள் குறைந்துபோய் சுவிசேஷ அறிவிப்பு பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலும் ஆசீர்வாதம் என்பது உலகச் செழுமையைப் பெறுவது என்பதாகவும் மாறிவிட்டது. எனவே, நாம் ஞானமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். மெய்யான தேவனையும் மெய்யான ஆசீர்வாதத்தையும் அறியும் ஆர்வத்துடன் வேதாகமத்தை வாசிப்போமானால் தேவன் சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்தித் தருவார்.
அப்போது பிதா கிறிஸ்துவிடம் வைத்த அன்பு நம்மிடத்திலுமிலிருக்கும், கிறிஸ்துவும் நமக்குள் இருப்பார். சத்தியத்தை அறிந்த நாமும் இதனை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக மாறுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment