Tuesday, August 20, 2024

உடல்நோய் குணமாவதைவிட பாவமன்னிப்பே மேல்

'ஆதவன்' ஆகஸ்ட் 29, 2024. 💚வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,298 

"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 )

தேவன் எசேக்கியா ராஜாவின் நோயைக் குணமாக்கி அவரது வாழ்நாட்களை பதினைந்து ஆண்டுகள் நீட்டிக்கொடுத்தபோது எசேக்கியா எழுதிவைத்த வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  

இங்கு எசேக்கியா தனது நோய் குணமானதைவிட தேவன் தனது பாவங்களை மன்னித்ததையே முக்கியமாக கருதுகின்றார். எனவேதான் அவர் கூறுகின்றார், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." என்று. 

மனிதர்களுக்கும் தேவனுக்குமுள்ள முக்கிய வித்தியாச மனநிலையினை இந்த வசனத்தில் நாம் பார்க்கின்றோம். மனிதர்கள் நாம் ஒருவரை மன்னித்தாலும் அவர்கள்  நமக்கு எதிராகச் செய்த தவறையும் குற்றத்தையும் நாம் எளிதில் மறந்துவிடுவதில்லை. ஆனால் தேவன் அப்படியல்லாமல் நமது பாவங்களை மன்னிப்பதுடன் அவற்றை தனது  முதுகுக்குப் பின்னாக எறிந்து விடுகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவற்றை அவர் திரும்பிப் பார்க்கமாட்டார். 

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து எசேக்கியா கூறுகின்றார், இப்படிப் பாவங்களை மன்னிக்கும்  மகிமையான தேவனாக அவர் இருப்பதால் அவரது நாமத்தை நான் துதித்துக்கொண்டிருப்பேன். மட்டுமல்ல, இப்படிப் பாவ மன்னிப்பு பெற்றவன் எவனும்  தேவனுடைய இந்தச் சத்தியதைக்குறித்து தனது பிள்ளைகளுக்கும் தெரிவிப்பான் என்கின்றார்.  "பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18, 19 )

அன்பானவர்களே, தனது உடல்நோய் நீங்கியதைவிட பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டதையே மேன்மையாகக் கருதும் எசேக்கியாவைப்போல நாம் இருக்கின்றோமா?  

எசேக்கியா இப்படி பாவங்கள் மன்னிக்கப்பட்டதை மேன்மையாகக் கருத முக்கிய காரணமும் இன்றைய தியான வசனத்தில் உள்ளது. அதாவது உடல்நோய் இந்த உலகத்திலிருந்து நம்மைக் கொல்லலாம் ஆனால் பாவம் நமது ஆத்துமாவை நிரந்தரமாகக்  கொல்லும். அதனால் நித்திய நரகத்துக்கு நேராக நாம் செல்லவேண்டியிருக்கும்.  அதனையே அவர், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்" என்கின்றார். 

தேவன் நமது ஆத்துமாவை அழிவின் குழிக்குத் தப்புவிக்கவே நமது பாவங்களை மன்னிக்கின்றார். அதற்காகவே பரிகார பலியாக தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கின்றார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். ஆம் அன்பானவர்களே, அப்போது எசேக்கியா ராஜா குணமானதுபோல நமது உடல்நோய்களும் ஆத்தும பாவங்களும் கழுவப்படும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: