இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, October 03, 2024

நன்மையும் தீமையும் உன்னதமானவரிடமிருந்தே

 'ஆதவன்' அக்டோபர் 06, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,336


"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 )

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் தீமைகளும் தேவனுடைய கரத்திலிருந்தே வருகின்றன. "ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?" ( புலம்பல் 3 : 37, 38 ) என்று வாசிக்கின்றோம். இன்று நாம் ஒருவேளை தாழ்மையான நிலையில் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் ஆளுகிறவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும்.

அதுபோலவே ஒருவர் மிக உயர்ந்த நிலையில் இருக்கலாம் அவரை ஒரே நொடியில் தாழ்த்திட தேவனால் கூடும். எனவே நாம் எந்த நிலையில் இருந்தாலும்  அவருக்கு அஞ்சி அடங்கி வாழவேண்டியது அவசியம்.  இதனை அன்னை மரியாள் உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 51 - 53 ) என்று.

ஆனால் பெரிய செல்வ நிலையில் இருக்கும் பலர் இந்தச் சத்தியத்தை உணர்வதில்லை. தாங்கள் எப்போதுமே இப்போது இருப்பதுபோல சுகஜீவிகளாக வாழ்வோம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதனால் மற்றவர்களை அற்பமாக எண்ணி வாழ்கின்றனர்.  எனவே தங்களது வாழ்வில் சிறிய சறுக்கல் வந்துவிட்டாலும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை எனும் விபரீத முடிவைத் தேடிக்கொள்கின்றனர். 

பலர்  உழைப்பே உயர்வு என்று கூறி உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்; தேவனைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் இந்த உலகத்தில் நாம் பார்க்கின்றோம் கடுமையாக உழைக்கும் எல்லோரும் முன்னேறிவிடுவதில்லை. கடும் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் பலர் உழைத்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.  ஆனால் அப்படி உழைப்பதற்கு உடலில் ஆரோக்கியம் வேண்டும். அதனைத் தேவன்தான் கொடுக்க முடியும்.  மட்டுமல்ல இப்படிக் கடினமாக உழைக்காத பலர் எளிதில் முன்னேறிவிடுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, ஐசுவரியமும் கனமும் தேவனாயிலேயே வருகின்றது. அவரே  எல்லாவற்றையும் ஆளுகிறவர்; அவரது கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அவரது கரத்தினால் ஆகும். எனவே நாம் நம்மை அவரது கிருபைக்கு ஒப்புக்கொடுத்து மனத்தாழ்மையோடு  வாழ்வோம்.  அவரது வல்லமை மிக்க கரமே ஏற்ற காலத்தில் நமக்கு வேண்டிய உயர்வினைக் கொண்டுவரும். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

தேவனைக் குறித்து நிதானமாய்ப் பேசுவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 05, 2024. 💚சனிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,335


"என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 )

பல்வேறு துன்பங்களை வாழ்வில் அனுபவித்த யோபுவைப் போல நம்மில் பலரும் அனுபவிக்கவில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் யோபு தேவனைப் பழித்துப் பேசவில்லை. அவரது மனைவி  தேவன்மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தைக் கண்டு எரிச்சலடைந்து, அவரிடம் இன்னும் நீர் தேவனை நம்பிக்கொண்டிருக்கின்றீரோ? "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" என்றாள். அதாவது, "தேவனைப் பழித்துக் கூறிவிட்டு செத்துத்  தொலையும்" என்றாள். 

ஆனால் யோபுவோ,  "நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." ( யோபு 2 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்." ( யோபு 2 : 11 )

இந்த நண்பர்கள் யோபுவோடு நடத்திய உரையாடல்தான் யோபு நூலில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நண்பர்கள் தேவனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நல்ல கருத்துக்கள்தான். பல தேவ சத்தியங்களை இந்த நண்பர்கள் பேசுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இவர்கள் மூவருமே யோபுவின் துன்பத்துக்கு அவரது ஏதோ ஒரு தகாத செயல்தான் காரணம் என்பதுபோல பேசினர். மட்டுமல்ல, யோபு பேசியதுபோல தாழ்மை அவர்களிடம் இல்லை. தங்களைப் பெரிய நீதிமான்கள்போலக் காட்டிக்கொண்டனர்.

எனவே, கர்த்தர் தேமானியனான எலிப்பாஸ் என்பவனை நோக்கி, "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 ) என்று கூறுகின்றார். 

இன்றும் துன்பங்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லச்  செல்லும் பலர், யோபுவின் நண்பர்கள் பேசியதைப்போல தேவையில்லாத வார்த்தைகளைப்  பேசுவதைக் காணலாம். ஒருவருக்கு நோயோ, துன்பங்களோ வருவதற்கு அவர்களது வாழ்க்கைத் தவறுகளே எப்போதும் காரணமாய் இருப்பதில்லை. எனவே பிறருக்கு ஆறுதல் சொல்லக் சென்று நாம் பாவத்தில் சிக்கித் தேவ கோபத்தைப் பெற்றுவிடக்கூடாது. 

அப்படிப் பேசுவோமானால், "நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." என்று தேவன் நம்மைக் கடிந்துகொள்வார். தேவனது இரகசிய திட்டங்கள் நமக்குத் தெரியாததால் அமைதலாக பிறருக்கு ஆறுதல் கூறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Wednesday, October 02, 2024

பயப்படாதே

 'ஆதவன்' அக்டோபர் 04, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,334

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

நமது நாட்டின் பிரதமர் நமது கையைப் பிடித்து இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று நேரடியாகக் கூறுவாரானால் அது நமக்கு எத்தனை பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்!!! ஆனால் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தைக் கூறுபவர் இந்த அண்டசராசரங்களையும்  படைத்து ஆளும் சர்வ வல்லவரான தேவனாகிய கர்த்தர். அப்படியானால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருக்கவேண்டும்?

ஆனால் இந்த வார்த்தைகளை தேவனாகிய கர்த்தர் "பயப்படாதே" என்று ஒருமுறையல்ல பல முறை நம்மை நோக்கிக் கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." ( ஏசாயா 41 : 14 )

இன்று நமது குடும்பத்தில், நமது உறவினர்கள் மத்தியில்  நாம் அற்பமான பூச்சி போன்று எண்ணப்படலாம். அதாவது அவர்கள் நம்மை கணக்கில் கொள்ளாமல் போகலாம். ஆனால் நமது ஆண்டவர் நம்மை நோக்கிக் கூறுகின்றார், "யாக்கோபு என்னும் பூச்சியே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்." அதுபோல,  நமது நாட்டில் நாம் சிறுபான்மையினரான கூட்டமாக இருக்கலாம். நம்மைப்பார்த்து அவர் கூறுகின்றார், "இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று.  

ஆம் அன்பானவர்களே, தேவனது மக்களாகிய நாம் அவரில் திடன்கொண்டு வாழவும் அவரது பலத்தை நமது வாழ்வில் அனுபவிக்கவும் ஏசாயா 41 முதல் 43 வரையிலான அதிகாரங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களை தேவன் நமக்குத் தந்துள்ளார். இவை வெற்று  வார்த்தைகளல்ல, நமது பரலோக தகப்பன் நமக்கு அளிக்கும் உறுதிமொழிகள். வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும், சோகங்களும், இழப்புக்களும் ஏற்படும்போது இந்த அதிகாரங்களை தேவ அன்போடு வாசித்துப்பாருங்கள். 

இந்த வசனங்களே பல புனிதர்களை வாழ்வில் திடன்கொண்டு வாழ உதவியவை. இன்று நமக்கும் இவையே ஆறுதலும் தேறுதலுமானவைகளாக இருக்கின்றன. நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாழ்வில் கண்டுகொண்ட ஆரம்ப நாட்களில் இந்த வசனங்களை வாசிக்கும்போது அவை தேவனே பேசிய  வாக்குத்தத்தங்களாக  இருப்பதை ஆவியில் உணர்ந்தேன். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது உண்மையிலேயே ஆவியில் புத்துணர்வு அடைவீர்களென்றால் தேவன் அதனை உங்களுக்கும்   வாக்களிக்கிறார் என்று பொருள். 

விசுவாசத்தோடு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் இந்த அதிகாரங்களை ஜெபத்துடன் வாசியுங்கள். கர்த்தர் உங்கள் விசுவாசத்தைக் கனம் பண்ணுவார். ஆம், உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 03, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,333

"ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்." ( ஏசாயா 9 : 13 )

நமது தேவனாகிய ஆண்டவர் அன்பும் கிருபையும் நிறைந்தவராக இருந்தாலும் அவர் பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார். நாம் நமது தவறான வழிகளை விட்டு அவரிடம் திரும்பவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக சிலவேளைகளில் நமக்குச் சில தண்டனைகளைத் தந்து  நம்மைத் திருத்த முயலுகின்றார்.  ஆனாலும் மனிதர்கள் அவரது தண்டனையை உணராமலும் மனம் திரும்பாமலும் இருக்கின்றனர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,  "ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்" என்று தேவன் கூறுவதாக வாசிக்கின்றோம். இஸ்ரவேலரைத் தேவன் இப்படியேத் தண்டித்தார். இதனை இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் தேவன் கூறுகின்றார்,  "முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது." ( ஏசாயா 9 : 12 ) என்று.

ஆம் அன்பானவர்களே, தேவன் தரும் தண்டனையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாம் நமது பாவங்களிலேயே வாழ்வோமானால் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கும். ஆனால் இதனை அறியாமல் பலரும், "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், உபவாசிக்கிறேன், தர்மங்கள் செய்கிறேன் .....ஆனாலும் தேவன் என்னைக் கண்டுகொள்ளவுமில்லை, எனக்கு நன்மை செய்யவுமில்லை" என்று தேவனுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். 

அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் பின்வருமாறு பதிலளிக்கிறார்:-".............நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்". (உபாகமம் 13:17,18)

எனவே அன்பானவர்களே, துன்பங்கள் பிரச்சனைகள் தொடரும்போது தேவன்மேல் கோபம்கொள்ளாமல், அவரைக் குற்றப்படுத்தாமல்  நமது பாவங்களையும் மீறுதல்களையும் உணர்ந்து அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம். ஏனெனில், "சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்." ( சகரியா 1 : 3 )

"நம்மை அடிக்கிறவரிடத்தில் திரும்புவோம், சேனைகளின் கர்த்தரைத் தேடுவோம்."

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்