இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, October 08, 2024

தொழுவத்தை மறந்த ஆடுகள்

 'ஆதவன்' 💚அக்டோபர் 10, 2024. வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,340

"......அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்." ( மாற்கு 6 : 34 )

மனிதர்களாகிய  நாமே தேவனது ஆடுகள். ஆடுகளுக்கு உணவு தேவைப்படுவதுபோல இந்த மக்களுக்கும் ஆன்மீக உணவு தேவைப்படுகின்றது. அந்த உணவையே இயேசு கிறிஸ்து மனதுருகி தனது உபதேசத்தால் மக்களுக்குக் கொடுத்தார். "அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்" என்று இன்றைய தியான வசனம் கூறுவது இதனைத்தான். அதாவது  ஆடுகள் உணவில்லாமல் தவிப்பதால் அவர் அவைகளுக்கு உணவளித்தார்.  

இன்றும், உணவு கிடைக்காமல் உணவுக்காக ஆடுகள்  அலையக்கூடாது என்பதற்காக ஊழியர்களை ஏற்படுத்தியுள்ளார்.      ஆனால் பல ஊழியர்கள் ஆடுகளுக்குப் போதிய உணவளிக்கவில்லை; அவைகளுக்கு ஏற்ற மேய்ப்பர்களும் இல்லை. இன்று தேவ வார்த்தைகளைப் போதிக்கப்  பல ஊழியர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆடுகளுக்கு ஏற்ற உணவைக் கொடுப்பதில்லை. அதாவது, தேவ வார்த்தைகளைக் கொடுக்காமல் தங்கள் மனதின் எண்ணங்களை உபதேசமாகப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஆடுகள் பசியால் வாடி இரைக்காக மனச் சமாதானமில்லாமல் அலைந்து சபை சபையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. 

எரேமியா தீர்க்கத்தரிசியின் காலத்திலும் இதுதான் நடந்தது. இதனையே அவர்,  "என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 ) என்கின்றார்.

"தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." என்று எரேமியா கூறுவது முற்றிலும் உண்மையாகும். அந்தத் தொழுவம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. (யோவான் 10:1) சிதறி மலை மலையாக (சபை சபையாக) உணவுக்கு ஆடுகள் அலையக் காரணம் அவைகள் தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டதுதான். ஆம் அன்பானவர்களே, மெய்யான சமாதானம் நமக்கு இல்லையானால் காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாமல் வாழ்வதுதான் காரணமேத்  தவிர சபைகளை மாற்றுவதல்ல தீர்வு. கிறிஸ்துவைத்தவிர வேறு எவரும் நமக்கு ஏற்ற உணவளிக்க முடியாது. 

தொழுவத்தையும், பிரதான மேய்ப்பனையும் அறியும்போது மட்டுமே நமக்கு மனச் சமாதானம் கிடைக்கும். காரணம், அவரிடம் மட்டுமே ஆடுகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கும். அந்த உணவினை எல்லா ஆடுகளும் கண்டுகொள்ளும் காலம் வரும். ஆம், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) என்கிறார் இயேசு கிறிஸ்து. 

நாம் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருக்கவேண்டாம். சபை சபையாக ஓடவேண்டாம். மனதுருகி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உபதேசிக்கும் வார்த்தைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: