Tuesday, August 13, 2024

புத்தியீனமான தர்க்கங்களை விட்டு விலகுவோம்.

'ஆதவன்' ஆகஸ்ட் 20, 2025. செவ்வாய்க்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,289   


"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் முக்கியமான பிரச்னை தேவையில்லாத தர்க்கங்கள். பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரும் தேவையில்லாமல் ஒருவரையொருவர் குறைகூறுவதும் நாம் அறியாத ஒன்றல்ல. இவைகள் பிரயோஜனமில்லாதவை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

திருச்சபைகளுக்குள் இன்று, "நாங்கள்தான் கிறிஸ்து உருவாக்கிய ஆதி திருச்சபை, எங்களிடம்தான் ஆரம்பமுதலான வரலாறு உள்ளது" என்றும், "நாங்கள்தான் தப்பறைகள் எதுவும் இல்லாமல் சீர்திருத்தப்பட்ட சீர்திருத்தச் திருச்சபை" என்றும், "நாங்கள்தான் ஆவிக்குரிய ஆராதனை செய்யும் ஆவிக்குரிய சபை" என்றும் வெற்றுப் பெருமை பேசும் நிலை உள்ளது மறுக்கமுடியாதது. இவைகளையே "புத்தியீனமான தர்க்கங்கள்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

மெய்யான கிறிஸ்தவன் இப்படிச் சபை பாகுபாடுபார்த்து சண்டைபோடுபவனாக இருக்கமாட்டான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களது  வாழ்வில் சொந்த இரட்சகராக அறியாமல் இருந்துகொண்டு இப்படித் தர்க்கம் செய்வது அறிவீனம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார். 

பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் இந்த வசனம், "நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை." (1 கொரிந்தியர் 2:2) என்று உள்ளது. 

அதாவது, பாரம்பரியங்களோ, வம்சவரலாறுகளோ, தாங்கள் சார்ந்துள்ள சபைப் பிரிவினைக்குறித்த பெருமைகளோ பிரயோஜனமில்லாதவை. சிலுவையில் அறையப்பட்ட அவரைத்தவிர நாம் வேறு எதனையும் அறியவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்துவிட்டு வெறும் சபை பெருமையோடு இருப்பது அறிவீனமல்லவா? இறுதித் தீர்ப்புநாளில்  கிறிஸ்து நம்மிடம், "நீ எந்தச் சபையைச் சார்ந்த்தவன்? " என்று கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனாலும் இன்று சபைகளின் போதகர்களும் குருக்களும் இந்த அறிவில்லாமல்தான் இருக்கின்றார்கள். 

கிறிஸ்துவை அறியாத இறையியல் படிப்போ, பாரம்பரியங்களோ வீணானவை. மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நாம் நினைக்கவும் வேண்டாம்.  அப்படி அறிய நினைப்பதும் அவை குறித்த தர்க்கங்களும் பெருமைகளும் சண்டைகளும் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். அவைகளைவிட்டு விலகுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: