இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, August 22, 2024

பூமியின்மேல் போடப்படும் அக்கினி

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 30, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,299 


"பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்." ( லுூக்கா 12 : 49 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அக்கினி அல்லது நெருப்பு பற்றி கூறுகின்றார். இந்த நெருப்பை பூமியில் போடவே தான் வந்திருப்பதாகக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறும் இந்த நெருப்புதான் என்ன? அது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. நெருப்புக்குள்ள குணங்களெல்லாம் ஆவியானவருக்கு உண்டு. அந்த நெருப்பு இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன் என்று இயேசு கூறுகின்றார். 

ஆனால் தொடர்ந்து, "ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்." ( லுூக்கா 12 : 50 ) என்றும் கூறுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவரை உலகில் அனுப்ப இயேசு  விரும்புகின்றார் ஆனால் அதற்குமுன் அவர் பாடுபட்டு மகிமையடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதுவே பிதாவின் சித்தம். அந்தப் பாடுகளையே  அவர்,  "நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு" என்கின்றார். 

கிறிஸ்துவின் பாடுகள் மரணம் வழியேதான் ஆவியானர் உலகிற்கு அனுப்பப்பட்டார். இதனை நாம் யோவான் நற்செய்தியில், "இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை." ( யோவான் 7 : 39 ) என்று வாசிப்பதால் அறிந்துகொள்ளலாம். 

இயேசு கிறிஸ்து கூறும் இந்த அக்கினி பாவத்தைச் சுட்டெரிக்கும் அக்கினி. தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களையும் உலகத்துக்கு ஒத்து வாழ்பவர்களையும் பிரிக்கும் அக்கினி. ஆம், ஒரே வீட்டில் வசித்தாலும் ஆவிக்குரியவர்களும் கிறிஸ்துவை அறியாத அதே வீட்டில் வசிப்பவர்களும் பல்வேறு விதங்களில் மனதளவில்  பிரிந்திருப்பர். இதனையே இயேசு கிறிஸ்து, "நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 12 : 51 ) என்கின்றார். 

"எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள்".  ( லுூக்கா 12 : 52, 53 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து பூமியில் போடும் அக்கினி இப்படிப் பிரிவினையுண்டாக்கும் அக்கினி. ஆனால் இந்தப் பிரிவினை நிரந்தரமானதல்ல. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கிறிஸ்துவை அறிந்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது இந்தப் பிரிவினை மறைந்துவிடும். கிறிஸ்து பூமியின்மேல் போடவந்த அக்கினியை கிறிஸ்துவை அறிவிப்பதன்மூலம் இன்று நாம் உலகத்தில் போடுகின்றோம். அந்த அக்கினி உலகினில் இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புவோம்; செயல்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

No comments: