Wednesday, August 07, 2024

சுதந்திரம்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 15, 2024. வியாழக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,284


"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

சுதந்திரம் என்பதற்குப் பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். பொதுவாக நாம் எண்ணியத்தைச் செய்யும் உரிமை நமக்கு இருக்குமானால் அதுவே சுதந்திரம் என்று பலரும் கூறுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துள்ளது. அந்த உரிமைகளில் பல நாம் ஆங்கிலேயரது ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதால் நமக்கு உரிமையானவை. 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நமக்குச் சில சுதந்திரங்கள் உண்டு. இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா, "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்." என்று கூறுகின்றார். அதாவது, நமது வீட்டில் நாம் அனுபவிப்பதுபோல கர்த்தரும் நம்மோடு இருந்து நம்மில் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்று பொருள். பாத்திரத்தின் பங்கு என்று கூறும்போது,  ஒரே வீட்டில் குடியிருப்போர் ஒரே பாத்திரத்தில் சமைத்துப் பங்கிட்டு உண்பதுபோல அனைத்துக் காரியங்களிலும் கர்த்தர் நம்மோடு குடியிருக்கும் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று பொருள். 

தாவீது கூறுவதுபோல நாம் கர்த்தரை நமது சுதந்திரத்தைக் காப்பவராகவும் நம்மோடு நமது வீட்டில் வசிப்பவராகவும் கருதிச் செயல்படுகின்றோமா?  சிந்தித்துப்பார்ப்போம். அப்படி இல்லையானால் இனியாவது அப்படி இருக்க முயற்சிச் செய்வோம். 

அடுத்து, "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" என்று கூறப்பட்டுள்ளது. ஆம் நமது நாட்டில் நமக்குள்ள உரிமைகளை தேவனே காப்பாற்றுகின்றார்.  கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழும்பியுள்ள பல்வேறு அமைப்புகளும் மக்களும் எந்த நாளைவிடவும் இப்போது அதிகம். ஆனால் அவர்களால் நமக்கு எதிராக முற்றிலுமாகச் செயல்படமுடிவதில்லை. காரணம், நமது சுதந்தரத்தை தேவனே காப்பாற்றுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இப்போது மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்கள் முதல் பல்வேறு அரசுக்கள், ராஜாக்கள் கிறிஸ்தவத்தை அழிக்க முயன்று ஆழிந்துபோயுள்ளனர். வேறு எந்த மதத்தையும்விட கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரிகள் அதிகம். ஆனாலும் இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்துகொண்டிருக்கிறது. காரணம், கர்த்தர்  நம் சுதந்தரத்தை காப்பாற்றுகிறார் என்பதால்தான். 

மேலும், பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதே வேதாகம அடிப்படையில் நாம் அடையும் ஆவிக்குரிய சுதந்திரம்.  நாம் பாவம் செய்யும்போது பாவத்துக்கு அடிமைகளாகின்றோம். பாவத்திலிருந்து முழு விடுதலை அளிக்கத்   தேவனது ஆவியினால்தான் முடியும். ஆம், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )

நாம் யாரை நம்முன்  வைத்துள்ளோம்? நமது குடும்பத்தில் கர்த்தரை ஒரு உறுப்பினராகக் கொண்டுள்ளோமா? பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட பரிசுத்த ஆவியானவர் நம்மில்  செயல்பட அனுமதிக்கின்றோமா? சிந்திப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: