Tuesday, August 13, 2024

இடுக்கமான வாசல்

'ஆதவன்' ஆகஸ்ட் 19, 2025. திங்கள்கிழமை 💚            வேதாகமத் தியானம் - எண்:- 1,288   

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

மரித்தபின்பு நித்திய ஜீவனுக்குள் நுழையத் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே உலகினில் வாழும் ஒவ்வொருவரும்  செய்யவேண்டியது.  எல்லோருக்கும் அதில் நுழைந்திட ஆசைதான். ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று. 

அதற்கான காரணத்தையும் "அது இடுக்கமான வாசல்" வழியாக நுழையவேண்டிய அனுபவம் என்று இயேசு கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பவுல் அதனை, விசுவாசத்தின் அடிப்படையிலான போராட்டத்தின் வெற்றியின் மூலம்தான் அடையமுடியும் என்கின்றார். "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். " ( 1 தீமோத்தேயு 6 : 12 ) ஆனால் நித்திய ஜீவனை விரும்பும் பலரும் இப்படி விசுவாச போராட்டத்தினை விரும்புவதில்லை. 

உலக வாழ்க்கையினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவேண்டும்; தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கும் உலகத்திலுள்ள அனைத்து இன்ப பாவகாரியங்களையும்  அனுபவிக்கவேண்டும் இறுதியில் நித்தியஜீவனும் வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து கூறும் அந்த இடுக்கமான வாசல் இப்படி எல்லோரையும் நுழைய அனுமதிக்கும் வாசல் அல்ல. 

இப்படித் தங்களுக்கு  உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்தவர்கள் அதில் நுழைய முடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஆம் அன்பானவர்களே, "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று இயேசு கிறிஸ்து  குறிப்பிடும் இந்த அநேகர் பிரவேசிக்க வகை தேடினவர்கள்தான். ஆனால் அவர்கள் எப்படித் தேடினார்கள்? அவர்கள் நாம் மேலே பார்த்தபடி உலகத்துக்கும் தேவனுக்கும் பிரியமாக இருக்க முயன்று வழிதேடினார்கள்.  

நித்தியஜீவனுக்குச் செல்லும் பாதை குறுகியது. எல்லோரையும் அனுமதிக்கும் விசாலமான பாதையல்ல அது. எனவே அன்பானவர்களே, நாம் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி இயேசு கூறிய இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுவோம்.  போராட்டமில்லாமல் வெற்றியில்லை. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: