Saturday, August 17, 2024

என்னை மட்டாய்த் தாண்டியும்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 24, 2024. 💚சனிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,293 

"கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." ( எரேமியா 10 : 24 )

இன்றைய தியான வசனத்தில் எரேமியா தீர்க்கத்தரிசி தேவனுடைய தண்டனைக்குத் தன்னை ஒப்புவித்து ஜெபிக்கின்றார். "நீர் என்னைத் தாண்டியும் ஆனாலும் கடினமான தண்டனை தந்து என்னை அழிந்துவிடாமல் மட்டாய்த் தாண்டியும் என்கின்றார். 

நமது எண்ணங்கள், செயல்பாடுகள் வெற்றிபெறவேண்டுமானால் தேவனது கிருபை அவசியமாய் இருக்கின்றது. நமது வழிகள் நம்மால் ஆவதில்லை. நமது செயல்கள் அனைத்தும் நமது முயற்சியால் வெற்றிபெறுவதில்லை. அதற்கு தேவனுடைய கிருபை தேவையாய் இருக்கின்றது. இப்படி தேவனது கிருபையினைப் பெறுவதற்கு நமது பாவங்களும் தகாத செயல்பாடுகளும் தடையாக இருக்கின்றன. 

இப்படித் தனது செயல்பாடுகள் இருந்துவிடக் கூடாது அப்படி இருக்குமானால் அவற்றுக்கு மட்டான ஒரு தண்டனையினைத் தந்து எனது வழி வாய்க்கும்படிச் செய்யும் என்கின்றார் எரேமியா. இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் கூறுகின்றார்,  "கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்." ( எரேமியா 10 : 23 )

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் நமக்குத் துன்பங்கள் வருமானால் நாம் சோர்ந்துபோகக்கூடாது என்று நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். அத்தகைய துன்பங்கள்  "சிட்சை" அல்லது "தண்டனை"  என்று கூறப்பட்டுள்ளது. "அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 )

எனவே, இன்றைய தியான வசனத்தில் எரேமியா ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. காரணம், நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத பல செயல்பாடுகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளுக்கு தேவ மன்னிப்பு பெறும்போது மட்டுமே நமது வழிகள், நமது திட்டங்கள் தேவ கிருபையால் வெற்றிபெறும்.  "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." என்று வேண்டுதல் செய்து முதலில் தேவ மன்னிப்பைப் பெறுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: